அறியாமையில் இருந்து
ஆணவம், ஆணவத்தில் இருந்து பகை, பகையில் இருந்து வஞ்சம், வஞ்சத்தில் இருந்து துரோகம்.
யாதவர்களின் அறியாமை,
ஆணவம், பகை, வஞ்சம், துரோகத்தால் கண்ணனின் அன்பின் வண்ணம் அழிகிறது, பணிவின் வடிவம்,
சரிகிறது, அருளின் பெருக்கு சுருங்குகிறது.
அனைவருக்கும் தாயென
இருக்கும் கண்ணன் யாதவர்களின் அறியாமை, ஆணவம் பகை, வஞ்சம் துரோகம் ஆகிய அனைத்தையும்
பயம்காட்டி அழித்து தந்தையென எழுந்து நிற்கிறான்.
தந்தையென எழுந்து நிற்கும் அவன் செயலே அவன் ஒருகையில் தோல்வியடையாத சக்கரமும் மறுகையில்
வெல்லப்படாத சொல்லும் கொண்ட சங்கும் கொண்டும் எழுந்து நின்று கடவுள் என்றும் காட்டுகின்றான்.
அவன் ஏற்படுத்திய
பெரும் குருதியை அச்சத்தை அவனே விழாக்கள் மூலம் கழுவியும் செல்கிறான்.
கண்ணனே சொல்வதுபோல
ஓருவனைப்பற்றி மிகையாக எண்ணிக்கொள்வதும் அல்லது குறைவாக எண்ணிக்கொள்வதும் உண்மையை உணரமுடியாமல்
செய்துவிடுகிறது.
தேரான் தெளிவும்
தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்-திருக்குறள்.
உண்மையை தானே அறியவேண்டிய
நிலையிலேயே உண்மை எப்போதும் வெளிப்படுகிறது. உண்மையை யாரும் யாருக்கும் காட்டிக்கொடுத்துவிடமுடியாது.
கண்ணன் ஊர் ஊராக வீடுவீடாக சென்றபோது அதை அறியமுடியாதவர்கள்.
அதற்காக பெரும் விலைக்கொடுத்து அதை அறிகின்றார்கள். சத்தியபாமக்கூட அதற்கு அதிகப்பட்ச
விலைக்கொடுக்கிறாள்.
//“இன்றுமாலை சத்யபாமை
ஒற்றை மரவுரியுடன் சென்று போஜர்களின் குடித்தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின்
கால்பொடி சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரவேண்டும். இன்றுமுதல் ஒருவாரம் ஊர்மன்றில்
உணவு ஒழித்து நோன்பிருக்கவேண்டும்” என்றேன்//
மனிதர்கள் ஒரு
கணத்தில் துளியளவு பொறுமையை அன்பை கைக்கொள்ள முடியாமல்போகும் போது அதற்காக ஆண்டுக்கணக்காக
நொம்பு இருந்தாலும் சமன்செய்யமுடியாமல் போகின்றது.
இதைத்தான் கண்ணன் ஊழ்முன் கையறுநிலை என்கிறான்போலும்.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்