Monday, September 26, 2016

வண்டு


மொத்த வெண்முரசிலும் சில நாள் வாழும்படி கோருகிறேன் என்று நீங்கள்  வாழ்த்திய பிறகு நிஜமாலுமே,வெண்முரசு தவிர வேறு எதுவும் படிக்க இயலாமல் போயிற்று. தெய்வ மிருகம், கலைக்கணம் ஆகியவை மட்டுமே ,வெண்முரசை தாண்டி படித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்! என்னுடைய ஓய்வு நேரம், படிக்கலாம் என்று தோன்றும் நேரம் முழுவதும் நீங்களே ஆக்கிரமித்துக் கொண்டீர்கள் என்றே சொல்லலாம். வெண்முரசு என்னுடைய துணையாக மாறிப் போனது.

இப்போது "இந்திர நீலம்" படித்துக் கொண்டிருந்தாலும் கர்ணனின் தொடையை வண்டு துளைத்த பகுதியை "பிரயாகை"யில் படித்த பிறகு, எழுதத் தோன்றியதுதான், என்னுடைய இந்த பகிர்வுக்கு காரணம்!

வலியை இம்மாதிரி உணர்ந்து எழுதுவது "காட்சிப் படுத்துவதை"தோற்கடிக்க முடியும் என்பதை கண்கூடாக உங்கள் எழுத்துக்களில் இருந்தே தெரிந்து கொண்டேன். மஹாபாரதத்தை நீங்கள் உங்கள் கற்பனையோடு இயைந்து எழுதினாலும், இதுநாள் வரை கேட்ட கதையை தாண்டி நீங்கள் எழுத முடியாத வரைமுறை அவ்வப்போது உங்களை மிகுந்த கட்டுப் பாட்டுக்கு உள்ளாக்கும் என்று உணர முடிகிறது. அந்த சமயத்திலும் வண்டு வரும் பாதையின் குறுக்காக கர்ணன் தொடை மறைத்துக் கொண்டிருந்த போது, வந்து துளைக்க எதுவாக இருக்கிறது, என்கிற அந்த கற்பனையின் ஆரம்ப சரடு திகைக்க வைக்கிறது.மேலும் வலியை இம்மாதிரி விரும்பி உணர்ந்து கர்ணன், துரியனிடம் கூறுவதாக எழுதியிருப்பது எழுத்தின் முலமாக காட்சிப் படுத்துவதின் உச்சக்கட்டம் என்று தோன்றுகிறது!

வலியை விரும்பி ஏற்ற தருணம் எனக்கும் வாய்த்தது..

பதினைந்து வருடங்களுக்கு முன் நாகர்கோயிலிருந்து பாசஞ்சர் ரயில் வண்டியில் மதுரைக்கு இரவு 10.30 மணிக்கு ஏறியபோது, ஜன நெருக்கடி மிகவும் குறைவாய் இருந்தது ஒரு திகிலை ஏற்படுத்தினாலும், அந்தத் தனிமையை விரும்பி ஏற்றிருக்கிறேன். என்னுடைய பகுதியில் யாருமே இல்லை....விளக்குகள் எரியவில்லை..விசிறிகளில் பேனாவைக் கொண்டு சுழற்றியும் ஓடாததால் மின்சாரம் இல்லை என்று தெரிந்துகொண்டேன்..ரயில் கிளம்பியதும் குளிர் அதிகமாக, அதே சமயத்தில் அந்த குளிரை அனுபவிக்க, இருளில் தடவி கண்ணாடி ஜன்னலைத் தாண்டி, வரிகளுடன் கூடிய ஷட்டரை நகர்த்தியபோது, எனது வலது கை விரல்களின் மேல் விழுந்துவிட்டது! வலியின் உச்சக்கட்டத்தில் விரல்கள் மறத்து போனவுடன், விரல்கள் துண்டாகிவிட்டன போலும் என்று நினைத்துக் கொண்டு, சிரமப்பட்டு இடது கையில் தூக்கியபோது வலி படிப்படியாக நகரத் துவங்கியதும்,நான் வலது மோதிர விரலில் அணிந்திருந்த மோதிரம் காரணமாக என் விரல்கள் துண்டாகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.  விரல்களில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றால் தான் ஆச்சரியம்! அந்த இரவு வேலையில் ரயிலை நிறுத்தி மருத்துவரை அணுகுவதற்கு பதிலாக வலியைத் தாங்கிக் கொண்டு அதிகாலை மதுரை அடைந்த பிறகு மருத்துவரை சந்திக்கலாம் என்று உறுதி பூண்டு அமைதியாக அமர்ந்துவிட்டேன்!

என் நண்பர்கள் காலையில் என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும் வரை ஒவ்வொரு நொடியும் நான் வலியில் திளைத்தது இன்னும் நினைவிருக்கிறது.வியர்வை ஆறாகவும், சில சமயத்தில் கழுத்து வழியாக முதுகினூடே ஒரு கோடாக இறங்கியதும், சில சமயம் மூச்சுத்திணறல் அதிகமாகியதும் இப்பகுதியை நான் உங்களுக்கு எழுதும்போதும் உணர முடிகிறது. வலியைத் தாண்டிய களைப்பில் மார்பின் மேல் விரல்களை சிறிது நேரம் அயர்ந்து உறங்கி விட்டேன்!

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, சுவர்ண மோதிரம் போயிற்றே! என்று உரையாடிக் கொண்டிருந்தபோது...இல்லை அந்த வலியிலும், இருட்டிலும், ஷட்டர் விழுந்த வேகத்தில், தெறித்துப் போன மோதிரத்தையும், விலை உயர்ந்த மரகதக் கல்லையும்  தேடி எடுத்துவிட்டேன் என்று சொன்னபோது நண்பர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

மேலும் அந்த மோதிரம் என் பாட்டியின் "மோதிரம்"! கல் வைத்த மோதிரமாக எனக்கு என் பாட்டனாரால் பரிசளிக்கப் பட்டிருந்தது

என் தந்தையிடம் நான் பகிர்ந்து கொண்டபோது உணர்ந்த பரவசமும், வலியும் கர்ணனின் அனுபவத்தை உங்கள் எழுத்துக்கள் முலமாக படித்தபோது மீண்டும் உணர்ந்தேன். விரல்களில் எலும்பு முறிவின் காரணமாக வாய்த்த கோணலும், விரல் மடக்கும் போது ஒவ்வொரு முறையும் உணரும் வலியும் எனக்கு இன்னுமொரு நினைவுக் கோவையை பரிசளித்துள்ளது.

பாஞ்சாலியை பாண்டவர்கள் ஐவரும் எவ்வாறு ஏற்கிறார்கள்? அவர்களுடைய மணவாழ்க்கை, பாஞ்சாலியுடனான முதல் இரவுகள் அவர்கள் இயல்பு படி அமைவதும், பீமன்,அர்ஜுனன்,ஆகியோருடன் திரௌபதியின் கூடல் கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், நாகரீகமான எழுத்தின் சிகரம்!

ஏழு அன்னையர்கள், கூர்ஜரம்,பால்ஹிகர்கள்சேதி நாடு, போன்றவற்றில் எனக்கு இருக்கும் சந்தேகங்களை, இந்த வருடம் டிசம்பர், விஷ்ணுபுரம் சந்திப்பு, கோவை ராஜஸ்தானி சங் கூட்டத்தில் உரையாடுவதற்காக சேமித்து வைத்திருக்கிறேன்

உங்கள் அன்புள்ள 
சுந்தர்.