Wednesday, July 9, 2014

தருமனும் விதுரனும்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

திருதராஷ்டிரன், பாண்டு இருவருக்கும் அன்பு நிறைந்த பெரும் பாசத்திற்கு உரிய சகோதரன் விதுரன். அவர்கள் இருவருமே தங்கள் அகங்களை திறந்துக்காட்டக்கூடி அளவுக்கு சகோதரபாசத்தில் உறைந்தவர்கள். 

குந்தியை மணந்தபின்பக்கூட பாண்டு, சூதகுலத்தவர்கள் வருவது தெரிந்து இருந்தால் விதுரனையும் அந்த சுயம்வரத்தில் கலந்துக்கொள்ள சொல்லியிருப்பேன் என்று பாண்டு சொல்கின்றான். அப்படிப்பட்டப்பாண்டு தருமனிடம் விதுரனைப்பற்றி சொல்லாமல் இருப்பானா? அவனைப்பற்றிச்சொல்லும்போதெல்லாம் எனது சகோதரன் உனது சித்தப்பா என்றுதானே சொல்லி இருப்பான். தருமன் மனதிலும் அவன் சித்தப்பா என்ற பிம்பமாகத்தான் இருப்பான். அறிவால் உயர்ந்த தனது சித்தப்பா என்றுதான் உள்வாங்கி இருப்பான் அப்படி இருக்க விதுரனை ஏன் உறவின் ஆழ்த்தாமல் “அமைச்சர்“ என்று தள்ளியே வைக்கின்றீர்கள். தருமன் அப்படி நடந்துக்கொள்வானா? தருமன் பாசத்தில் கட்டுப்பட்டவன் அல்லவா? 

தருமன்(யமன்) கையில் உள்ள பாசக்கயிறுதானே தருமனின் பாசமும்கூட. நன்றி. 

ராமராஜன் மாணிக்கவேல்



தருமன் எந்நிலையிலும் அரசமுறைகளை விட்டுக்கொடுக்காத பிறவிச் சக்கரவர்த்தியாகவே மகாபாரதத்தில் வருகிறான். எளிய பாசக்காரனாக அல்ல. அதை பாண்டுவின் மரணத்திலேயே அவன் நடத்தை காட்டுகிறது

ஜெ