ஓம் ஸ்ரீமுருகன் துணை
வணக்கம் திரு.ஜெயமோகன்
முதற்கனல் 10 தாட்சாயணிகள் அழிவதில்லை
“அகல்விழி அன்னை” என்று அன்னை ஸ்ரீவிசாலாட்சியை சுட்டுவது எவ்வளவு அழகு, எவ்வளவு பொருள் பொதிந்தது.
யுகம் யுகம்மாய் மண்டிக்கிடக்கும் இருளை விரட்ட அகலின் விழிபோதும். அகலின் விழி என்பது அங்கேயே இருக்கக்கூடியதா? அது பட்டுப்பட்டு தொட்டு தொட்டு பரந்து விரிந்து விசாலம் ஆகக்கூடியது.
மேனியே அழனால அண்ணலுக்கு அந்த அகலில்தான் மூலசக்திவிதையிருக்கிறது. அந்த அழலுக்குள் இந்த அகல் கலந்து ஒன்றாகித்திகழ்கின்றது. அற்புதம் அகல்விழி அன்னை நாமம்.
தீ அறியும் (கிளிசொன்னக்கதைகள்) தாக்ஷாயணி, வெண்முரசு தாக்ஷாயணிக்கும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள வித்தியாசம். வளர்வதுதானே விதைக்கும் கலைக்கும் அழகு. அழகான வளர்ச்சி.
“கடைசியாக உதயத்தின் முதல் பொற்கதிரில் பிரசூதியின் பேரழகைக் கண்டு மனம்கனிந்து ‘தோழி’ என அவளை உணர்ந்து அளித்த முத்தம் ஸதி என்னும் அழகியபெண்மகவாகியது.” மனையாளை தோழியாக தட்சன் நினைத்தாலேயே, அவன் பெற்ற பிள்ளை தோழிபோலவே மாப்பிள்ளையுடன் இருக்கின்றது. பிள்ளைப்பெறும்போது, குறிப்பாக கணவன் மனைவியை நடத்தும்விதம் ஒப்பு உயர்வு அற்ற மேன்மையில் இருக்கவேண்டும் என்பதை காட்டும் காட்சி.
ஆயிரம் தலைக்ககொண்ட தட்சன் ஈராயிரம் விழிக்கொண்டு பெண்ணழகையும்பொருளழகையும் தேவர்களின் அழகையும் மகளின் அழகு வழியாகவே அளக்கிறான். தெய்வங்களை மகள் வழியாகவே வணங்கினான். பாசம் என்னும் பேரலை ததும்பும் மனசமுத்திரம் தட்சன்.
எத்தனைப்பெரிய பாசமாக இருந்தால் என்ன? எத்தனை விழிக்கொண்டு நேசித்தால் என்ன? தன்தோல்வி வரும்போது மனிதனிடம் மிஞ்சி இருப்பது குரூரம் மட்டும்தான். மாளிகைக்கதவு மட்டும் அல்ல, மனக்கதவும் சாத்தப்பட்டு குரூரம் என்னும் தாழ் கொண்டு இருக்கி அறையப்படுகிறது.
“உன் நினைவிருந்த இடத்தையெல்லாம் விஷம் கொண்டு நிறைத்துவிட்டேன்.களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்றுதட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான்.
குரூரம் தான் மனதில் நிறைகின்ற விஷம்.
“அவன் மூடியவாசலில் சுருண்டு கிடந்து ஆயிரம் வருடங்கள் காத்திருந்தாள் ஸதிதேவி” குரூரத்தின் பிடியில் அன்புக்குரிய சீவன் அத்தனையும் இழக்கும் அவலம்.
“அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள்”-நின்று நெஞ்சில் நிலா ஒழுகும் அழுத வரிகள்.
அம்மாவின் அழகு, தமக்கை தங்கைகளின் அழகு, ஆசிரியையின் அழகு, தோழியின் அழகு, காதலி மனைவி அழகு, வழியில் வந்தவர்களின் அழகு, இத்தனை அழகையும் இழுத்து வந்து மகளில் கொட்டி மகளை முழுமையாக்கும் ஒரு மாய சிற்பி மனதுக்குள் கனமின்றி வசத்து வருவதை அப்பாக்கள் மட்டுமே அறியமுடியும். அப்பாவின் கண்வழியாக மகள் அந்த சிற்பியை அறிகிறாள். அந்த விழிகளை பரித்து எரியும்போதே அவள் மணவாளனை அடைகிறாள்.
மகள் மணவாளன் இல்லம்போகும் போது தாயின் கண்ணில் வெளிச்சம் , தந்தையில் கண்ணில் இருள். “இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம்விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்”
“தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது”-ஈராயிரம் விழியில் வழியும் அந்த பாசத்தை தனது இருவிழில் காட்டும் அந்த வாகைசூடுபவன் கழுத்தில் மகள் மாலை சூடுகிறாள். பெண்ணின் காதலை பெற்றவர்கள் அறிய முடியாததன் உண்மை புரிகிறது.
ஓராயிரம் தலையில் ஈராயிரம் விழி இருந்து என்ன? விஷத்திற்கும் விஷசமாகும் ஆலாலகண்டனானால் என்ன? ஸதியின் மனம் அறிய முடியாமல் சதிசெய்யும் ஆண்மைகள்.
பெற்றமகள் மனம்அறியா பாசம், கைபிடித்தவள் காதல் அறியா வீரம்,இரண்டையும் வெல்ல தியாகத்தை அன்றி வேறு ஒன்று இல்லை என்று தன்னையே தியாகம் செய்த ஸதி அனணயாத அகல்தான். கங்கை அலைமுத்தமிடும் தாமரைபாத அகல்விழி அன்னைக்கு என் சென்னி மண்ணிபட வணக்கம்.
பீமதேவன் பாசத்திற்கும், பிதாமகன் பீஷ்மனுக்கும் இடையில் மூன்று தீபங்கள் தியாக தீபங்கள் ஆக உள்ளது என்பைதை உள்ளுக்குள் உணர்ந்தாரோ அந்த சிற்பி “இன்று சதுர்த்தி….சூதர்கள் அகல்விழி அன்னையின் கதைகளைச்சொல்லிவருகையில் இன்று வந்தது தாட்சாயணியின் கதை”
காலம் காலமாய் பாசத்திற்கும் வீரத்திற்கும் இடையில் தாட்சாயணிகள் அழிவதே இல்லை. தீபங்கள் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்