அன்புள்ள ஜெயமோகன்,
பீமன் கர்ணனை அவமதிக்கும் செயல் என் மனதை மிகவும் பாதித்தது. ஒன்று கர்ணனின் பால் எனக்கு இருந்த அனுதாபம் என்ற போதிலும் குழந்தை போல் எளிய மனதுடைய பீமனா இதை செய்தான் என்பது என்னை மிகவும் சஞ்சலப்படுத்தியது.
பீமன் தன் குருவாக ஒரு சூதரை சொன்னவன். மற்றவருக்கு மகிழ்ச்சிமட்டுமே அளிக்கக்கூடிய தொழில் சமையல் என அறிந்து அதை தன் தொழிலாக கொள்ள விருப்பம் கொண்டவன். காட்டு விலங்குகளையும் நண்பனாக கொள்பவன். சூதன் என்பதற்காக ஒருவனை இகழ்ச்சியாக நினைக்கக்கூடாது என்று விஜயனுக்கு அறிவுறுத்தியவன். அவன் சூதன் என்பதற்காக ஒரு மனிதனை இகழ்வானா?
பீமன் கர்ணனை சூதன் என்பதற்காக இகழ்கிறானா? அல்லது இகழ்வதற்காக சூதன் என்கிறானா? இதுவே நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி. இரண்டுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. ஒருவனை பிறப்பின் காரணமாக இகழலாம் என்று உயர்ந்த குலத்தில் பிறக்காத குந்தியின் மைந்தர்கள் கருதுவார்களா?
என்னை பொறுத்தவரையில் பீமன் கடும் வெறுப்பு மற்றும் சினத்தின் காரணமாக கர்ணனை கிட்டதட்ட கொல்ல முயல்கிறான். அதற்கு சரியான் காரணம் அவனால் காட்ட முடியாததால் அவனை அவமதித்து சொல்லால் கொல்கிறான். கர்ணன்மேல் ஏன் பீமனுக்கு அவ்வளவு சினம்? தருமனுக்கு குரு நெறிநூல்கள், விஜயனுக்கு வழிகாட்டி கண்ணன் என்றால் பீமன் பாடம் கற்றுக்கொள்வது காட்டிடம். காட்டு விலங்குகளுக்கு இருக்கக்கூடிய உள்ளுணர்வு அவனை வழிநடத்தியிருக்கிறது. பீமனின் உள்ளுணர்வு பாண்டவர்களுக்கான எதிரியை கர்ணனிடம் கண்டுகொள்ளுகிறது. ஒரு பாம்பு தன் எதிரியாக கீரியை காணுவதைப்போல மிக இயல்பாக அதை அறிகிறான். தன்னை கொல்ல நடந்த முயற்சியில் பாண்டவர்களுக்கு எதிரிகள் உருவாகிக்கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கிறான் தானும் விஜயனும் மட்டும்தான் பாண்டவர்களின் அரண் என அவனுக்கு தெரியும். வில் வித்தையில் விஜயனை விஞ்ச ஆள் ஏதுமில்லாத நிலையை கர்ணனின் வரவு கலைத்துவிடுகிறது. இதை கர்ணனின் வரவு ஊர் முழுக்க ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பின் மூலம் அவன் அறிந்திருப்பான். துரோணர் விஜயனிடம் அஸ்வத்தாமனை கொலைசெய்யக்கூடிய ஆயுதத்தை காண்பதைப்போல், பீமன் விஜயனை கொலை செய்யக்கூடிய ஆயுதமாக கர்ணனை அறிகிறான். துரோணர் விஜயனை வாக்களிக்க வைத்து தன் பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறார். பீமன் கர்ணனை அவமதித்து அப்புறப்படுத்துவதன் மூலம் விஜயனின் வருங்கால ஆபத்தை தவிர்க்க எண்ணுகிறான்.
இதையெல்லாம் பீமன் உள்ளுணர்வில் அறிந்தது என்பதால் இதை அவனால் பிறருக்கு விளக்கமுடியாது.
என்னைப்பொறுத்தவரை இதுவே பீமனின் கர்ணனை அவமதிக்கும் செயலுக்கு காரணமாக தெரிகிறது.
அன்புடன்
த.துரைவேல்
அன்புள்ள துரைவேல்
மகாபாரதம் போன்ற ஒரு செவ்வியல் நூலை நாவலாக்கும்போது வரும் பெரிய அறைகூவல் ஒன்றுண்டு. செவ்வியல் ஆக்கங்கள் மிகப்பெரிய வாசக இடைவெளிகளை உருவாக்குகின்றன. காலம் தோறும் அந்த வாசக இடைவெளி விவாதிக்கப்பட்டபடியே உள்ளது. விடைகள் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை
நவீன வடிவில் எழுதுபவர்களில் பலர் அந்த இடைவெளிகளை ‘விளக்கி’ தங்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவை இடைவெளிகளை நிரப்புகின்றன, புதிய இடைவெளிகளை உருவாக்குவதும் இல்லை. ஆகவே அவை மகாபாரத விளக்கங்களாகவே நின்றுவிடுகின்றன. ஒரு உண்மையான செவ்வியல் படைப்பு வாசக இடைவெளிகளால் ஆனதாகவே இருக்கும். வாசகன் தன் வாசிப்பனுபவத்தால், வாழ்க்கை அவதானிப்பால் நிறைத்துக்கொள்ளவேண்டிய இடைவெளி அது.
அத்தகைய இடைவெளிகளில் ஒன்று இது. மகாபாரதத்திலேயே பீமனின் இந்நடத்தை மர்மமானதாகவே உள்ளது.அதை ஒரு வாசகர் வெறும் சாதிக்காழ்ப்பு என புரிந்துகொள்ளக்கூடாதென்பதற்காகவே சமையற்கார முதுசூதரை அவன் ஏற்கும் காட்சி உள்ளது. அப்படியென்றால் இது என்ன?அந்த வினாவை வாசகன் ஆழமாக தன்னை நோக்கியே எழுப்ப வேண்டுமென நாவல் கோருகிறது.
எளிமையாக மகாபாரதத்தை விவாதிப்பது பயன் தராது. இந்நாவல் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு வாசகன் தன் வாழ்க்கை அனுபவத்தை அதில் போட்டுப்பார்க்கவேண்டும். நம் வாழ்க்கையில் மிகப்பெரும்பாலும் அதி தீவிர நடத்தைகள் நம் தர்க்கம் சார்ந்தவை அல்ல. நம் ஆழ்மனம் சார்ந்தவை. நம்மை மீறியவை. நடந்தபின்னர் ஏன் நடந்தது என நாமே யோசிப்பவை. நம் கட்டுக்கடங்காத சினம் வெறுப்பு வஞ்சம் எல்லாமே அப்படித்தான்
நாவலில் அந்தக்குறிப்புகள் கொஞ்சம் பூடகமாக உள்ளன. கர்ணனை பீமன் முதலில் அணுக்கமாகக் காணும் இடம் எது? அப்போது அவன் குந்தியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான், பரவசத்துடன். அப்போது இளையவர்கள் ஓடிவந்து அவனை மூத்தவரே என அழைக்கிறார்கள். அங்கு தொடங்குகிறது
ஜெ