Friday, September 16, 2016

யோகப்பெருவெள்ளம்

 
 
ஜெ,
 
 முதலில் தருமன் சென்ற காடுகளில் எல்லாம் அரசனின் அறம், விழைவே இயல்பு என்பதே செயலாற்றுவதற்கான காரணமாக உரைக்கப்படுகிறது. வெறும் விழைவு எங்கே செல்லும் என்றும், விழைவற்ற செயல் மட்டுமே எவ்விதம் விடுதலை ஆகும் என்று உரைக்கிறார் அருகர். பத்ரர் சென்று அடைந்த இடத்தைக் குறித்து தருமன் கிருஷ்ணனிடம், "அத்தனை கற்றும் தெளிந்தும் சென்றடையக்கூடிய இடம் அந்தக் கடுங்கசப்பின் பீடம்தானா?” என்று கேட்கிறார். பத்ரரின் செயல் தனிக் கிணற்றின் ஞானத்திலிருந்து விளைவது. ஞானத்தை, அதிலிருந்து விளையும் அகங்காரத்தை, விழைவை என அனைத்தையும் மறந்து, செயலாற்றுவதன் இன்பத்திற்காகவே செய்யும் செயலிலிருந்து விளையும் ஞானத்தையே யோகம் என்கிறான் கிருஷ்ணன். யோகமாகாத ஞானம்தான் கசப்பாகிறது. விழைவிலிருந்து பொருளின்மையின் துயருக்கு செல்லும் கதை சோமகன் கதை

இவற்றை எல்லாம் தாண்டி ஓளிரும் இடம் "செயல் எப்பொழுது யோகமாக ஆகிறது" (அவர் கன்றோட்டுகையில் ஞானி. வேதமேடையில் கன்றோட்டி) என்பதை காட்டும் மைத்ராயணீய அத்தியாயங்கள். உணவிலிருந்து சுவைக்கு, சுவையிலிருந்து அறிதலுக்கு செல்லும் பாதை, காமத்திலிருந்து கனிவுக்கு (சதரூபை) போகும் பாதை. ஒவ்வொரு முறையும் செல்வது எங்கு என்று தெரிந்து சென்ற தருமன் இப்பொழுது அறியாத ஒன்றை நோக்கி செல்கிறான், அங்கு அவன் அதை கண்டடையக் கூடும். 

காமதேனுவை பால் கறக்கவென்று வைத்திருப்பதிலிருந்து அனைத்து பசுக்களிடமிருந்தும் காமதேனுவை சென்று சேரும் வழியென்றே “வேண்டுபவர்கள் வேட்கலாம். பெற்று நிறையலாம். வேள்வி பிழையென்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அது இகம். வேதம் பரத்திற்கும் உரியது என்று மட்டுமே சொல்கிறேன்" என்ற இந்தக் கூற்றையும் மைத்ராயணீயத்தையும் புரிந்து கொள்கிறேன். அந்த தனிக் கிணறுகளை உடைத்து பெருவெள்ளத்தோடு ஒன்றாதல் இதுதான். அதை செய்ய கொஞ்சம் அராஜகம் தேவைப்படுகிறது, ஆகவே கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள். you have to use and abuse the language to create என்று சொல்லும் தத்துவ ஞானிக்கு வேதமும் கூட புனிதமென்று இல்லை. இந்த அத்தியாயங்களை படிப்பது ஒரு பரவசம். .

பாதி நாவலில் இப்படியாக இவற்றை புரிந்து கொள்வது எவ்வளவு சரியென்று தெரியவில்லை. இன்று காலையில் எழுந்ததும் எங்கிருந்தோ சமையல் குறித்த அத்தியாயமும், அதைத் தொடர்ந்து உங்கள் கீதை உரையில் வரும் "யோகத்திலமர்ந்த கிருஷ்ணனும், வில்லேந்திய பார்த்தனும்" என்ற வரி ஒரு அலை போல வந்து அடித்ததில் மொத்த சொல்வளர் காடும் இப்படி கோர்த்துக் கொண்டதாக தோன்றியது. வெண்முரசின் அளவும், நுட்பங்களும்  எல்லையற்றதாக இருப்பதால் அவ்வவ்போழுது இப்படி தொகுத்துக் கொள்ளாமலிருந்தால், மைய தரிசனம் தவறி நுட்பங்களை பார்த்து நிற்பதாக ஆகிவிடுகிறது. 

‘எங்கு
யோகத்திலமர்ந்த கிருஷ்ணனும்
வில்லேந்திய பார்த்தனும்
இணைகிறார்களோ அங்கு
மங்கலங்களும்
வெற்றியும் வளமும்
நிலைபெறு நீதியும்
என்றுமிருக்கும்
என்று உறுதி கூறுகிறேன்.’
 
ஏ.வி.மணிகண்டன்