Friday, February 3, 2017

மாமலர் திரௌபதி



அன்புள்ள ஜெ வணக்கம்.

மாமலரில் திரௌபதியின்  அறிமுகத்தில் மொத்த கசந்த காலத்தையும் வெட்டி எறிந்து திரௌபதியை சுவைாயக மட்டும் புலன் உணரவைத்துவிட்டீர்கள். காலம் என்னும் வாள் ஆயுளை மட்டும் வெட்டிக்கொண்டே இருக்கவில்லை மனித மனத்தின் காயங்களையும் வெட்டிக்கொண்டே இருக்கிறது. முன்னது அழிப்பதற்கு பின்னது துளிர்ப்பதற்கு. 

நேற்றைய  முள் நினைவுகளைத்தாண்டி நாளைய  காற்றுமலர் கனவுகளை துறந்து பாண்டவர்களுடன் திரௌபதி அன்னம் படைக்கும் அன்னையாக மட்டும் எழுந்து வந்திருப்பது காலம் எழுதிய புதியக்கோலம். 

நேற்றைய நினைவாகவும் நானைய கனவாகவும் ஓடும் காலநதி இன்றைய உணவென்னும் படித்துறையில் ஓடாததுபோல் ஓடிக்கொண்டு இருக்கிறது. படித்துறையின் அசைவின்மை நதியின் அசைவை அறுத்தெறிவதுபோல் காலத்தை உணவு அறுத்து எறிந்து காலம் உணவாகி நிற்கிறது எப்போதும். மானிடர் காலநதியின் உணவுப்படித்துறையில்  இறங்கி நீராடி அந்த கணமாகி நிற்கிறார்கள். அந்த கணத்தில் நேற்று இல்லை நாளை இல்லை அதனால் கனவு இல்லை நினவும் இல்லை.  ஆனந்தம் மட்டுமே இருக்கிறது.
  
விழைவு விழைவு என்று விரிந்து உட்காரும் இடத்தை எல்லாம் பீடமென்றே நினைக்கவைக்கும் திரௌபதி பாலோடும் அரிசியோடும் அடுமனையோடும் உலவுவதைப்பார்க்கும்போது விழைவைத்துறந்த அன்னைமுனிப்போலத்தெரிகின்றாள். விழைவு விழைவு என்று வளர்ந்து இன்று விழைவை விட்டவளிடம் விழைவை வெறுத்துக்கொண்டே  வளர்ந்துவந்த தருமன் விழைவைப்பற்றிய சௌரவேதத்தின் கதை பேசுவதுதான் விழைவின் மகத்துவம்.

பூமி புது்பபுது வண்ணப்பூக்காடாய் பூத்துக்குளுங்கும் இடத்தில் வாழும் தருமன் பூக்களை அறிவில்லா அழகிப்போன்ற தேனேந்திகள் என்று வர்ணிக்கின்றான். அவனுக்குள் எழும் விளைவை எட்ட முடியாத விழைவின் கனத்தால் சலிப்புரும் அவன் அகம் காணும் வாழ்க்கை அது. மானிட மனத்தில் இருப்பு சலிப்பாகும்போது கண்டடையும் காம  குரோத மோகம் தருமனுக்குள்ளும் எழுகின்றது. தனக்குள் எழும் ஒன்று தான் ஆயும் நூளிலும் இருக்கும்போது மானிடன் உள்ளும் புறமும் சரிநிகர் உலகில் விழுகின்றான். தருமன் அறியும் அர்வாவசுவின் கதையும் காமம் கோபம் மோகம் என்னும் வழியாக சென்று தோற்கடிக்கப்படுதலின்வலியை, வஞ்சிக்கபடுதலின் வலியை, மறக்கடிக்கப்படுதலின் வலியை எழுப்புகின்றது. வலியே இனிமையாகும் தருனம் அது.

அர்வாவசுத்தன்னைபோலவே இருப்பதால் இந்த கதை தருமனை கவர்ந்தது என்று சகாதேவன் கூறும்போது அதை மறுக்காமல் “மெய்தான்“ என்று தருமன் ஏற்றுக்கொள்ளும் பாங்கில் அவன் அகத்தின் தூய்மை வெளிப்படுகிறது.

அர்வாவசு பராவசு தருமன் மூவரும் மூன்று புள்ளிகளில் நின்று இந்த கதையில் விழைவை தனது அளவில் பயன்படுத்திப்பார்கிறார்கள். பராவசு தனது விழைவை அனுபவித்து தீர்க்கிறான் முடிவு இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கையில் காமம் கோபம் மோகம் அனைத்தும் பொருள் அற்றது என்பதை வஞ்சத்தால் துரோகத்தால் போரால் மரணத்தால் பெற்றப்பிள்ளைகளின் வழியாகவே அறிந்து நொந்து இருண்டு தவித்து சாகின்றான்.. அர்வாவசு காமம் கோபம் மோகம் அனைத்தும் பொருள் அற்றது விழைவு மட்டுமே என்பதை அறிந்து// “ஏதும் விழைகிலேன். இப்புவியில் எவரிடமும் கடனிலேன், எவருடனும் பகையுறவும் அற்றுள்ளேன். முழுமையன்றி கோருவது பிறிதில்லை// என்பதன் மூலமாக  இந்த உலகம் ஒளிநிறைந்தது அருள்நிறைந்தது என்று கண்டு அடைகிறான். தருமன் காமம் கோபம் மோகம் என்ற சிடுக்குகளில் நுழைந்து அதில் சிக்கிக்கொள்ளாமல் நடந்தே ஆகவேண்டும் என்று கண்டுக்கொள்கிறான். தருமன் திரௌபதி கைப்பற்றி இழுப்பதும், அவள் வேலை இருக்கிறது என்றதும் போடி என்று சினப்பதும், வேண்டாம் என்று கூறி மறுத்தப்பாலை மீண்டும் வேண்டி குடிக்கநினைப்பதும் என்று வாழ்ந்துக்காட்டுகின்றான். காமம் கோபம் மோகம் இல்லாமல் எப்படித்தான் வாழ்வது? .

திரௌபதியை சந்திக்க அடுமனைக்கு செல்லும் தருமன் உள்ளே சகாதேவன் இருக்கிறான் என்பதை அறிந்த கால்களை தேய்த்து ஒலி எழ நடக்கும்போதும், திரௌபதி கனவில் கண்ட பீமனுக்கு உணவு சமைக்கிறாள் என்பதை அறிந்தபோதும் அவனைக் காட்டில் பார்த்ததை தெரிவிக்காமல்  செல்லும்போதும் தருமன் நானும் காமம் கோபம் மோகம் கொண்ட எளிய மனிதன்தான் என்பதை நிறுபிக்கிறான். 

காமம் கோபம் மோகம் என்னும் முப்பட்டகத்திற்குள் மானிடன் மாட்டிக்கொண்டு வர்ணஜாலம் செய்கின்றான். அதற்குபின்பு அவன் பராவசுவா? இல்லை அர்வாவசுவா? என்பது அவன் அவன் செல்லும்பாதை. ஒரே பாதையில்தான் இரண்டு புள்ளிகளும் உள்ளன ஆனால் திசை எதிரில் உள்ளன.  . 

ராமராஜன் மாணிக்கவேல்.