Friday, November 4, 2016

படைக்கலங்கள்அன்புள்ள ஜெ வணக்கம். 

ஆறாவது படிக்கும்போது அரியலூர் அருகில் இருக்கும் கலியுக வரதராஜபெருமாள் என்னும் கலியபெருமாள்கோவிலில் ஏகாந்தம் இரவில்பார்த்துவிட்டு காலையில் குளக்கரையில் நின்றுப்பார்த்தால் எதிரே அரியலூர் சிமெண்ட் பேக்டரி புகைப்போக்கி கண்தொடும் தூரத்தில் தெரிகிறது. வா..வா.. என்கிறது “அட..இத்தனை கிட்டையா இருக்கு அரியலூர் சிமெண்ட் பேக்டரி“ என்று மனதில் ஆச்சர்யம் எழுந்ததும் அதைப்பார்க்க மாமா இருவருடன் நானும் நடக்கத்தொடங்கினேன். அறுவடை நடந்த புஞ்சைவயல் என்பதால் கண்போட்ட கோடுதான் கால்போகும் பாதை. 

நடக்கின்றோம் நடக்கின்றோம் நடக்கின்றோம்..சிமெண்ட்பேக்டரி புகைப்போக்கி இங்கதான் இருக்கிறேன் இங்குதான் இருக்கிறேன் என்று கண்முன்னே இருந்த இடத்தில்தான் இருக்கிறது கால்கள் ஒய்ந்துவிட்டது. திரும்பிப்பார்த்தால் நடந்துவந்ததூரம் திரும்பிவரமுடியாத தூரம் என்று காட்டுகின்றது. சரி நட..நட..நட காலை யாரோ பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். தலையில் யாரோ சுமையை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத கையொன்று சிமெண்ட்பாக்டரி புகைக்கூண்டை நகர்த்துவதே தெரியாமல் நகர்த்திக்கொண்டே இருக்கிறது, தினம்ஏழுமணிக்கே நிரம்பிவிடும் வயிறு இன்று வெறுமையில் இருந்ததால் நடக்க நடக்க குடலும் இல்லாமல் ஆகிவிட்டதுபோல் எரிகின்றது முன்னே செல் என்றால் கால் வலி என்கிறது. பின்னால் செல் என்றால் மனம் முடியாது என்கிறது. பேருந்து தடத்தை அடைவது என்றால் குறுக்குவழியல் இருந்து நேர்வழிக்கு எப்படி செல்வது? புத்தி பேதளிக்கிறது, எங்கே இருக்கிறது.. குறுக்குவழியே நேர்வழியைவிட நீள்வழியாக தெரிகிறது. எந்தப்பக்கம் சென்றாலும் பெரும்தவம்தான். எங்கு செல்ல நினைத்தோமோ அங்கேயே செல்வோம். அதுதான் இலக்கு வெற்றியும் கூட.  நடந்து நான்குமணிநேர பயணத்திற்குபின்பு அரியலூர் சிமெண்ட் பேக்டரியை அடைந்துவிட்டோம். உள்ளுக்குள் ஒரு பரவசம் சுமையை ஏற்றிக்கொண்டே இருந்த நடைப்பாதையில் இப்போது ஒரு மந்தமாருதம் உலவும் காட்சி. உயிர் மரங்களை வேலியாக விலங்குகளாக நறுக்கி விட்டிருக்கும் காட்சியை அங்குதான் முதலில் பார்த்தேன். நடந்தகாலுக்கு சீதேவி என்பார்கள். அங்கு சீதேவி காட்சியாக அருள்புரிந்தாள். அது விஷாதை விளையாடிய நாள். விஷாதை போர்புரிந்த நாள் என்றால் அது மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கோயிலுக்கு நடைப்பயணம் சென்ற நாள்தான். அதில் பைலன் நானே. ஒரு கிலோமீட்டர் தூரத்தை ஒருமணிக்கும்மேலாக நடக்கும்படி, நகரும்படி மிதித்தால். அன்று விஷாதை ஐந்துநாள் கழித்துதான் வாழ்த்தினாள். உண்மையில் அதுதான் வாழ்த்து. விஷாதை வாழ்த்தும் வாழ்த்துதான் வாழ்த்து. அது நமக்காக மட்டும் கிடைக்கும் வாழ்த்து. 

//“அது ஒரு தெய்வம்அவள் பெயர் விஷாதை” என்று சண்டன் சொன்னான். “மானுடரின் வெற்றிக்கணங்களுக்கு முன்பு அவள் அமர்ந்திருக்கிறாள்அவன் அணுகுவதைக் கண்டதும் வஞ்சப்புன்னகையுடன் தன் கைகளை விரித்து குறுக்கே நிற்கிறாள்உச்சிமலைப்பாறையைப் பற்றிஏறுபவனின் நெஞ்சில் கைவைத்து ஓங்கி  தள்ளுகிறாள்நுனிவிளிம்பைதொற்றிக்கொள்பவனின் தலையில் மிதிக்கிறாள்அவளைக் கடந்துசென்ற பின்திரும்பிப்பார்த்தால் அவள் நம்மை வாழ்த்துவது தெரியும்.”//

விஷாதை நடைப்பயணத்தின் முன்புதான் வஞ்சப்புன்னகையுடன் குறுக்கே கைவிரித்து நிற்கின்றாளா? இல்லை. வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு கணத்திலும் நிற்கின்றாள். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு படிநிலையிலும் நிற்கின்றாள். சிபி சக்கரவர்த்திக்கு புறாவிற்கும் பருந்துக்கும் இடையில் நின்றாள். அரிச்சந்திரனுக்கு கைவாளுக்கும் சந்திரமதியின் கழுத்துக்கும் இடையில் நின்றாள். மனுநீதிச்சோழனுக்கு மகனுக்கும் பசுவுக்கும் இடையில் நின்றாள். தசரதனுக்கு கைகேயிக்கும் ராமனுக்கும் இடையில் நின்றாள். திருநீலகண்டருக்கு அவருக்கும் அவர்மனைவிக்கும் நடுவிலேயே வந்து நின்றாள். பத்தாம்வகுப்புவரை வீட்டிலேயே இருந்துப்படித்துவிட்டு மேல்நிலை முதலாம் ஆண்டு விடுதியில் தங்கும் மாணவமாணவியருக்கு விடுதியல் வந்து நிற்கின்றாள். திருமணம் செய்துக்கொண்டு மனைவியை பிரிந்து வெளிநாடு செல்கையில் விமானநிலையத்தில் நிற்கிறாள். சொன்ன  சொல்முன் நிற்கின்றாள். செய்யும் செயல்முன் நிற்கி்ன்றாள், கட்டிவைத்திருக்கும் குணம்முன் நிற்கிறாள், வளர்த்து எடுத்த ஒழுக்கத்தின் முன்நிற்கிறாள்.அவள் நிற்காத இடம் ஏது?  அவள் எளிதாக யாரையம் வாழ்த்துவது இல்லை. அவள் நெஞ்சுடைக்காமல் தலைபிளக்காமல் தன் கண்ணீரை தானே குடிக்க வைக்காமல் யாரையும் அவள் முதுகு நோக்கி வாழ்த்துவது இல்லை. அவள் யார் முதுகு நோக்கி வாழ்த்துகிறாளோ அவன் நெஞ்சம் வைரத்தால் அணிசெய்யப்படுகிறது என்று பொருள். 

ஓலைச்சிலுவை சிறுகதையில் சாமர்வெல் போர்கலத்தை துறந்து மனித இனத்திற்கு சேவை செய்யவரும் இடத்தில் ஜெ ஒரு போர்வீரனின் ஒழுங்கை காட்டுவார். விஷாதைia வெல்லும் ஒருவனின் அமைதி எத்தகைய வல்லமை வாய்ந்தது. 

//முதல் உலகப்போரில் நடந்த சம்பவம். பிரான்ஸில் சோம்மே என்ற ஊரில் ஒரு போர்முனை. எழுநூறுபேருக்குமேல் படுகாயம் அடைந்து ஒரு பெரிய கொட்டகைக்குள் கொண்டு வந்து போடப்பட்டிருந்தார்கள். அங்கே இருந்தது சாமர்வெல் உட்பட நான்கே நான்கு மருத்துவர்கள். இரவெல்லாம் வெறிபிடித்தது போல சாமர்வெல் வேலைசெய்துகொண்டிருந்தார். பின்னிரவில் களைத்து சோர்ந்து ஒரு வீரனின் படுக்கையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டார். அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்.
சாமர்வெல் அங்கேயே மனம் பொங்கி கண்ணீர் மல்கிவிட்டார்.அந்த மாபெரும் ஆஸ்பத்திரி வார்டில் கிடந்தவர்களில் பாதிப்பேர் ஒருமணி நேரத்தில் மருத்துவ உதவிகிடைக்காவிட்டால் சாகக்கூடியவர்கள். கட்டில்களில் இருந்து வழிந்த குருதி உண்மையிலேயே ஓரமாக ஓடைபோல வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட தன்னை வரிசையை மீறி வந்து கவனிக்கவேண்டும் என்று கோரவில்லை. ஒருவர் கூட கெஞ்சவில்லை. ‘எத்தனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம்.// 


பழைய நினைவு எழுந்தால் ஆயாவின் நினைவு எழுகின்றது. அ ன்று கலியபெருமாள்கோவிலில் இருந்து மாலையில் வீட்டுக்குவந்து கால்வலியோடு வந்து அலுத்து உட்கார்ந்தபோது ஆயாள் “எனப்பா விடிய விடிய ஏகாந்தம்பார்க்க நின்னுகிட்டேயே இருந்தியா“ என்றார்கள். நடந்த கதையை சொன்னதும் ஆயாள் சிரித்துக்கொண்டே “கங்கண்ட்ரம்கோயிலைப்பார்த்து  கொழுவு சொறுவுண கதையால்ல இருக்கு“ என்றார்கள்.

அது என்ன கதாயா,? என்றேன். 

“ஒருத்தன்  புஞ்சை நிலத்தை பல்லுக்கலப்பையால் உழுதுபுட்டு, நாளைக்கும் ஏர் ஒட்டனுமுன்னு கலைப்பயில இருந்த கொழுவு எல்லாத்தையும் கழட்டி யாருக்கும் தெரியாம கிழக்கே தெரியும் கங்கண்ட்ரம் கோயிலை பார்த்து (கங்கைகொண்ட சோழபுரம் கோயில்)அடையாளமாக  புதைத்து வைத்தான். காலையில் வந்து கொழுவ எடுக்க  கங்கண்ட்ரம் கோயிலைப்பார்த்தா கொல்லை முழுவதும் கோயில் தெரியுது, பக்கத்துக்கொல்லைக்காரன் கொல்லையில் இருந்தும் கோயில் தெரியுது“ என்றது ஆயா. சிரித்தோம்.  


ராமராஜன் மாணிக்கவேல்