தன்னுள் விதைகளை அணுக்களென கொண்டிருக்கின்றது மலர்.
பரமார்த்திவ அணுக்களென வனங்கள் அதில் உறைகின்றன.
அவ்வனங்கள் வளர்ந்து பெருக தன்னை மலர்த்தி இருக்கும் தாய்மைத்தவம்.
தன்னை நாடிவரும் பிற உயிர்க்கும் தேன் சமைத்து காத்திருக்கும் பேரன்னை.
முட்செடியில் மலர்ந்தாலும் மென்மையை இழக்காத. சகதியில் வேர்கொண்டிருந்தாலும் மணம் வீச தவறாத பெருநெறி.
ஒவ்வொரு மலரும் அன்னைப் பெருந்தெய்வம் எழுந்தருளும் திருவாழியல்லவா?
பேரண்டமே ஒரு மலர், அதில் விதைகளென உறைகின்றன உலகங்கள்.
ஞானப்பசிகொண்டு தேனுன்ன சிறு வண்டென காத்திருக்கிறேன் நான்.
பேரன்னையின் பெருங்கருணையினால் வெண்முரசு விருட்சத்தில் மலர்கிறது மற்றுமொரு மாமலர்.
மாமலர் போற்றுதும்! மாமலர் போற்றுதும்!
தண்டபாணி துரைவேல்