Monday, July 7, 2014

வண்ணக்கடல் உருவகங்கள்

காஞ்சி நகர் வந்தவுடன் நகைச்சுவை அருமையாக இருக்கிறது. சூதர்களின் மொழி பற்றி புரிதல் அதிகமாக இந்த பகுதி துணை செய்கின்றது.
காவியம்,வரலாறு இரண்டும் விதியின் வாலின் மேல் இருக்கிறது .
இந்திய பெரு நில உலாவாக வண்ணக்கடல் செல்கிறது. இளநாகன் அஸ்தினாபுரம் சென்று சேருவான் என எண்ணுகின்றேன். இளநாகன் பாத்திரம் வண்ண கடலின் prelude ஆக இருக்கும் என்று நினைத்தேன், இப்போது நீங்கள் அதை கதையில் பயன்படுத்தும் முறை கட்டியகாரன் கதையின் நடுவில் வந்து பேசும் முறை போல் உள்ளது.
நன்றி
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
வெவ்வேறு இடங்களைத் தொட்டுச்செல்லும் கதையை ஒருங்கிணைக்கும் உத்திதான் இது. நன்றி
ஜெ
அன்பின் ஜெ
வண்ணக்கடலில் வரும் தென்மதுரை, புகார், காஞ்சி நகர் வருணனைகள் நெஞ்சை அள்ளுகின்றன. என்னதான வட இந்திய நகரங்கள் வருணிக்கப்பட்டிருந்தாலும் தென்னகத்தின் சித்திரம் நம்முடையது என்ற மன எழுச்சியை உருவாக்குகிறது. அதிலும் நீங்கள் கொடுத்திருக்கும் சித்திரம் மிக நுணுக்கமானது. நேரில் பார்த்ததுபோலவே உள்ளது. ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு விதமான அமைப்புடன் உள்ளன. அந்த வேறுபாடேகூட பிரமிப்பை அளிக்கிறது.
எனக்கிருக்கும் சாதாரணமான கேள்விகள். நேரமிருந்தால் பதிலளியுங்கள். இந்த தகவல்கள் மூலமகாபாரதத்தில் உள்ளவைதானா? தென்மதுரை குமரிக்கண்டத்தில் இருந்த நகரம்தானே? குமரிக்கண்டம் பற்றி மகாபாரதம் என்ன சொல்கிறது? சு.கி.ஜெயகரன் அப்படி ஒரு குமரிக்கண்டமே கிடையாது என்று ஒரு நூல் எழுதியிருக்கிறாரே?
முத்து
அன்புள்ள முத்து,
பழைய இலக்கியங்களில் நகர்வருணனைகள் உள்ளன. அவற்றை ஒட்டி, ஓரளவு கற்பனையை விரித்தெடுத்துக்கொண்டு இந்த வர்ணனைகள் அளிக்கப்படுகின்றன. மகாபாரதத்தில் சேர,சோழ பாண்டியர்களைப்பற்றிய தகவல்களும் நகர்களைப்பற்றிய குறிப்புகளும் உள்ளன. சகாதேவனின் தென்னகயாத்திரையில் காஞ்சி, மதுரை சொல்லப்படுகின்றன.
தென்மதுரை, குமரிக்கண்டம் இரண்டையும் குழப்பிக்கொள்ளவேண்டியதில்லை. இன்றைய குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட ஒரு நிலப்பகுதி இருந்தது என்பதும் அங்கே பஃறுளி ஆறும் குமரிக்கோடு எனும் மலையும் அருகே மதுரை நகரும் இருந்தன, அவை கடல்கொண்டு அழிந்தன என்பதும் பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் சொல்பவை.
இக்குறிப்புகள் முற்றிலும் கற்பனையானவை என்று உறுதிபடச்சொல்லுமளவுக்கு விரிவான கடலடி அகழ்வாய்வுகள் ஏதும் இதுவரை செய்யப்படவில்லை.
அதேசமயம் இக்குறிப்புகளையும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரம்மஞானசங்கம் உருவாக்கிய சில தொன்மங்களையும் கலந்துகொண்டு ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு பெரிய நிலப்பகுதி கடலுள் மூழ்கியது என்பதற்கான புவியியல் ஆதாரம் இல்லை என்பது உண்மை.
சு.கி.ஜெயகரனே இன்றைய கடல் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவுக்கு கடல்நீட்சி இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறார். அன்றைய நிலமுனையும் குமரிமுனைதான்.
இன்றைய குமரிமாவட்டத்து பறளியாறே பஃறுளியாக இருக்கலாம். பல துளி என்ற பெயருக்கேற்றபடி அது ஒரு சிற்றாறுதான். அதன்கரையில் இன்றையகுமரிமுனைக்கு அப்பால் மதுரை இருந்திருக்கலாம். இன்றைய பெரும்பாறைமுகடுகள் அன்று குமரிக்கோடு [குமரிமலை] என அழைக்கப்பட்டிருக்கலாம் – இவையெல்லாம் குறைந்தபட்ச சாத்தியங்கள் என்ற அளவிலேயே நான் புனைவில் கையாண்டிருக்கிறேன்.
மகாபாரதம் சொல்லும் நிலம் பெருமளவுக்கு மாறியிருக்கிறது. முக்கியமாக அன்றைய கடலோரம். கங்கைமுனையின் தாம்ரலிப்தி முதல் பூம்புகார், வழியாக மறுபக்கம் துவாரகை வரை கடலில் மூழ்கியிருக்கின்றன. ஆகவே தென்மதுரையும் மூழ்கியிருக்கலாம் என்று எடுத்துக்கொள்லலாம்
அதையே நதிகளைப்பற்றி எழுதியிருப்பதிலும் நீங்கள் பார்க்கலாம். மகாபாரதம் சப்தசிந்து என்றுதான் சொல்கிறது. இன்றிருப்பவை ஐந்து நதிகள் – பஞ்சாப். பிற இரண்டும் என்ன என்பதில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஏழுநதிகளாகவே சொல்லியிருப்பேன். மகாபாரதப்பெயர்களுடன்.
ஜெ