Monday, September 5, 2016

பெருவாயில்




அன்புடன் ஆசிரியருக்கு

நேற்றுதான் வெண்முகில் நகரம் மீண்டும் வாசித்து முடித்தேன். வெண்முரசு நாவல் வரிசையில் அதீத அரசியல் அழுத்தம் கொண்ட நாவலாக ஒரு தோற்றமும் அதே நேரம் மனதின் மிக மென்மையாக பகுதிகளை தீண்டுவதாகவும் இருந்தது. வெண்முகில் நகரத்தில் கிருஷ்ணனின் அத்தியாயங்களை வாசித்துக் கொண்டிருந்த போது சொல்வளர்காட்டிலும் இளைய யாதவர் அறிமுகமாகிறார். இரு நாவலிலும் அவரின் ஆளுமைகளுக்கு இடையேயான ஒருமையும் அனுபவமும் முதிர்ச்சியும் அவர் முடிவுகளில் உருவாக்கும் கூர்மையும் வியக்க வைக்கின்றன. மகாபாரதத்தை தொலைத்தொடராகவும் சிறுவர் கதைகளாகவும் மட்டுமே அறிந்திருந்ததால் வெண்முரசின் அரசியல் களம் முற்றிலும் எனக்குப் புதியது.

துவாரகை குறித்தும் பெரு வாயில் குறித்தும் விரிவான விவரிப்புகள் வெண்முகில் நகரத்தில் இடம்பெற்றிருக்கும். பெருவாயில் குறித்த ஒரு மனச்சித்திரம் உருவாகி இருந்தது. அதனை சிறுத்துப் போகச் செய்யும் விதத்தில் இருந்தது இன்றைய சொல்வளர்காடு அத்தியாயத்தில் இடம்பெற்ற ஷண்முகவேல் அவர்களின் ஓவியம். இதுவரை வெளிவந்த ஓவியங்களில் இன்றைய "பெருவாயிலே" எனக்கு மிக அண்மையானதாக இருக்குமென எண்ணுகிறேன்.
நன்றி
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்