அன்புள்ள ஜெ,
மனிதனின் விழைவு இத்தனை கொடுமையானதா?
ஜந்துவின் கதையைப்படித்து உறைந்துப்போகின்றேன்.
மனிதனின் விழைவின் முன் அனைத்து உயிர்களும்
வெறும் ஜந்துதான் அல்லவா? அன்னை என்று தந்தை என்று மன்னனென்று அறம் ஆய்பவன் என்று இங்கு
மனிதர்கள் போடும் வேசம் எல்லாம் தன் விழைவின் பொருட்டு ஒரு உயிரை ஜந்து என்று ஆக்கத்தானா?
மனிதர்கள்
ஏன் விழைவின் பொருட்டு பில்லி சூனியம் செய்வினை என்று அலைகின்றார்கள்.
இதையும் செய்ய இந்த மண்ணில் மனிதர்கள் எதன்பொருட்டு இருக்கிறார்கள் என்று
கேள்வியை உள்ளுக்குள் கேட்டு கேட்டு ஒய்து போனபோது விடை தானாகவே வந்து
கிடைத்துவிட்டது. பலியிடுபவனும் பலியானவனும் ஒருவித்தில் ஒருவரேதான்.
தந்தையாகிய சோமகனும் தனையனாகிய சோமதத்தனும்.
ஜந்துவாக இருக்கும் ஒரு சதைப்பிண்டத்தை அன்பின்
மிகுதியால் சோமதத்தன் என்று அழைப்பதும், அன்பே வடிவான தந்தை இவன் என்று நம்பும் ஒரு
சோமதத்தனை வெறும் ஜந்து என்று அந்த தந்தை சொல்லிக்கடக்கும் நாளும் வருவது விழைவால்
அன்றி வேறு என்ன?
//விழைவொன்றை தொட்ட உள்ளம் அதை ஊதி ஊதி வளர்க்கிறது. அந்த ஐந்தெரி நடுவே ஒற்றைக்காலில் நிற்கிறது.//
அந்த
ஐந்தெரி நடுவே ஒற்றைக்காலில் நிற்கிறது என்ற
வரியை எண்ணி எண்ணி வியக்கிறேன். மெய்வாய்செவிகண்மூக்கு என்னும் ஐந்தெரிகள்
சுடர்விடும்
இந்த உடம்பு ஒரு ஒற்றைக்கால் அல்லவா? விழைவுகள் அல்லவா அந்த அந்து எரிகளை
ஊதி ஊதி வளர்க்கிறது.
சோமகன் முன் நேர்வந்த எமனிடம் அவனை மன்றாட
வைத்தது அவன் கொண்ட புத்திரமோகம். அந்த புத்ரமோகம் அல்லவா சோமகனை
பலியிடவும் செய்கின்றது. விழைவு என்பது ஒன்றை பலியிட்டு நூறைப்பெறுவதுதானா?
இதில் தந்தை என்றும் மகன் என்றும் எங்கே இடம் உள்ளது. தந்தை என்றும் மகன்
என்றும் சொல்வதெல்லாம் மனிதன் தன்னை மனிதன் என்று காட்டிக்கொள்ள
போட்டுக்கொள்ளும் பண்பாட்டு பாசவடைமட்டும்தான்.
விழைவுக்கொள்ளும்போது மனிதன் விலங்காகிவிடுகின்றான்,
தன் மகனை சோமதத்தனை ஜந்து என்று சொல்லி தான் விலங்கு என்பதை மறக்க சோமகன் போடும்
வேடம் பெரியது. மனிதன் விழைவுக்கொள்ளும்போது மானிட சட்டைப்போட்ட மிருகம்.
விழைவில் மனிதன் விலங்காகின்றான், விலங்கு மனிதனின்
விழைவை அறியும்போது மனிதனாகிறது என்பபதை விளக்கும் விதமாக, விழைவின் காரணமாக சோமகன்
மகனை ஜந்து என்பதும், இதுநாள் வரை ஆ..ஆ என்று மட்டும்பேசிய வந்த ஜந்து தந்தையின் விழைவை
உணரும் தருணத்தில் தன்னை ஜந்து என்ற கணத்தில் அந்த வெறுப்பில் பாசத்தில் தந்தையே.. என்பதும் அதிரடிக்கும் வாழ்வியில்
உண்மை. இப்படி ஒரு கவிதைத்தருணத்தை கொண்டு வந்து வைக்கும்போது பெரும்புவியின் ஆடலை
வியக்காமல் இருக்கமுடியவில்லை.
ஒருபொழுதும் இருசரண நேசத்தே வைத்து உணரேனே
உனது
பழநிமலையெனும் ஊரைச்சேவித்து அறியேனே
பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக்குறியேனே
பிறவியற
நினைகுவன் என் ஆசைப்பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக்காரப் பெருமாளே
தொழுது
வழிபடும் அடியவர் காவற்காரப் பெருமளே
விருதுகவி விதரண விநோதக்காரப் பெருமாளே
விறன்மறவர்
சிறுமி திருவேளைக்காரப் பெருமாளே. –என்று அருணகிரிநாதசுவாமிகள் எம்பெருமான் முருகனிடம்
பிறவி அறுவதற்கு என் ஆசைப்பாட்டை விடமாட்டேனா? என்று ஏங்குகின்றார்.
பிறவியறுதற்கு ஆசைப்பாட்டை விடவேண்டும் என்று ஏன் இத்தனை ஏங்குகின்றார் அருணகிரிநாதர்சாமிகள் என்று
சோமதத்தன் கதையைப்படிக்கும்போது நெஞ்சில் வந்து நடமிடுகின்றது திருப்புழ்.
மனிதன் தனது விழைவுகளின் காரணமாக ஏற்படும் விலங்கு
மனத்தை மறைப்பதற்கு எத்தனை நாடகம் இடவேண்டி இருக்கிறது. சோமகன் தனக்கொரு மகன் வேண்டும்
என்று முன்னோர்களை காரணம் காட்டுகின்றான், அறியணையை முன்வைக்கின்றான். தாய்கள் தங்கள்
கருப்பையை காரணம் காட்டுகின்றார்கள், தாய்மையை காரணம் காட்டுகின்றார்கள்.
கல்லாக இருக்கும் சோமதத்தனும் உயிரோடு இருக்கும் சோமத்தனும்
ஒருவரை ஒருவர் பார்க்கும்போதுதான் ஒரு முழுப்பார்வை கிடைக்கிறது.
// சிலையாக நின்றிருந்த ஜந்து கூரிய விழிநோக்கு கொண்டிருந்தான். அவன் முன் நிற்கும் எவரும் அவ்விழிகளை ஏறிடமுடியாமல் விலகிச்செல்வதே வழக்கம். சௌமதத்தன் மட்டுமே அவ்விழிகளை நோக்கியபடி நெடுநேரம் நின்றிருப்பான். “என்னை நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்று அவன் சொன்னான்.//
இந்த உலகை கல்போல நின்று நோக்கவேண்டும். தன்னைத்தான்
உயிரோடு நின்று நோக்கவேண்டும். ஆகா.. எத்தனை பெரிய மெய்மை. நன்றி ஜெ.
பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக்குறியேனே
பிறவியற
நினைகுவன் என் ஆசைப்பாடைத் தவிரேனோ-முருகா..முருகா..முருகா .
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.