Wednesday, July 9, 2014

முதற்கனல் காமக்கனல்

அன்புள்ள திரு.ஜெ.. வணக்கம்

 “முதற்கனல் வடிவம்” கட்டுரையும். முதற்கனல் சில வினாக்களும். முதற்கனல் நாவலை நன்றாக புரிந்துக்கொள்ள வழி செய்தது. முதற்கனல் தன்னளவில் முழுமையான நாவல் என்பதுபோலவே 50பகுதிகளும் தன்னளவில் முழுமையான சிறுகதையாகவும். கவிதையாகவும் இருந்தது. நன்றி
முதற்கனல் –கண்ணீர் கனல் என்பதை சுட்டிக்காட்டி உள்ளீர்கள். சரியான பொருள் பொதிந்த விளக்கம்.  
நான் முதற்கனலை-காமக் கனலாகவே  காண்கின்றேன். மனிதன் நெருப்பைக்கண்டு அறிவதற்கு முன்பே பெரும் நெருப்பாக தன்னை எரித்த காமத்தை கண்டு இருப்பான் என்ற பொருளில்தான் அதை எழுதி இருக்கின்றீர் என்று நினைத்தேன்.
மனஸாதேவிக்கும் ஜகத்கருவுக்கும் இடையில் இருக்கும் கடமையாகிவிட்ட காமம்
அத்ரிகை மீது சத்தியவான் கொண்ட காமம்
சுனதையின் மீது பிரதீபன் கொண்ட காமம்.
சத்தியவதி மீது சந்தனுக்கொண்ட காமம்
அஸ்ருபிந்துமதி மீது யயாதிக்கொண்ட காமம்
அம்பையி்ன மீது பீஷ்மனின் அகம் கொண்ட காமம்
இதற்கெல்லாம் மேலாக வியாசனின் விழிகளில் தீராதக் காமம்
தட்சகனும் தட்சகியும் கொள்ளும் 9-நிலையோகம், அவர்கள் இருவரும் தலைமாறி கிடக்கும் போதும், இருவரும் இரண்டாக இருக்கும்போது முழுமையை உணரும் பெரும் காமம்
அம்பிகை விசித்திரவீரியன் இடம் உணரும் காதலால் காமத்தில் இருண்டுபோகும் தருணம்.
கற்பனையில் காமம் கொண்டு வெளுத்துப்போகும் அம்பாலிகை
ராஜதந்திரம் என்னும் ராஜநீதிவழியாக வசியம் செய்து காமம் கொள்ளவைக்கும் அறமீறல்காமம்
விதை(விதுரன்) ஒன்றைத்தருவதே தன்வாழ்வின்  வனம் உருவாகிவிட்டதை உணந்து மகிழ்வடையும் சூதராணி காமம்
அம்பை தன் கருப்பையின் சிறப்பறியும் கனத்தில் பீஷ்மன்மீது கொள்ளும் காமம்.
முற்றாக பராசுரமுனிவரின் பறக்கும்யானைக் கனவால் மச்சக்கந்தியிடம் கொள்ளும் கவிதையுணரும் காமம்
நாவல் முழுவதும் காமம் என்னும் நெருப்புதான் எரிந்து எரி்ந்து அஸ்தினாபுரியை சுற்றி வளைக்கிறது. முதற்கனல்-காமக்கனல் என்பது எனது எண்ணம்.
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுக்கும் மருண்டு

இனி பெருங்காமத்தின் கனல் கொடியில் பூக்கும் ஒளிமலர்களும் நாவலை அழகும் வண்ணமும் கொள்ள செய்கின்றன.

மகள் சதிமீது தந்தை தட்சன் வைக்கும் பாசம்
மகன் விசித்திரவீரியன் முன்பு கன்னியாய் உணரும் சத்தியவதி
அம்பை என்னும் தங்கைக்காக நிருதன் என்னும் அண்ணன் கொள்ளும் பித்துநிலைப்பாசம்
முலைதந்த அம்பைக்கு உயிர் தரும் சிகண்டியின் வெறிகொண்ட பாசம்
சத்தியவானுக்காக எமன்வரை செல்லும் சத்தியவதியின் பொன்வண்ணக்காதல்
கௌரன் என்னும் சாதப்பறவைக்கும் சுப்ரைக்கும் இடையே உள்ளக்காதல்(ஒரு நாளைக்கு நூறுமுறை உணவுடன் வந்தது.கிடைத்ததில் 7ல் ஒரு பங்கை மட்டும் உண்டது)
சுப்ரை தன் குஞ்சுகளுக்கு தன்னையே உண்ணக்கொடுத்தது


பெரும் கனலும், பெரும் கனலில் பூக்கும் ஒளிமலர்களும் நாவல் முழுவதையும் வனமாக்கிக்கொண்டே செல்கின்றது.

கதையின் பாச்சல். தத்துவம், இயற்கை வருணகை, கவிதைத்தருணங்கள், நீதி. அறம், மனப்போராட்டம் என நாவலை விரித்துக்கொண்டே செல்லலாம். முற்றாக எரியும் காமமே கனலாக வடிவெடுத்து உருவம் கொண்டு உள்ளதுபோல் உணர்கின்றேன்.

தமிழ் உலகில் காலத்தை வெல்லும் அற்புத நாவல். நன்றாக மொழிப்பெயர்ப்பு செய்தால் மானிட உலமே பெரும்நலம் பெறும்.


நன்றி

வாழ்க வளமுடன். 

ராமராஜன் மாணிக்கவேல்