Wednesday, July 9, 2014

சாங்கியமந்திரம், கர்ணன்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். வெண்முரசு நன்றாக செல்கிறது. நீங்கள் தொடங்கிய போது சொன்னது போல் அதுவாக நம்மை இழுத்து கொண்டு செல்கிறது. தங்களிடம் சில விஷயங்கள்.

1) பக்திப்பாடல்மரபு (http://www.jeyamohan.in/?p=316) கட்டுரை படித்தேன். நல்ல நகைச்சுவையாக இருந்தது. படிக்கும் போது வெண்முரசில் வரும் சூதர்களின் நினைவே வந்தது.

2)  வண்ணக்கடல் - 9ல் "சாங்கியத்தின் அன்னமந்திரம்" தமிழாக்கத்தை கொடுத்திருந்தீர்கள். வண்ணக்கடல் – 13ல் தருமன் கிருபரிடம் சொல்வதாக உள்ள வாக்கியங்கள் என்ன மந்திரம்? தாங்கள் மந்திரங்களை தமிழாக்கம் செய்யும் பொது அந்த மந்திரத்தின் பெயரையும் கொடுத்தால், மந்திரங்களை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

3) வண்ணக்கடல் – 3ல் சூதர்கள் குந்தியை பற்றி பாடும் போது கர்ணனின் பிறப்பை பற்றி பாடுகிறார்கள். இது குந்தியை சேர்ந்தவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். சூதர்கள் பாடுகிறார்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்தது போல் ஆயிற்றே. இந்த இடம் மட்டும் சற்று முரணாக இருப்பது போல் தோன்றியது. 

 நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.



1. வெண்முரசில்  ஏதேனும் மந்திரம் உண்மையிலேயே இருப்பது என்றால் அது சொல்லப்பட்டிருக்கும். எந்நூலில் உள்ளது என்று. சொல்லப்படவில்லை என்றால் அது நானே எழுதியது. மூலநூல் எதிலாவது உள்ள கருத்துக்க்ளை மறு ஆக்கம் செய்திருப்பேன்

2. வியாச மகாபாரதம் கர்ணனின் பிறப்பு ‘பரமரகசியமாக’ இருந்தது என்று சொல்லவில்லை. வனபர்வம் 308 முதலான அத்தியாங்களை பார்க்கலாம். கர்ணன் இருக்குமிடம் ஒற்றர்கள் மூலம் குந்திக்குத் தெரியும். வசுதேவனுக்கும் அவன் மகன் கிருஷ்ணனுக்கும் தெரியும். பொதுவாக அது ஓர் அரசரகசியமாக இருந்தது. ஆகவே அங்காடியில் பாடப்பட்டிருக்கவும் கூடும்

ஜெ