Saturday, September 17, 2016

சொல்வளர்க்காடு




அன்புள்ள ஜெ. 

வெண்முரசு நூல் வரிசையில் சொல்வளர்க்காடு ஒரு மணிமகுடம். உணர்வு முப்பட்டகத்தில் சொற்கள் என்னும் வெள்ளொளி சிதறடிக்கப்படும்போது தோன்றும் வர்ணஜால இந்திரவில் நீலம் என்றால்,  அறிவென்னும் முப்படகத்தில் நிறபிரிகை அடைந்த சொல்லென்னும் வண்ண ஒளிக்கற்றையை செலுத்தும்போது தோன்றும் நிறமற்ற ஒளிக்கற்றை சொல்வளர்க்காடு. அனைத்து வண்ணஒளிப்பிரிகையையும் ஒன்றாக்கி நிறமற்றதாகி நின்று உள்ளதை உள்ளபடி காணவைக்கிறது.

கதையே இல்லாமல் ஒரு கதையை உருவாக்கவும் அதன்  நாயகன் தன்னிகர் அற்ற நாயகனாக திகழ முடியும் என்றால் அது சொல்வளர்க்காடும், சொல்வளர்க்காட்டின் நாயகன் தருமனும்தான். சொல்வளர்காட்டில் இருந்து ஒரு கனி உருவாகுகின்றது அது யுதிஷ்டிரன் என்னும் தருமன் எப்படி தருமர் என்று கனிகின்றார் என்பதின் கதை இது.

மனிதன் உலகுக்கு தன்னை நிருபிக்க துடிக்கின்றான். உலகம் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை நிருபித்துக்கொண்டும் இருக்கிறது. மனிதன் உலகுக்கு தன்னை நிருபிக்க பயன்படுத்தும் முன் வழி சொற்கள்தான். வாழ்த்தும் வசையும், புகழும் இகழும் இந்த மண்ணில் சொல்லாகிப்பெருகிக்கிடப்பது அதனால்தான். 

கண் காது மூக்கு செவி உடல் என்ற ஐந்துப்புலக்களும் மற்றும் மனம் என்னும் நுண்புலனும் சேர்ந்து இந்த நிருபித்தலில் பெரும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் வெல்வது ஒருவகை வெற்றிதான் என்றாலும் இந்தப்போட்டியின் உண்மைத்தன்மை என்பது வென்றாலும் அமைதி இன்மைதான் என்பதை கண்டுக்கொள்ளும் மானிட மனம் இதையும் தாண்டி ஒரு பெரும்வேள்வியை நோக்கி தன்னைத்தள்ளுகின்றது. அந்த வேள்வியில் தன்னை ஆகுதியாக்கி மீளும் ஒருவன் தருமன் ஆகின்றான். மகிழ்சியும் அமைதி இன்மைதான் என்பதை அறியும் இடத்தில் தருமன் உலகையே வெல்கின்றான். அமைதி என்பது அமைதியென்றும் உணரப்படாத நிலை என்னும் இடத்தில் தன்னையே வெல்கிறான். 

தன்னை முழுவதும் எரித்து சாம்பலாக்கி முக்தியில் கரையாமல் தன்னை சரியாக எரித்து அதாவது சமைத்து அமுதமென திரும்பி வரும் நிலையில் அமையும் தர்மனின் பாத்திரம் நிச்சயம் ஒரு எளிய மானிடனை பெரும் முக்திநிலைக்கு கொண்டு செல்லும்வழி உடையது. சொல்வளர்க்காட்டின் மூலம் ஒரு மகா மார்க்கம் காட்டுகின்றீர்கள். நன்றி.

காமக்குரோதமோகலோமதமாச்சர்ய சூழலில் சிக்கி விழைவால் தூண்டப்பட்டு மானிட அகம் செய்யும் செயல்கள் அனைத்தும் மனிதனை சூதுகளத்தில் நிறுத்தி இறந்தவன் என்றே ஆக்கி நாடுகடத்தி விடுகின்றது.

இறந்தும் இறக்கமுடியாமல் ஆன்மா உடல்சிறையில் படும்பாடு, அதன் தனியா விடாய் சொல்லுதற்கும் அரிய துன்பம் உடையது. ஆன்மாவின் விடாய் தீர இங்கு எத்தனை எத்தனை சொல்நதிகள் பாய்கின்றன. முழுநதியம் குடித்தும் விடாய் தீர்ந்துவிடுவதில்லை. மாறாக கடல்நீரைக்குடிப்பவன் தாகம் பெருகுவதுபோல சொல்நதியை குடிப்பவன் விடாய் தீருவதே இல்லை.விடாயில் இருந்து விடாய் என்று அவனை நாக்கு தொங்க தொங்க அலையவைக்கிறது. 

கந்தமாதனம் செல்லும் தருமன் தன்விடாய் தீர சொல்நதியை குடிப்பதை விடுத்து இறுதியில் சொல்துளியையும் விட்டு வெளியேறி விடாயை வெல்கின்றான். அங்கிருந்து எரிமலைக்கண்டு புலன்களை எரித்து தன்னையும் எரித்து மீள்கின்றான்.

கனகந்திரள் கின்ற பெருங்கிரி
தனில்வந்து தகன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை எறிந்திடு…கதியோனே-என்னும் திருப்புகழில் அருணகிரிநாதசுவாமிகள் எம்பெருமான் முருகனை

அனகன் பெயர் நின்றுருளும் திரி
புரமும்திரி வென்றிட இன்புடன்
அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே என்கின்றார்.


இன்று தருமனே இன்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வனாக வந்து நம் முன் நிற்கிறார்.

தருமன் அழல் உருவாக நின்ற அண்ணாமலைதீபத்தைக்கண்டு அதில் எரிந்து தனக்குள் அண்ணாமலையை எழுந்தருளசெய்து இன்று நம்முன் வந்து நிற்கும்போது  “ஞான தபோவனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலை“ என்பதை கண்முன் காணமுடிந்தது.

பரமஹம்சர்கள் குழந்தையின் மனநிலையுடைவர்கள்.  பரமஹம்சநிலையை அடைந்த மாமுனிகள் உலகுக்கு போதிக்க தனது பரமஹம்சநிலையில் இருந்து கீழே இறங்கி வந்து எளியமனிதர்களாக வாழ்கிறார்கள் என்று குருதேவர் பகவான்  ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கின்றார். தருமன் தனது பரமஹம்சநிலையில் சிறுகுழந்தையாகிவிளையாடி மகிழ்ந்து இருக்கிறார். அவர் எந்த கணமும் இந்த உலகை விட்டு வெளியேறிவிடலாம் ஆனால் இந்த உலகுக்கு போதிக்க தருமன் என்றபெயரோடு நிற்கின்றார். அட்சயப்பாத்திரமாகி நிற்கின்றார்.

 இன்று இது அன்னம்குறையாக் கலம்.”

மனிதன் ஒரு மண்குடம்.

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'

மனித மண்குடத்தில்  பெரும்பாலும்  உடைந்து வரகோட்டு சட்டியாகக்கூட முடியாமல் வெறும் சில்லிகளாக குவிபவைதான் உலகம் கண்டு இருக்கிறது அதில் ஒரு மண்சட்டியை அட்சயப்பாத்திரமாக அழகாக வளரச் செய்திருக்கிறீர்கள். சொல்வளர்க்காடு எனக்கே எனக்கான நூல் என்று மனம் சொல்கிறது. இப்படித்தான் எல்லா மானிட மனங்களும் சொல்லும் என்பது தெ்ரியும். 

//“மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் இரக்கத்திற்குரியவர்கள்” என்றான். நகுலன் அவன் சொன்னதை விளங்காமல் கேட்டுவிட்டு “ஆனால் அத்தனை மானுடரும் மானுடருக்குரிய எல்லைகளை மீறுவதற்காகத்தானே முயன்றுகொண்டிருக்கிறார்கள்? //  .

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.