Friday, February 10, 2017

பெண்கோள் பெற்றி .



நீலத்தில்  வெண்ணெயில் புரளும் நீலன் குருதியில் குளித்து நிற்கயில் எழும் விதிர்விதிர்ப்பு  பீமனை இன்று காண்கயில் எழுகிறது. 

உடலில்  தேன் வழிய நின்றவன். இன்று கீழுயிர்களின் நிணமும் சீழும் மூளைச் சதையும் உடலெல்லாம் வழிய நிற்கிறான். பார்த்தனே அஞ்சி நிற்கும் பேய்க்கோலம்.

//பீமன் “என் குலமகள்… என் குலமகள். நம் கைப்பிடித்தமைக்காக இன்னும் எத்தனை சிறுமைகளை சந்திப்பாள்? ஒட்டுமொத்த ஷத்ரியர்களை அழிக்கிறேன். மூடா, ஒட்டுமொத்த ஆண்குலத்தை அழிக்கிறேன். அழிக பாரதவர்ஷம், அழிக இப்புவி!” என்று வெறியெழுந்த கண்களில் வழிந்த கண்ணீருடன் இளித்த வாய்கொண்ட முகத்துடன் கூவினான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. நிணம் வழுக்கி உதிர்ந்தது.//

நூறு சதவீதம்  ஒரு கொல்லும் இயந்திரமாக இக் கணம்   நிற்கும் பீமனுக்காக ,அவன் இழந்துவிட்ட குறும்பு பொங்கும் குழந்தமைக்காக  உள்ளே எழும் துயரை நோக்கிக் கிடந்தேன். 

மூன்றாயிரம் ஆண்டுகள் அணல் அடங்காமல் கடந்து வந்து என்னைத் தீண்டும் துயர். பீமனுடையதும் கர்ணனுடையதும் என்பதை உணர்கையில்  உள்ளே ஏதேதோ பொங்குகிறது.

கடலூர் சீனு