Tuesday, July 15, 2014

செவ்வியலின் இயல்பு

அன்புள்ள ஜெயமோகன்,

முதற்கனலை மூன்றாவது முறையாக படித்துக் கொண்டிருக்கிறேன், காலையில் நீங்கள் தற்போது எழுதும் வெண்முரசின் தற்போதைய பாகமும் மாலையில் முதற்கனலின் ஒரு பகுதி என்று நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது.

எனக்கு முதற்கனலை விட்டு இன்னும் வெளியே வர இயலவில்லை, முக்கியமாக பீஷ்மரை விட்டு, முன்பு மகாபாரதம் படித்தபோதும், கர்ணன் படம் பார்த்தபொழுதும் கர்ணனின் குணாதிசயமே என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஆனால் முதற்கனலில் நீங்கள் உருவாக்கிய பீஷ்மரை இனிமேல் வேறு எந்த கதாபாத்திரமும் பின்னுக்குத் தள்ள முடியாது.

அவரைப் பற்றி வரும் வருணனைகள் எல்லாமே திரும்ப திரும்ப மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

1)  அவர் அஸ்தினாபுரிக்குள் நுழையும் இடத்தில் வரும் அவரைப் பற்றிய வர்ணனைகள்,

2)  பெண்கள் குளிர்ந்த கருப்பையால் எப்போதும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆண்கள் எரியும் சித்தத்தால் எப்போதும் கட்டுண்டிருக்கிறார்கள். நீயும் சுதந்திரனல்ல, உன் கைகளின் கட்டுகளை நீ உணரும்போது என்னை நீ புரிந்து கொள்வாய். என்னும் வரி

3) அம்பை பீஷ்மர் குறித்து அவரிடமே சொல்லும் கட்டுண்ட வேழம் போன்றவர் நீங்கள் என்ற வரி, மேலும் பல வரிகள்.

இதெல்லாம் எத்தனை முறை படித்தாலும் சுவையாக இருக்கிறது. 

இலக்கியம் படித்து எனக்கு பழக்கமில்லை, நான் முதன் முதலில் அறிமுகப்படுத்திக்கொண்ட இலக்கியம் வெண்முரசு தான், வெண்முரசில் உள்ள சிறப்பம்சமே இலக்கிய வாசிப்பு இல்லாத சாதாரண வாசகனுக்கும் திறக்கும் வாசல்களும் கதையமைப்பும் அதில் இருக்கும், நுணுக்கங்களை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு மேம்போக்கான கதையாக அது புரிந்துவிடுவதால் அவன் அதை நிச்சயம் மீள்வாசிப்பு செய்யும் வாய்ப்பு அதிகம், அப்பொழுது அதிக வாசல்கள் திறக்கும்.

நான் முன்பு ஊமைச்செந்நாய் உங்கள் தளத்தில் படித்தபொழுது எனக்கு அதைப் புரிந்துகொள்ளும் அளவு வாசிப்பு இல்லை, அது புரியாததால் சில காலம் உங்கள் தளத்துக்கு வரவே இல்லை, பின்னர் வெண்முரசின் அனுபவம் உங்கள் தளத்திலேயே என்னைக் கட்டிப் போட்டுவிட்டது. இப்பொழுது உங்களின் நடையையும், நீங்கள் பயன்படுத்தும் சொற்களையும் நீங்கள் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்களோ அந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ளும் அளவிற்கு பழகிவிட்டேன் என்று நம்புகிறேன் (உதாரணம்: குருவிமண்டை).

அடுத்ததாக தளத்தில் பிரசுரிக்கப்படும் வாசகர் கடிதங்கள், அவற்றின் வழியாகவே புதிய விஷயங்கள் பிடிபடுகிறது எல்லாக் கதைகளிலும். உதாரணத்திற்கு ”தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும் மாமனிதர்களால் தான் மானிடம் வெல்கிறது” என்ற சொற்றொடர் தான் மிக விரிவான ஒரு தளத்தில் விரிவது என்றும் அதுவே வெண்முரசின் மிக சிறப்பான வரியென்றும் எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் ஒரு நண்பரின் கடிதத்தில் “ஒரு கணமேனும் தன்னைப் பற்றி நினையாதவர்களுக்கே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்” என்ற வரியை சிலாகித்து எழுதியிருந்தார். நான் அதற்காக மறுவாசிப்பு செய்த போது தான் ”மலையுச்சியின் ஒற்றை மரத்தில் கூடும் தனிமை” என்பதைக் கண்டேன்.

மலையுச்சியில் இருக்கும் ஒற்றை மரம், அந்த மரத்தில் கனிகள் இருக்கலாம், அதில் பல பறவைகள் குடியிருக்கலாம், அம்மரத்தின் கீழே புழு பூச்சிகள் வாழலாம். மரத்தின் பட்டைக்குள்ளே உயிர்கள் இருக்கலாம். அம்மர நிழலில் மனிதர்கள் கூட வாழலாம். ஆனால் அந்த மரத்துக்கு இணையான, அது தன்னுடன் உரையாட, காற்றில் தன் தலையை ஆட்டி உரச இன்னொரு மரம் இல்லாத கொடுந்தனிமை. இப்படிப் புரிந்து கொண்டு இதனை பீஷ்மருடன் பொருத்திப் பார்க்கையில் உருவான ஒரு உணர்வை என்னால் விவரிக்கவே முடியவில்லை.

அவரைச் சுற்றி எத்தனை மனிதர்கள் இருந்தாலும் அவர் தன் தலையை சாய்த்து வாழ ஒரு மனிதன் இல்லை, எல்லோருடைய பாரத்தையும் தன் தோளில் சுமப்பவராகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கேதான் உணர்ந்து கொண்டேன். வெண்முரசு குறித்து ஒரே கடிதத்தில் எழுதிவிட வேண்டுமென்றே முயற்சித்தேன், ஆனால் ஞாபகங்கள் கட்டற்றவையாகவே இருக்கின்றன, எவ்வளவு முயற்சித்தும் ஒன்றாக திரட்டி எழுத முடியவில்லை.

இந்த வாசிப்பனுபவத்துக்காக உங்களுக்கு மிக்க நன்றி, என் தோழியின் திருமணத்திற்கு முதற்கனல் நூல் பரிசாக கொடுத்தேன், நான் கொடுத்த சிறந்த பரிசாக அதை எண்ணுகிறேன். மீண்டும் அடுத்த கடிதத்தில் உங்களோடு உரையாட ஆவலாய் இருக்கிறேன்.

--இப்படிக்கு
விக்னேஷ்.M.S

அன்புள்ள விக்னேஷ்

நன்றி

ஓர் இலக்கியப்படைப்பு நம்முடன் வாழ்நாள் முழுக்க கூடவருமென்றால் மட்டுமே அது இலக்கியம். அப்படி கூடவரும் படைப்பு அந்தரங்கமானதாகவும் மானுடப்பொதுவானதாகவும் ஒரே சமயம் இருந்துகொண்டிருக்கும்

வெண்முரசு ஒரு செவ்வியல்நூல். செவ்வியலின் அழகியல் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. அது யதார்த்தமாக அமையும், யதார்த்தத்தை கடந்துசெல்லும். கற்பனாவாத எழுச்சி கொண்டிருக்கும், பொதுவிவேகத்தின் நிகர்நிலையையும் கொண்டிருக்கும். அதன் இயல்புகள் என்னென்ன என்பதை அந்தந்த இடங்களின் தேவையே தீர்மானிக்கிறது

வெண்முரசில் தர்ம அதர்மங்களின் ஊசல் என்றே ஒவ்வொரு கணமும் நிகழ்கிறது. பல்லாயிரம் தட்டுகள் கொண்ட ஒரு தராசு. அதன் நடுமுள் யுதிஷ்டிரன். ஆகவே கணமும் அசைவிலாநிலை அவனுக்கு வாய்ப்பதில்லை. ஆனால் அவன் இயல்பில் அறத்தோன். ஆகவே அனைத்தையும் கடந்து ஒரு சமநிலைக்கு அவன் முயன்றபடியே இருப்பான்

வெண்முரசு முடிவடையும்போதுதான் யுதிஷ்டிரன் என்ற முள் நிலைகொள்ளும் என நினைக்கிறேன். அதுவரை உச்சங்கள் வீழ்ச்சிகள் என அவன் அலைந்தாடிக்கொண்டே இருப்பான்

வெண்முரசு போன்ற ஒரு செவ்வியல்நூலில் எந்தக்கதாபாத்திரமும் ‘யதார்த்தமானது’ ‘மானுடத்தன்மை கொண்டது’ அல்ல, எல்லா கதாபாத்திரமும் செறிவூட்டப்பட்டதுதான். குறியீட்டுத்தன்மை கொண்டதுதான்

யுதிஷ்டிரன் அறத்தோன் என்ற குறியீடு. ஓர் அறத்தோன் இப்புவியில் அடையத்தக்க எல்லா சோதனைகளும் அவனுக்கு வரும். எல்லா சஞ்சலங்களும் அவனுக்கு உருவாகும். ஒருபக்கம் அறத்தோனுக்கு இருக்கும் பற்று. இன்னொரு பக்கம் அறத்தோனுக்கு இருக்கும் துறவு. இரண்டுக்கும் நடுவே அவன் அலைக்கழிவான்

யுதிஷ்டிரன் போன்ற அறத்தோனின் சிக்கலென்னவென்றால் அவன் அறத்தை நிலைநாட்டுவது தன் கடமை என நினைப்பதுதான். அதிலிருந்தே அவனுடைய எல்லா சிக்கல்களும் உருவாகின்றன. அதிலிருந்து அவன் மீளும்போது அவன் நிறைவடைவான்

வெண்முரசு உங்கள் கூடவே எப்போதும் இருக்குமென நினைக்கிறேன்

ஜெ
\