அன்புநிறை ஜெ.மோ,
நேற்றைய தினம் தங்களை நேரில் சந்தித்து உரையாடியது மிகவும் நிறைவாக இருந்தது.
நானும் நேற்று என்னுடன் வந்த எனது நண்பர் கணேஷும் அவரது
மனைவியும் வெண்முரசின் தொடர்வாசகர்கள். படித்துவிட்டு அவரவரது
அனுபவங்களையும் கருத்துகளையும் விவாதிப்பதும் வழக்கம்.
நேற்றும் பல கேள்விகளோடு வந்திருந்தேன். எனில் உரையாடல் வேறு
வேறு திசைகளில் கிளை விரித்ததால் அவற்றுக்கான மேடை அதுவல்ல என்று
அணையிட்டேன்.
இன்னும் சிலபல மின்னஞ்சல்கள் என்னிடமிருந்து வரும்.
நேற்றைய சந்திப்பில் பேச எண்ணியதனைத்தும் பேச இயலவில்லை.
அவற்றுள் சில எண்ணங்கள்/வினாக்கள்:
1. இலக்கியத்தின் சாராம்சம் என்பது அறம் அல்லது நீதியுணர்ச்சி
என்று நீங்கள் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கிறது. பாரதம் போன்ற
அறச்சிக்கல்கள் நிரம்பிய ஒரு தொன்மத்தை எழுதும் போது உங்கள் கடந்தகால
அறச்சிக்கல்களுக்கான விடை தரிசனம் போல் கிட்டியிருக்கிறதா? அல்லது ஏற்கனவே
தங்களுக்கு துலங்கிவிட்ட விழுமியங்களை எங்களுக்கு அடிக்கோடிட்டுக் கொண்டு
செல்கிறீர்களா? எழுத்தாளன் தனது தேடல்களையும் நம்பிக்கையையும்
உணர்வுகளையும்தான் முன்வைக்கிறானா? உங்கள் ஆன்மீகத் தேடல்களின் பயணமும்
இதனோடு இணைந்து தன்னைத்தானே நிகழ்த்திக் கொண்டிருக்கிறதா?
இக்கேள்விகளின் காரணம் பல தருணங்களில் உங்களது சில வரிகள் படிக்கும்போது,
திரைவிலக இருளுக்குள் தீபவொளியில் சிலை சிந்தும் புன்னகை போல், ஓர் அரிய
ஆனால் மனம் ஏதோ விதத்தில் உணர்ந்த உண்மைகள் துலங்கும் போது மனம்
விதிர்க்கிறது.
2. உணர்ச்சி மிகுந்த சூழலில் உண்மையான இலக்கியம் பிறக்குமா?
3. வேதம், உபநிடதம், வேதாந்தம், என பாரதத்தின் ஞானப்பாதைகள்
அனைத்தையும் தர்க்கங்களாய் பலதரப்பு வாதங்களாய் முன்வைத்து நகர்ந்தபின்
என்ன எஞ்சும்? தங்களுக்குரிய அகவிடுதலை கிட்டுமா? அனைத்தினின்றும்
விடுதலையானபின் இலக்கியம் இயலுமா?
4. சமணம், பௌத்தம் என அனைத்து மரபியல் சிந்தனைகளுக்குமான
அறிமுகம் தங்களுக்கு எங்கு உண்டானது. ஒரு ஆரம்பநிலை ஆர்வலர் எங்கு
தொடங்கலாம்?
5. அறிஞர்கள் தங்கள் சொற்களால்தான் இறுதியில் வெல்லப்படுகிறார்கள் - இது ஸ்வேதகேதுவா? ஜெயமோகனா?
வெல்லும் சொல்லும் இன்மையறிந்து நீங்கள் சொல்லிச் செல்லும் பாரதம் மேலும் மேலும் வளர்க.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ
சுபஸ்ரீ
அன்புள்ள சுபஸ்ரீ
இக்கேள்விகளுக்கெல்லாம் தோராயமாகவே என்னால் பதில் சொல்லமுடியும்
1 மகாபாரதம் ஆனாலும் விஷ்ணுபுரம் ஆனாலும் நான் எழுதுவது அடிப்படையில் என் தேடல்களை. என் அலைச்சல்களை. நான் விலகி நின்று அட்டவணையிடுபவன் அல்ல. இந்த எல்லா பக்கங்களிலும் என் குழப்பங்களும் தவமும் கண்டடைதலும் உண்டு. நான் வரிகளை நகல் செய்யவில்லை. அவை என் ரத்தம்போல என்னுடையவை
2 உணர்ச்சியோ தர்க்கமோ ஒன்றுமேம்பட்டிருந்தாலும் இலக்கியம் சமநிலையுடன் இருக்காது. உணர்ச்சிகளை தர்க்கம் கட்டுப்படுத்தவேண்டும். தர்க்கத்தை உணர்ச்சிகள் எரிந்து எழுந்து பறக்கச்செய்யவேண்டும்
3 வெண்முரசில் நான் தர்க்கங்களை முன்வைக்கவில்லை. நேரடியாகப்பார்த்தால் கதைகள். கதைகளுக்குள் படிமங்கள். அவற்றுக்குரிய அளவிலேயே தர்க்கம் வந்துகொண்டிருக்கிறது. இது என் வழி. ஓர் எளிய பக்தனுக்கோ தூயவேதாந்திக்கோ இவை தேவையில்லாமல் இருக்கக்கூடும். எல்லா பாதையும் சரிதான்.
4 நான் முப்பதாண்டுக்காலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் தத்துவநோக்கில் ஆழமாக வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்தவர்கள். எம் கோவிந்தன், பி.கெ.பாலகிருஷ்ணன், எம்.கங்காதரன், ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, நித்ய சைதன்ய யதி. எல்லா ஞானமும் ஒரு வகையில் ஆசிரிய மாணவ தொடர்ச்சியே
5 தன் சொற்களால் வெல்லப்படுவதே முக்தி. அது எனக்கும் நிகழட்டும்
ஜெ