அன்புநிறை ஜெ,
சொல்வளர்காடு - பெயர் தன்னைத்தானே தீட்டிக் கொண்டதோ என்றே தோன்றுகிறது.
விதை என்யதே தன்னுள்ளடங்கிய விதைகளின் காடு. வளர்வதன் விழைவு
திரண்ட வடிவமாய் விதை - திரௌபதியின் விழைவும், இறுகிக் கொள்ளுதலும், அவள்
அணையாப் பெருந்தவமாய் காத்திருக்கும் விதை. வளர்வது தன்னறமென அடர்ந்தோங்கிய
பின்னும் வேறெங்கும் விலக முடியாத காடுகள் - பெருந்திறத்தாரெனப் பிறர்
வியக்க, தமதறத்தால் கட்டுண்ட பாண்டவ வீரர்கள். இப்படித்தான் தோன்றுகிறது.
சொல் - மந்திரம் போல் வரும் சொல்- வளர்வதன் பின்னரும்
விதைநெல்லாக நிற்கும் சொல்; எத்தனை பெருந்தவிப்பு!! ஆதிச்சுழியின் அத்தனை
விசையும் இச்சொற்களின் பெருந்தவிப்பில் தெரிகிறது.
விண்ணிழுந்து வந்த மாறாச் சொல், முளைத்தபின்னும் கரு அழியாத
விதையாகிய சொல், பழுதிலாச் சொல், பிறிதிலாச் சொல், வெல்லும் பிறதொரு
சொல்லின்மையால் சொன்னவனையே வெல்லும் சொல், அறியுந்தோறும் இனிக்கும் எனினும்
முழுதறியவொண்ணாத சொல், பொருளெனத் திரளாத இயற்கையின் சொல், நானென முளைத்து
நாமென முகிழ்த்த சொல். சொல்லின் முடிவிலாப் பெருக்குகள்!! சொற்களின் முன்
சொல் மறையும் மாயம்.
காடு விதைகளின் மறுகணமா முதற்கணமா? விளங்குவதாய் மயங்குகிறது.
அறியக்கூடுவதில்லை என்ற முதல் அறிவை விதையாகக் கொண்டு வளரும்
காடு, ஏதோ ஒரு சிறு அறிதலை நிழலெனக் காட்டும் மயக்கு! - அறிதல் என்ற
உணர்வெழும் கணத்தில் அவ்வறிவாலேயே சிறைப்படுத்தும் காடு. பயணத்தின்
எல்லையில் காத்திருப்பது அறியமுடியாமை என்பதால் பயணம் பயனில்லையென மயக்கி,
தொடங்கிய பின் நிறுத்தவியலாத தருண விசையால் மேற்செல்ல, அறிந்ததைக் கடத்தலே
பயணம் எனக் காட்டின் இலைஅடர்வில் ஓர் ஒளி!!
அழியாது நிற்கும் இந்த சொற்கள். அழியாததொன்று தன்னை
வெளிப்படுத்தும் கருவிகளை, ஈசல்கள் வகுத்துணர முடியாது. வாசிப்பில்
திறக்கும் பெருவாயில்களின் வழி மேற்செல்லும் இப்பயணம். எனில் எழுத்தின்
மாயவசீகரத்திலிருந்து விடுபட்டு, உணரும் தருணம் எதுவெனத் தெரியவில்லை.
மாற்றம் நிகழ்கிறதா? மூச்சு விடுவதுபோல, மலர்விரிவது போல இயல்பாக நிகழும்
எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏதும் உணரவில்லையெனினும், அதே நிலைதான் -
பாறையைக் கடக்கும் காற்றுதான். காலம்தான் சாட்சி உறைக்கும்.
இப்பயணம் தொடங்கிய நாள்முதல் இடையறாது மனம் கேள்விகள்
எழுப்புவதும், ஓரிரு நாட்களுக்குள் விடை அடுத்த பதிவில் காத்திருப்பதும் பல
தருணங்களில் நிகழ்ந்ததுண்டு. சில வரிகள் வாசிப்பதன் சில நிமிடங்கள்
முன்னதாக அதே கருத்தை மனம் தொட்டெடுப்பதும் பலமுறை நிகழ்ந்ததுண்டு.
தங்களை நேரில் காணக் கிடைத்ததும் பேசக் கிடைத்ததும் தவமொன்றின் விளைவு எனில் தவத்தின் மேல் உறுதி மேலிடுகிறது.
அழியாதது சொல். அதைக் காலத்தில் கடத்தும் சரடுகள் ஆசிரியர்கள்
எனத் தாங்கள் கூறியது உள்ளே ஒலிக்கிறது. சொல்வளர்காட்டின் உள்ளுறை ஞானம்
ஆயிரமாண்டுகள் கடந்து இன்னும் சரடுகள் வழியே தொடர்ந்து இந்த தருணம் வரை
சென்றடைந்துகொண்டிருக்கிறது.
இது தொடரும். ஆலமர்ந்த ஆசிரியத்தொகையின் முன் முழு அர்ப்பணிப்புடன் அடிபணிகிறேன்.
மிக்க அன்புடன்,
சுபா
சுபா