Saturday, July 19, 2014

பொற்கணம் - ஏ வி மணிகண்டன்

ஜெ,

இப்பொழுது வந்து கொண்டிருக்கும் கலிங்கபுரி பகுதியில் நீங்கள் கதை சொல்லும் முறை அதி அற்புதம். இந்திர விழாவின் தேவையை குறிப்பிடும் இடங்களை பாரதத்தில் அர்ஜூனனின் இடமாகவே பார்த்தேன்.
அதை வைத்து அவனை அறிமுகப்படுத்தி, கூடவே அர்ஜுனனை பின்னாளில் அர்ஜுனனாக ஆக்கப்போகும் அனைத்து காரணங்களுக்கும் உளவியல் நோக்குக் காரணங்களையும் முன் வைத்து ஆரம்பித்து இருக்கிறது கலிங்கபுரி.

குதிரையை வைத்தே குரு சிஷ்யன் உறவையும், வித்தைக்கும் வித்தைக்காரனுக்கும் உள்ள உறவு, அர்ஜுனனின் உளவியல் என மூன்று  வட்டங்களையும் விவரிக்கும் அதே நேரத்தில் மூன்றும் வெட்டிக் கொள்ளும் தளத்தில் வைத்து வித்தையையும், இளமையையும் அவை தரும் திமிரையும், அவற்றின் வழியாக வாழ்க்கையையும் விரித்து செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கிறது.

குருநாதர்களும் மாணவர்களும் பிறந்து இறந்துகொண்டே இருப்பார்கள். வித்யாதேவி என்றென்றும் வாழ்வாள். அவள் வெல்லவேண்டும், பிறர் அனைவரும் தோற்றாலும் சரி” என்றான்.
பிரபாகரர் “ஆம், இதைத்தான் அன்னை விரும்பியிருந்தார்கள். இன்று மாலையே சென்றுவிடுவார்கள் என எண்ணுகிறேன்” என்றார். “அன்னை விரும்புவது வரை இவள் இங்கே நிற்கட்டும்” என்றார் சந்திரசூடர். பிரபாகரர் “இவள் பெயரென்ன?” என்றார். குட்டியின் மயிரடர்ந்த மண்டையை அடித்து “எட்டு நாட்களுக்கென்றால் மிக உயரம். அன்னையைவிட உயரமான பெரும்பிடியாக வருவாள்” என்றார். “ஆம், இவள்தான் இதுவரை இங்கே பிறந்தவற்றிலேயே பெரிய யானைக்குட்டி” என்றார் சந்திரசூடர். “என்ன பெயர் இவளுக்கு?” என்றார் பிரபாகரர். “இன்னும் பெயரிடவில்லை” என்றார் சந்திரசூடர். “என்ன தயக்கம்? இவள் பெயர் காலகீர்த்தி. மூதன்னையர் மறையக்கூடாது. அவர்கள் அழிவற்றவர்கள்” என்று பிரபாகரர் சொன்னார்.

ஒவ்வொரு குதிரைக்கும் அதற்குரிய அஸ்வபதி உண்டு. இறந்த குதிரையின் பிடரிவிட்டிறங்கும் அஸ்வபதி காற்றுவெளியில் தன் அடுத்த குதிரையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறான். தன்னை தான் உணர்ந்து திமிரெழுந்து பிடரி சிலிர்க்கும் குட்டிக்குதிரைமேல் பாய்ந்தமர்ந்துகொண்டு அவன் களிக்கூச்சலிடுகிறான்.
அர்ஜுனன்தான் உச்சமாக இருப்பான் என்று எண்ணினேன், அவன் வழியாக வித்யா ஞானத்தை மேலாக முன் வைத்து விட்டீர்கள். ஒரே ஒரு குதிரையோ அல்லது யானை மட்டுமோ கூட  போதும் உங்களுக்கு அதை வைத்தே மொத்த மானுட குல வரலாற்றையும் சொல்லும் பாரதமொன்றை எழுதிவிட முடியும் உங்களால்.

ஏ வி மணிகண்டன்


அன்புள்ள மணிகண்டன்,

சில விஷயங்களை படிமங்கள் வழியாக மட்டுமே தொடமுடியும் என்ற எண்ணம் எழுத எழுத வந்துகொண்டிருக்கிறது. சைதன்யா A என்னும் முதல் எழுத்தை ‘கண்டுகொண்ட’ பரவசத்தருணத்தை ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு நூலில் எழுதியிருந்தேன். அத கணம் ஒரு தெய்வமுகூர்த்தம்

ஜெ