Sunday, September 18, 2016

அழலை அறிதல்

இனிய ஜெயம்,


சிங்கையில்  ஆசிரியராக பணியேற்று அதை நிறைவு செய்யும் காலக் கெடுவுக்குள், ஆசிரியர்கள் குறித்த நாவல் ஒன்றினை எழுதி முடித்திருக்கிறீர்கள்.  ஆழத்தில் நீங்கள் மிக மிக நிறைவு எய்ததும் தருணம் இது என அறிகிறேன்.   இந்த நாவல் முடிந்த தருணம் நான் அடைந்த உணர்வை இந்த இரு நாட்களுக்குப் பிறகு  திட்டவட்டமாக சொல்லவேண்டும் என்றால் அதை ''தன்னம்பிக்கை'' என்றே வகுத்துச் சொல்லத் தோன்றுகிறது. ஆம் இதுவும் கடந்து போகும் எனும் சொல் வீணர்களுக்கு உரைக்கப்பட்டது.  ''இதையும் கடந்து போ'' இதுவே ஷாத்ரம் கொண்டோர் கைக்கொள்வது.  சொல்வளர்காடு  தர்மன் ''எதை''  அறிவதன் வழியாக அதை கடந்து செல்கிறான் என்ற புள்ளியில் மையம் கொண்டு உணர்சிகரமான மானுட நாடகத்தை விரிவாக சித்தரிக்கிறது.

நாவலின் முக்கிய தருணம் [இது இவ்வாறுதான் நிகழும் ,வேறு விதமாக நிகழ வாய்ப்பே இல்லை என்பதான தருணம்] கணிகரின் சொல்லில் துவங்குகிறது. முன்பொரு தருணம், அரசியல் மந்தணம் சூழும் சமயம்,  அந்த சபைக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத கணிகரை வெளியேறச் சொல்கிறார் திருதா. சபையின் மொத்த பார்வைகளையும்  சுமந்து தள்ளாடி தள்ளாடி தன்னை இழுத்தபடி சென்று மறைகிறார் கனிகர். இன்று திருதா தனது தூதுவனாக யுயுத்சுவை கனிகர் வசம் அனுப்புகிறார்.  அன்று சபையில் மட்டுமல்ல இன்றும் ஹச்தினாபுரி உறவுகளுடனும் அரசியலுடனும் எந்த சம்பந்தமும் இல்லாத கணிகர் பாண்டவர்களுக்கு வனவாசம் அளிக்கிறார்.  அத்தனை கணக்குகளுக்குப் பிறகும் அது கணிகரின் சொல்தான்.


//தயங்கவைப்பது இரக்கமென்றால் அது இழிந்ததே. அஞ்சவைப்பது அறக்குழப்பம் என்றால் அது பழிகொணர்வதே. பின்நோக்கச் செய்வது அன்பு என்றால் அது வெறுக்கத்தக்கதே.”//

//“வெல்க! அடைக! நிறைக!//

//ஆற்றவேண்டியதை ஆற்றியபின் அனைத்தையும் துறந்து அகம்நோக்கி அமர்ந்து உதிர்க!//

இவை அனைத்தும் சுனக வனத்தில் சௌநகர் தர்மனுக்கு உரைக்கும்  சில சொற்கள்.   இதேதான் சகுனி அவனது செயல்கள் கண்டு திகைத்து நிற்கும் விதுரன் வசம் சொல்கிறான்.   இத்தனை வழியாகவும் சகுனி செய்த பயணம் இங்கே  அதன் இலக்கை எய்துகிறது

//எரி விறகை அணுகுவதைப்போல சென்றாய் என்றால் அத்துயர் உன்னுடையதல்ல//

சௌநகர் எதை உரைக்கிராரோ, அதையே சகுனி தனது பன்னிரு படைக்களப் பாய்ச்சிகைகள் தழலில் வெந்து தனிவதைக் காண்கையில் எய்துகிறான்.   இக் கணம் தொட்டு சகுனியும் ஒரு கர்ம யோகியே. கிருஷ்ணனுடன் சதுரங்கம் ஆடியவன் இவ்வாறுதானே அமைய முடியும்?

கான் புக  தர்மன் குந்தி வசம் ஆசி வாங்க வருகையில், குந்தி அத் தருணத்தை தன்னை அறிவதன் வழியாகவே அதற்க்கான பொறுப்பை ஏற்கிறாள் அதன் வழி கடக்கிறாள். ''ஆம் இது அனைத்துக்கும், நானே துவக்கம், நானே காரணம்'' என்று முதன் முறையாக தனது விழைவின்  விளைவைக்ண்டு கூறுகிறாள்.

தந்தையைக் கொன்றாலும் சரி, முனி சாபம் வந்து எரித்தாலும் சரி, இனி என் நிலையிலும் பின் வாங்கல் இல்லை என துரியன் முற்றிலும் வைரம் போல உறுதி கொள்கிறான். இனி அவனுக்கு தொடை பிளந்து இறக்கப் போகும் கணம் வரை ஊசலாட்டம் இல்லை.  தான் இன்னது செய்கிறோம் என்பதை தன்னரமாக அன்றி வஞ்சமாக அடைகிறான் துரியன்.  ஆணி மாண்டவ்யருக்கு ஒரே கழு, அவரின் பிரதியான பீஷ்மருக்கு அது போல் பல நூறு கழு.  புழுக்களை சிம்மங்கள் கொல்லுவதில்லை.  சபிக்கும். //இந்த இழிவின் பொருட்டு தெய்வங்கள் உன்னை கைவிடுக//  .கர்ணனை கரல் உடைந்து தழுதழுக்க சபிக்கிறார் பீஷ்மர்.

காந்தாரி  அன்னையர் பொருட்டு சொந்த மைந்தர்களை சபிக்கிறாள். அன்னையின் சாபம், குருவின் சாபம்  இரண்டையும் அடைந்த மைந்தனை திருதா கைவிடுவது எங்கனம்? தெய்வங்களாலும் கைவடப்பட்டவன், இருள் வேழம் இவர்களன்றி துரியனுக்கு துணை யார்?

பிறந்த நாள் தொட்டு மைந்தர்களின் இறப்பை எண்ணி கலங்கிக் கொண்டிருக்கும் விழியற்றவனின் துயரை நீ கூட உணரமாட்டாயா என விதுரன் வசம் கேட்டு கலங்குகிறார் திருதா.   //ஒரு இருள் மூலையில் நீ அவர்களின் தந்தை// என்று சொல்லி விதுரரை உடைத்து எறிகிறார் திருதா.

விதுரர் நகர் நீங்குகிறார். ஏதேதோ தவிப்புகள்.தைத்ரிய வனத்தில் சகதேவன் சொல் கேட்டு, தன்னிலை அறிந்து மீண்டும் ஹச்தினாபுரி திரும்புகிறார்.. பீஷ்மர் சொல்லுக்கு கட்டுப் படுகிறேன் என சொல்கிறார் தர்மன். தர்மனே ஏற்று நிற்கும் பீஷ்மரின் சொல். பன்னிரு படைக்களத்தில் எழவில்லை. அந்த சபையில் அவர்அவரது நிலையிலிருந்து  உரைத்த சொல்லிலிருந்து, அர்ஜுனன் இளைய யாதவன் எந்த வேதம் குறித்து பேசுகிறான் என்பதை  உணர்ந்து இனி என் காண்டீபம் இளைய யாதவன் பக்கமே நிற்கும் என உரைக்கிறான். பீஷ்மரின் வேத நெறி என்ன, அங்கிருந்து இளைய யாதவன் வகுக்கும் புதிய வேதம் என்ன என அதை நோக்கிய தர்மனின் அறிவார்ந்த பயணமே பத்து வனங்கள் வழியே நடக்கிறது. மறு எல்லையில் இந்தக் கல்வி நிலையங்கள் வழியே தர்மன் ஆத்மீகமாக சில உயரங்களை அடைகிறான். கௌஷீதம் துவங்கி யக்ஷ வனம் வரை, தோல் வேதம் தொட்டு, வரு வேதம் வரை  வேதங்கள் தோன்றி, கிளை விரித்து, தொகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டு,  விரிந்து பரவி இப் பாரத மண்ணை ஊடும் பாவுமாக பின்னி விரித்து, இணைத்த பண்பாட்டின் வண்ணமயமான சித்திரத்தை தர்மன் அடைகிறான்.

வேதம் புரந்த முதல் குருவான தௌம்யர் போர்க்கலை வல்லவர். அவரது மாணவர் வசம் அவர் மாறாதது எது சொல்லா பொருளா என வினவுகிறார். அவரது மாணவர் உத்தாலகர் நெல் முளைக்கும் வயலில் இருந்து எழுந்து வருகிறார்.கல்வி நிலையம் முளைக்கிறது. வேதச் சொல்லை நூறு மேனி விளைய வைக்கிறார். தைத்ரீய வனத்தில் அவர் அடைந்த மெய்மையின் சாட்சியாக நீர்மகள் எழுந்து வருகிறாள்.  உத்தாலகரின் மைந்தர்கள் அஷ்ட வக்கிருக்கும், ஸ்வேதகேதுவும் முரண்படுகிறார்கள். வேத நெறிக்கு ஒப்ப உத்தாலகர் ச்வேதகேதுவின் அன்னையை தாமசருக்கு  தாரை வார்க்கிறார்.  ஸ்வேதகேது அந்த வேத நெறியை மறுத்து புதிய நெறி ஒன்றினை உரைக்கிறார். அக்னி எழுந்து அச் சொல்லுக்கு துணை நிற்கிறது. புதிய கல்வி துவங்குகிறது. ஸ்வேதகேது குரு சாபம் பெறுகிறார். இந்த முதல் வனத்தின் முதல் கதை தொட்டு, மைத்ரீய வனத்தின் அருகப்படிவர் உரைக்கும் ''ஜந்து'' கதை வரை வித விதமான தந்தை மகன் கதைகள், மகனன்றி வேறொன்றும் என்னாத ஹரிச்சந்திரன், தன் விழைவின் முன் மகன் கூட ஒரு பொருட்டல்ல எனும் அஜிகர்தர், அனைவரையும் தன் மகனாக மட்டுமே காணும் விஸ்வாமித்ரர், என வித விதமான தந்தைகள்.  மானுடனுக்கு விதிக்கப்பட்ட அத்தனை உறவுக் கணக்குகளுக்கும் அப்பால் நிகழ்வது குரு சீட உறவு. அங்கே நிகழும் உறவும் பிரிவும், மகிழ்வும்  துயரும் கோடி கோடி மடங்கு அழுத்தம் கூடியது.  ''இது'' என்ன எனும் தவிப்பு கோடியில் ஒருவனுக்கு மட்டுமே எழும். பாலைவன கொடும் தாகத்தின் நீருக்கான விழைவு போன்றது அத் தவிப்பு அத் தவிப்பை கொண்டவனே குருவைத் தேடிக் கண்டடைகிறான். குரு அந்தத் தவிப்பை முன்பே அடைந்து நீரைக் கண்டடைந்தவர்.

விழைவு, அதன் காரியமாகிய நாம், நாம் காணும் இப் பிரபஞ்சம், இதன் செயல்திட்டம். இந்த நான்கு எல்லையும் எப்போத்தும் மானுடத்தை அலைக்கழிக்கும் அடிப்படை வினாவை, விடையற்ற வினாவை, விடையாகத வினாவை  அணையாமல் வைத்திருக்கின்றன. அத் தழலில் சுடர் பெற்றுக் கொண்ட ஆன்மாக்களின் கதையே பத்து காடுகளிலும் விரிகிறது. வித விதமான குரு சீட உறவுகள். கல்வி மேல் மாளாக் காதல், குரு விசாலர் தன் மாணவன் மகிதாசன் வசம்  மெய் கல்வி கற்கிறார், ஹரி தர்மதர் தன் மாணவன் ஜாபாலருக்கே மாணவன் ஆகிறார். யக்ஞ்ச வல்கியரும், கார்க்கியும் செய்யும் சம்வாதம் இந்த சித்திரங்களின் சிகரம். இருவரும் ஒரு சமயம் வினா விடை வழியே தாங்கள் அறிந்ததை கடந்து கடந்து ''அதன்'' வாயிலுக்கு சென்று சேர்கிறார்கள். சொல்லா பொருளா என்பது துவங்கி, தத்துவமசிதொட்டு, அகம் பிரம்மாஸ்மி தொடர்ந்து மகா லீலை வரை பிரம்மத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க நாடகீய கவித்துவ உச்ச தருணங்கள் வழியே சொல்லிச் செல்கிறது சொல்வளர் காடு.  புதிய வேதம் ஒன்றின் வருகைக்காக இக் காடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று பவமானன் சொல்லி முடித்ததும் தர்மர் உணரும் உணர்வெழுச்சி.  அவ் உரையாடல் முடிந்ததும் புறப்படலாம் என தர்மன் உரைத்ததும் அர்ஜுனனின் கை இயல்பாக தனது காண்டீபத்துக்காக நீளுகிறது. இனிய ஜெயம் இந்த மொத்த நாவலிலும் இக் கணம் நான் அடைந்த உவகையை சொல்லில் பெயர்க்க இயலாது.

மெய்ம்மை கற்க விழைகிறேன். நான் ஜாபாலி குலம், என ஜாபாலி சொல்லும் போது, வேதம் கற்க முன்னது போதும், பின்னது உன் அன்னைக்கு உனது கொடையாக விளங்கட்டும் என அவரது குரு சொல்லும் கணம், கருணை கருணை இதுதான் கருணை என மனது அரற்றியது. பறக்கத் தெரிந்தவனுக்கு படிகள் எதற்கு? அணைத்து ஒலிகளில் இருந்தும் தனது வேத மெய்மையை அடைகிறார் ஜாபாலி. மாக்களில் இருந்தும், நாய்களில் இருந்தும் வேத மெய்மையை அடைந்து எழுந்து வருகிறார்கள் குருக்கள். நாவலின் நம்பவே இயலா தருணம் கிருஷ்ணன் அடையும் குரு சாபம். கிருஷ்ணனே கொந்தளிக்கும் புள்ளியில், குரு சமநிலையில் நின்று தனது லீலை குறித்த நிலைப்பாட்டை உரைக்கிறார். குருவுக்கு தனது மைந்தன் என வரும் போது இந்த அறிதல் அவரை விட்டு விலகி, மாயையால் தளைக்கப்படுகிறார், கிருஷ்ணன் சொல்லில் வல்லவன், அந்த வல்லமையின் இருண்ட மையம், அவனது குரு மேல் கவிகிறது. //இதுவே உனக்கும் ஊழாகுக உன் முதல் மாணவன் உன்னை நீங்குவான்// என கிருஷ்ணனை குரு சபிக்கும் போது, கிருஷ்ணன் போன்ற ஆளுமையையும் ''கடந்து'' போகப் போகிறவன் அவன் என அறிந்தே கிருஷ்ணன் அதை வணங்கி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கான சாபம் அவரது மாணவருக்கு வரம்தானே. புதிய வேதம் உறைக்க வந்தவன் உள்ளும் புறமும் எதைக் கடந்து வந்தவனாக இருப்பான் என்பதையே இன்றைய கிருஷ்ணனின் நிலை தெரிவிக்கிறது.  பலராமருடனான மனஸ்தாபம் தீர்ந்து விடுமா என கிருஷ்ணன் நப்பாசையுடன் தர்மனை வினவுகிறான். [அது நடவாது என உள்ளூர அவன் அறிந்திருந்தும்]. தர்மன் உண்மையை உரைக்கிறார். எந்த உண்மையை? சில தினங்கள் முன்பு சகதேவன் தனக்கு சொன்ன உண்மையை. பாஞ்சாலி யுடனான விலக்கம் அனைத்தும் சரியாகி விடும்தானே என தர்மன் சகதேவனை கேட்கிறார். சகதேவன் ஆகாது அது ஏன் என உண்மை நிலையை அவருக்கு உரைக்கிறான்.

பாஞ்சாலி குறித்த விழைவே, அவளுக்கு அவர் இழைத்த அநீதியே தர்மரை அலைக்கழிக்கிறது. அவள் வெறும் பெண் அல்ல பேரரசி அவள் இதை தாண்டித்தான் ஆக வேண்டும் என மனத்துக்குள் எண்ணிக் கொள்கிறாள். அதை அவரால் மனத்துக்குள்தான் எண்ணிக் கொள்ள முடிகிறது, அதை பாஞ்சாலியின் கண்களை நோக்கி சொல்ல கிருஷ்ணன் தான் வரவேண்டி இருக்கிறது. அதுவும் எப்படிப் பட்ட கிருஷ்ணன் குருதியாடி பகை முடித்து மீண்ட கிருஷ்ணன்.  கிருஷ்ணனுக்கு அவரது குடிக்குள் முற்றிலும் செல்வாக்கு சரிகிறது. வழக்கமாக நீலன் சபை கூட்டுவான். குலங்களின் சார்பாக குலத் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களுக்குள் பேசி சொல்லாடி, சொல்லால் சமர் புரிந்து, ஒரு முடிவும் காணாது,அனைத்தும் மோதி முயங்கி,சமன்வயம் கண்டு, ஒரு எல்லையில் அமைதி வந்து இறங்கும், அந்தத் தருணத்தில் நீலன் எழுந்து பேசுவான், ஆணை போல தனது சொல்லை உரைத்து அனைத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வருவான். இம் முறை நீலன் அங்குதான் தோற்கிறான். குடி மன்றில். ஒவ்வொரு குலத் தலைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி நின்று அமைதியாக கலைகிறார்கள்.  அங்கு துவங்கி, தலைகளை கொய்து, கொட்டி நிறுத்தி, அதன் மேல் நின்றே தனது சொல்லை உரைக்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் வழமை போல சரியான புள்ளியில் அடிக்கிறார் '' குலமகள் இத்தகைய வஞ்சத்தை உறைக்க இயலாது''  பாஞ்சாலி சீறி ''நான் குல மகள் அல்ல பேரரசி''   '' எனில் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் அரசி''  இதை பாஞ்சாலியின் கண்களை நோக்கி சொல்ல குருதிப் புனலை கடந்து வந்த ஒருவனால்தான் இயலும்.

கிருஷ்ணனே தர்மனுக்கு அடுத்த குரு நிலையத்தை கைகாட்டி விட்டு செல்கிறான். மைத்ராரண்யம் . தாயுமானவன் உருவாக்கிய கல்வி நிலையம்.  விஷ்ணுபுரம் நாவலில் தத்துவ சபை விவாதம் முடிந்த பிறகு, தத்துவம் பேசும் உயர் மனங்கள் சோற்றுச் சண்டையில் ஈடுபடும். அதன் நேர் நிலை கொண்ட மறு எல்லை சொல்வளர் காடு. ப்ரஹாதாரன்யகத்தில் கலைகள் பல செழிக்கிறது, துவைத வனத்தில் மருத்துவம், மைத்ரிவனத்தில் அன்னதானம். முன்பு  பீமன் சமையல் செய்யும் சூதனை தனது குருவாக அடைந்து கற்ற மெய்மையின், வேறொரு வடிவை இங்கு தர்மன் கற்கிறார். உழைப்பு, பசி, கனவற்ற உறக்கம், பின் பல்வேறு மெய்ம்மை வழிகள் உசாவப் படுகின்றன, நிகழ்பவை அனைத்தும் சூதர்களால் கிண்டல் செய்யவும் படுகின்றன.  கொடுத்து அகந்தையை அழித்து, அணைத்து அறிவின் சாரத்தை அறிந்து அறியாமையை கடந்து, அனைத்துக்கும் அப்பால் இன்னும் நின்றிருக்கும் பாஞ்சாலி மீதான விழைவை இத்தனை பயணங்களுக்குப் பின்னே தர்மர் நேராகக் கண்டு அருகப் படிவர் முன் உரைக்கிறார்.

அதன் பின் பறவை சுட்டும் பாதையில் சென்று பாண்டவர்கள்,  மாளவத்தில் பரவிய நோய் விலக தன்னையே ஆகுதி ஆக்கும் வேள்வியை  செய்யும்  சுப்ர கௌசிகர் நிலையை அடைகிறார்கள்.  யக்ஞ்ச முதல்வராக அமர்கிறார்கள். மித்திரன் தொலைத்த அரணிக் கட்டைகளை தேடிபாஞ்சாலியை நிலையில் விட்டு விட்டு  பயணிக்கிறார்கள். கந்தகம் எரியும் நிலம். தாகம். தர்மன் தவிர்த்த நால்வரும் நச்சுப் பொய்கையில் நீர் அருந்தி மறிக்கின்றனர். தம்பிகளை தேடி தர்மன் வருகிறார். பொய்கைகைக்கு காவல் நிற்கும் யக்ஷர்களுக்கு பதில் சொல்கிறார். முதிய யக்ஷன் மூன்று கேள்வி கேட்கிறான்.  மூன்றாவது கேள்வி உண்மையில் வெண் முரசு வாசகனை அலைக் கழிக்கும் ஒன்று.   யக்ஷன் கேட்கிறார் '' நோய்களில் கொடியது எது''  தர்மன் உரைக்கிறார் ''வஞ்சம்''

அர்ஜுனன் சொல்கிறான் ''மூத்தவரே அவர்களால் மீள முடியும், நம்மால் முடியாது, நாம் வஞ்சத்தை தேடிச் சென்று பற்றி இருக்கிறோம்''

பாஞ்சாலி அழுகையுடன் சொல்கிறாள் '' கிருஷ்ணா இந்த வஞ்சத்துடன் என்னால் வாழ முடியாது''

குந்தி சொல்கிறாள் '' பதிமூன்று ஆண்டுகாலம் இந்த அரண்மனையில் என் குலமகளின் வஞ்சத்தை இவர்களுக்கு நினைவூட்டியபடி வாழ்வேன்''

கர்ணன் '' இந்த மைந்தன் பொருட்டு இவ் வுலகை ஏழு முறை எரித்தழிக்கும் வஞ்சம் என்னுள் குடியேறுக''

பெரு வஞ்சத்தின் முன் கந்தமாதனத்தின் தழல் வாயும் சிறியதே.

யாரேனும் ஒருவரை உயிர்ப்பித்துக் கொள் என வரம் தருகையில் தர்மன் நகுலனை எழுப்புகிறான். முதிய யக்ஷன் பீமனையோ, அர்ஜுனனயோ கேட்காமல் ஏன் நகுலனை கேட்கிறாய் என வினவ, அதற்க்கு தர்மன் சொல்லும் பதிலும், இந்த முடிவை எடுக்க தர்மன் கொண்ட நிலையும் தர்மன் துவைத வனத்திலிருந்து கற்றது. ஆம் துலா முள் ஞானம் . எப்பக்கமும் எடை சாயாத துலா முள்ளாக தர்மன் நின்றான்.   முதிய யக்ஷர் அனைவருக்கும் தன் உயிரை அளித்து உயிர்ப்பிக்கிறார். தர்மன் நெறியைப் பேணினான். நெறி அவனைப் பேணியது.  ஆச்சர்யம் பீமனோ அர்ஜுனனோ இறந்து கிடக்கையில் உள்ளே எதுவும் தோன்றவில்லை. ஆனால் நகுலனும் சகாதேவனும் கரம் கோர்த்தபடி செத்துக் கிடக்கும் காட்சி முற்றிலும் கலங்கடித்து விட்டது. அதே போல் மந்தனை தனக்கு மைந்தனாக இருந்து தர்மன் நீர்க் கடன் செய்யச் சொல்லும் இடம்.

கந்த மாதனத்தின் ஏறி வாயிலில் இருந்து தர்மன் எப்படி மீண்டார்? அந்த அறிதலை சமையல் அறையில் இருந்தே தர்மன் அறிந்திருக்கக் கூடும். தர்மன், இப் புவியை ஆக்கி ஆளும் அனலை, ஜடரையை, மகாருத்ரத்தை மகாருத்ரமென இங்கு வந்த பீலியை பாஞ்சாலியில் குடி கொண்ட தவிப்பை, பாஞ்சாலியை  அறிகிறான்.  இனி அவன் அமுதம் நிறைந்த, அன்னம் குறையாக் கலம். நாவலின் மொழி  அதன் பேசுபொருளான ஆசிரியர்கள் சார்ந்து தர்க்கப்பூர்வமாக நேரடியாக உருவாகி , யக்ஷவனம் தொடுகையில் எழுந்து பறக்கத் துவங்கி விடுகிறது.  திரைகடலை எழுந்து ஆர்ப்பரிக்கச்செய்யும் அதே காற்று தான் ஒரு சிறு இறகையும் அலைக்கழிக்கிறது.  உடை தைக்கும் ஊசி போன்ற  உவமைகள்  வலிமையான தாக்கத்தை உருவாக்குகிறது.  நிற்க.  கடந்த சில தினங்கள் முன்பு நானும் அஜிதனும் புதுவை ஆரோ வில்  தியான கோளம் முன்பு  நின்றிருந்தோம். அதன் எதிரே , வேரோடி விழுது பரந்த உயர்ந்த ஆலமரம், அதை அடிப்படையாக வைத்தே அன்னை , சாதகர்களுக்கு அந்த நிலத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என அங்குள்ள ஒரு குறிப்பு சொல்கிறது.  அஜிதன் வசம்  சொல்வலர்காட்டில் வரும் ஆலமரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அஜி  சொன்னான் ''ஷோபானாவார்  வந்தடைந்த வில் எனும் கருது கோளை, இங்குள்ள பிரம்மம் எனும் கருதுகோளுக்கு இணை சொல்லலாம். மேலை மரபில் அங்கு வந்து சேர பல இடர்கள், குறிப்பாக பல போர்கள், அங்கே உரையாடல் நிகழ பல தடைகள், ஷோபாநாவரை தெரியாமலேயே அங்கே ஒருவர் தத்துவப் பேராசிரியராக வாழ்ந்து செல்லும் நிலை இருந்தது.  மாறாக  இங்கே  எத்தனை பெரிய உரையாடல் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள். ''   என்றான்.  ஆலமர் செல்வன்  என்ற நமது தொன்மத்தின் இலக்கிய வடிவே சொல்வளர் காடு. வேதாந்தம் உலகுக்கு பாரதத்தின் கொடை. அது எத்தனை உயரிய  மனங்களின் உரையாடல் வழியே, வாழ்க்கைத் தியாகங்கள் வழியே இங்கு உருவாகி வந்தது என்பதன் இலக்கிய சாட்சியம் சொல்வளர் காடு.  இந்தியப் பண்பாட்டை மீள எழுதுகிறேன் என்று சொன்னீர்கள்.  அதற்க்கு இந்த ஒரு நாவல், ஒரு சோறு பதம். இந்தியப் பண்பாட்டை மீள எழுதுகிறேன்.  நாவல் முடிந்த கணம் இந்த சொல்லை மீள, மீள, எனக்குள் ஓட விட்டுக் கொண்டேன். ஆம் இது சிம்ம கர்ஜனை, வல்லவன் உரைத்த சொல்