Monday, July 7, 2014

முதற்கனல் தலைப்புகள் ராமராஜன் மாணிக்கவேல்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம் திரு.ஜெயமோகன்.முதற்கனல்-9. விரித்து வைத்த, எழுத்துகள் உறங்கும் காகித்தில் இருந்து ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று கால்கை முளைத்து, முப்பரிமாணம் காட்டி திகைக்க வைக்கிறது. எந்த சிலையை நான் அணைத்துக்கொள்ள?

ஒவ்வொன்றும் ஒரு காலசுழலை, உணர்ச்சி புயலை, விண்தொடு எழுச்சியை உண்டாக்கி அதிர வைக்கிறது. ஏன் இத்தனைப் பக்கங்கள் எழுதுகின்றீர்கள் என்ற கோபத்தை கூட உண்டாக்குகிறது(அஞ்சல் திட்டத்தில், பலபகுதிகளை தொகுத்து கொடுத்தால். படிக்கமுடியாது.அத்தனைக் கனம்). மணிகளை நாட்களை தின்றுவிடுகிறது. இனி ஒவ்வொரு பகுதியுடனும் கொஞ்சம் காலத்தையும் கடன்கொடுத்து அனுப்புங்கள்.

இனி வெணமுரசு
வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…இது ஒன்றுதான் உயிர் உள்ளவைகள் அனைத்தின் தாகமும். வளர்ச்சிக்கு இல்லை எல்லை, எனவே இந்த தாகம் நிறைவதும் இல்லை.

வளராமல் சிறுபுல்லாக இருக்கும்போது மாட்டின் குளம்பிலேயே மறைந்துவிட வேண்டி இருக்கிறது. வளர்ந்துவிட்டால் காலோடு தலைக்கு தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. பீஷ்மன் எல்லா திசைகளும் வளர்ந்ததாலேயே அவனுக்கு அணுக்கம் உடையவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். இது எவ்வளவு பெரிய மனிதசோகம். இந்த சோகத்தின் வேர் படர்ந்து விரிவதை வியாசன் போன்ற ஞானி ஒற்றை வரிச்சொல்லால் சிரிப்பு கலந்து சித்திரம் செய்கிறார். வாய் சிரிப்பு காற்றில் கரைந்து விடுகிறது. வாய்மையின் சிரிப்பு விதைகளாகி விடுகிறது. ஞானிகள் காரியம் கண்டு சிரிக்கவில்லை, காரணம் கண்டு சிரிக்கிறார்கள்.

பீஷ்மன் அணுகிப்பார்த்திருந்தால், காலம் பின்னும் வலையில் அவனுக்கான கண்ணி மட்டும், பெரிதாகி அதன் வழியாக தப்பித்த எல்லா மீன்களுக்கும் அவன் உணவாக இருந்திருக்கவேண்டியது இல்லை. எல்லா கண்ணிகளும் கண்ணியாகவே இருக்க, இவன் கண்ணிமட்டும் இவனை மாட்டவைக்கும் வலையாக வளர்ந்து நீள்கிறது.   இந்த வளையின் நீளத்தை சித்ரகர்ணி சிங்கத்தையும், கந்தினி என்ற பசுவையும் வைத்து அளந்து காட்டுவது அழகு. அழகு..ஆழம்..நீளம்…விரிவு.

இந்த வலையின் அழகை..ஆழத்தை..நீளத்தை..விரிவை பெரிதாக்கிக்கொண்டே செல்கின்றோம் என்பதில் வாழ்க்கை இருப்பதாய் நினைப்பது அஞ்ஞானம். அந்த அஞ்ஞானத்தை உடைக்கும் வித்தையை சொல்லும் வித்தை அழகு. ” “ஞானம்என்பது அடைவதல்லஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீசேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்” உள்ளுக்குள் விதையாக விழுந்து வனமாகும் வரிகள். அந்த வரிகள் சுட்டும் உண்மை சிலிர்க்க வைக்கிறது. விதையின் மென்மையோ திகைக்கவைக்கிறது. விதைக்குள் ஆலமரம்போல.

“சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்என்றார் பீஷ்மர்”
நீங்கள் மானிட குலத்தின் எளிய மனிதன்மீது வைக்கும் அன்பால் விளைந்த வரிகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வெயில் மண் அடையா ஒரு இளம்காலையில், அப்பாவும் நானும் திறக்கப்படாத ஒரு கடையின் ஓலை பந்தலில் படியில் உட்கார்ந்து இருந்தோம். சற்று நேரத்திற்கு பிறகு, நான்கைந்து இளைஞர்கள் அங்கு பேசி சிரித்தப்படியே வந்து சற்றுத்தள்ளி தரையில் உட்கார்ந்துக்கொண்டார்கள். அதில் ஒரு திருநங்கை. அவன் வெகு தூரம் பறந்து களைத்து பிறந்த மண்வந்து, பிறந்த வீடு புகமுடியாமல் இருப்பன். ஒவ்வொரு நண்பனையும், உறவையும் அனைத்து கொஞ்சி சிரித்து அழுது பேசுகிறான். அப்பாவும் நானும் எங்கள் பேச்சை நிறுத்திவிட்டோம்.
சாலையில் எதிர் பக்கத்தில் ஒருவன் போகிறான். அத்தனை பேச்சிலும், சிரிப்பிலும், அழுகையிலும் அவன்தான் அவனைப்பார்த்தான். அவனை அடையாளப்படுத்திக்கொண்டு. ஐயம்போ்கி கொண்டு அழைத்கிறான். அவன் கேளாததுபோல் செல்கிறான். அருகில் இருந்தவர்கள் “விடு..விடு..உன் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் சண்டை“ என்கின்றார்கள். இவன் சீறிப்பார்த்து “அதா..ல..” என்றவன். பறந்துபோய் அவனைக்கட்டிக்கொண்டான். இவர்களும் எழுந்துப்போய்விட்டார்கள். அவர்கள் போனப்பின்பும் என்னக்கு பேச்சு எழவே இல்லை.
தன் குடும்பத்தில்கூட இடம் இல்லாத அந்த  சாதாரண மானிட திருநங்கை அடைத்திருக்கும் இடத்தை எந்த சத்திரயன் எந்த ஆயுதம் கொண்டு வென்று அடைய முடியும்.  

அன்று சிபியாக இருந்த போது வெண்புற பேச்சு அறிந்த பீஷ்மன், இன்று பீஷ்மனாக இருக்கும்போது வெண்பசு பேச்சு அறியாது போனது ஏன்? இதுதான் காலம்பின்னும் வலையின் கண்ணியில் விழும் முடிச்சா? இந்த முடிச்சை அவிழ்க்கத்தான் தன்னை தேடி அலைகின்றானா மனிதன். கருவுற்றிருந்த கந்தினிஎன்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லைஎன்று சொல்லிக்கொண்டது.

இந்த ஓயாத ஆட்டம் யாரால் நடத்தப்படுகிறதோ? அவன் தெரிவதில்லை. ஆடாத நாம் ஆடுவதாய் மயக்கம் கொள்கிறோம். இந்த உண்மையை உரித்துக்ககாட்ட எவ்வளவு அழகான ஒரு நாடகம்.

சிங்கத்தால். பசுவால். “இந்த அறியாச் சுழல்பாதையில் மீண்டும் மீண்டும் நான்உன்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன்நம்மை வைத்து ஆடுபவர்களுக்குசலிக்கும்வரை இதை நாம் ஆடியே ஆகவேண்டும்’ என்றது சித்ரகர்ணி. ‘அழுஓலமிடு.நான் கர்ஜிக்கிறேன்ஆடத்தொடங்குவோம்’”

கிழச்சிங்கம் வளர்ப்பு பசுவைத்தூக்கிச்செல்வதுபோலத்தான், காசிநாட்டு இளவரசிகளை பீஷ்மன் தூக்கச்செல்வதும் என்பதை காட்டுகின்றீரா? அந்த சிங்கம் பசுவின் கருவை தின்று தன் அகங்காரத்தை தீர்ப்பதுபோலத்தான். காசிநாட்டு இளவரசிகளின் குலைக்குலையாய் தழைக்க இருக்கும் கருவைத்தான் பீஷ்மன் என்னும் கிழசிங்கம் திங்கக்கிளம்பி விட்டது என்பதை காட்டுகின்றீரா?. அதற்கு ஒரு முன்னோட்டாம்தான். பீஷ்மரின் ரதபயணத்தில் “சிம்மப்பிடரி என அவர்தாடியும் சிகையும் காற்றில் ததும்பின”

தன்அறம் என்பதும் அறமல்ல? படைத்தவன் பார்வைமுன் அப்படித்தானே!.
  
வியாசர் புன்னகையுடன் அவனை கைதூக்கித்தடுத்து “நில்சுதனே….பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம்ஆகவே சிங்கத்துக்குபசுவதையின் பாவம் கிடையாது” என்றார்பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்தபெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார்அதன்பின் அவர்ஒரு சொல்லும் பேசவில்லைவியாசருக்குத் தலைவணங்கியபின் நேராக தன் ரதத்தைநோக்கிச் சென்றார்.

இனி பீஷ்மர் மனிதன் இல்லை-சித்ரகர்ணி என்ற சிங்கம்.
அது பலிஉண்ணும் இடம் ஹரிதகட்டம் என்னும் புனிதமான படித்துறை.  காசிநாட்டு இளவரசிகள் திருமணமேடை ஏனோ ஹரிதகட்டமாக தெரிகிறது. ஆனால் அதில் புனிதம் இருக்கிறது.

வெண்முரசு-தலைப்பு, தலைக்காட்டும் பதிவு இன்று“பசுவைக்கொல்வதுதான்சிங்கத்தின் தர்மம்ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்றார்.பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பிவியாசரைப் பார்த்தார்”

நன்றி
வாழ்க  வளமுடன்
அன்புள்ள

ஆர்.மாணிக்கவேல்