ஜெ
நீங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவிச்செல்வதனால் இயல்பாகவே இந்த நாவல்களுக்கு ஓர் யூனிட்டி அமைந்துவிடுகிறது. சொல்வளர்காடுதான் யூனிட்டி அமைவதற்கு மிகமிகக்கடினமான நாவல். ஏனென்றால் இதில் ஒரே கதையாக ஓட்டம் இல்லை. ஆனால் உள்ளார்ந்த தத்துவம் வழியாக ஒரு ஓட்டம் உருவாகி வந்துள்ளது
மாந்தாதா கதையிலிருந்து ஆரம்பிக்கிறது உச்சகட்டம். என்னை உண் என்று சொல்பவனாக மாறுகிறான் தருமன். சமைத்து பரிமாறுகிறான். தன்னையே சமைத்து உலகின் பசிக்குக் கொடுக்க முயலும்போது அவன் தவம் நிறைவுபெறுகிறது
நம் மரபில் எல்லா தவங்களும் உச்சகட்ட தியாகத்தில்தான் முடிவுகொள்கின்றன. தன்னைப் பலியிடுவதே தவம். ஏதாவது ஒன்றின்முன்னால் தன்னை உருக்கி அப்படியே சமர்ப்பிப்பது. தருமன் பசிதேவனின் முன் அப்படிச் சமர்ப்பிக்கிறான்
அந்த ஞானத்தை அவன் அடுமனையில் அடைந்திருக்கிறான். அடுமனையைப்புரிந்துகொள்வதற்கான ஞானத்தைத்தான் படிப்படியாக நாவல் முழுக்க இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறான்
மகாதேவன்