ஜெ
மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
நூற்றுக்கணக்கான பெட்டிகளுடன் ஒரு பெரிய ரயில் நகர்ந்து போவது மாதிரி இருக்கிறது. சிலசமயம்
ஒரு பெரிய நகரத்தை பார்ப்பதுமாதிரி உள்ளது. பீஷமரில் தொடங்கி விதுரன் வரை ஒரு கதை.
அப்புறம் பெண்களின் கதை. இதை எப்படி தொகுத்துக்கொள்வது என்று ஒரு பெரிய பிர்மிப்பை
வாசித்தபிற்பாடு அடைதேன். எந்த மையம் இதிலே அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது
என்று ஆச்சரியமாக இருந்தது
சாமி
அன்புள்ள சாமி
மழைப்பாடலுக்கான பின்னட்டை
வாசகம் இது:
*
மகாபாரதத்தின் துன்பியல்
உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும்
நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடி இருக்கும்
புல்வெளியான யாதவர்நாடு. காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின்
பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிறது. அவர்களுக்குப்பின்னால்
அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்
அன்னையர் உணர்ச்சிக்களத்தில்
நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதிகாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும்
சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது
மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள்,
வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல் இது
*
இதுதான் மையத்தைச் சுருக்கிச் சொல்வது. ஆனால் இது
ஒரு தொடக்கம். இந்த மையச்சரடைக்கொண்டு நாவலை தொகுத்தபிறகு ஒவ்வொரு கதாபாத்திரம், நிகழ்ச்சிகள்
வழியாக கலைப்பதும் விரிப்பதும் தான் சிறந்த வாசிப்பாக இருக்கமுடியும்
ஜெ