Saturday, July 19, 2014

கொரிய முழுக்கோழி சமைப்பது எப்படி - பகடி எம்.டி.முத்துக்குமாரசாமிசாம்கைடாங் (SamGyeTang) என்ற கொரிய வேகவைத்த முழுக்கோழி சமைப்பதும் சாப்பிடுவதும் 


கோழிகளைப் போன்ற அப்புராணி பறவைகளாக இருந்தாலும் சரி இருவாட்சிகள் போன்ற அரிய வகைப் பறவைகளாக இருந்தாலும் சரி பறவைகளைப் பார்த்தவுடனேயே வாயில் ஊறுகிற எச்சில் அனுபவ ஆரோக்கிய அறிவு சார்ந்தாகும்; அந்த அனுபவ அறிவினை வெகுமக்கள் பறவையான கோழிகளிடத்தே பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. வேகவைத்த முழுக்கோழி உணவினை, ஜெயமோகனின் மகாபாரதம் வாசிக்கப்படுவது போல, கொதிக்க கொதிக்க சூப்போடு சேர்த்து குடிப்பதும் சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும் உதவுகிறது. ‘முழுக்கோழியையும் அப்படியே சாப்பிடலாம்’ என குழந்தைகள் தொலைக்காட்சித் திரைகளில் கத்துவது பிரம்மஞானம் வேண்டியே.

தனுர் வேதம் முழுக்கோழியை பிடிப்பதற்கு வில்லும் தேவையில்லை நாணும் தேவையில்லை ஆனால் சொல் தேவை என்கிறது; சொல்லை அறிந்தவனே வில்லை அறிந்தவனாகிறான். சொல் புல்லில் இருக்கிறது பூண்டிலும் இருக்கிறது. புல்லையும் பூண்டையும் பார்த்தவுடன் எவன் மனதில் பக் பக் பக் என்ற ஒலி ஒலிக்கிறதோ அவனே ஓடுகின்ற இளம் கோழியினை பிடிக்க தகுதியுடையவன்  ஆகின்றான். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறானாம் என்ற முதுமொழியின் ஞானம் ஓடுகின்ற கோழியினை கைகளால் பிடித்து கண்களாலும் சமைத்தவனின் மனதில், வேதம் போல, அக தரிசனத்தில் தோன்றியதாகும். பாரத வர்ஷத்தினில் தோன்றிய இந்த கீழைத்தேய ஞானம் கொரிய தேசத்தில் பூரணம் அடைந்திருக்கிறது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்ற தனுர் வேத வான் மொழிக்கு ஏற்ப ஒரு வகை பக் பக் பக் அழைத்தலில் குஞ்சுகள் கூரையேறும் என்றால் மறுவகை பக் பக் பக் அழைத்தலில் அவை கழுத்து திருகப்பட்டு நீத்தார் உலகினை அடையும். 

முப்பது நாட்களுக்கு மிகாத வயதுடைய நானூறு கிராமிலிருந்து ஐநூறு கிராம் வரை எடையுள்ள கோழிகளே சாம்கைடாங் செய்ய ஏற்றவை. கைகளைப் பிசைந்து விரல்களை நெட்டி முறிக்கும்போதே கோழிக்குஞ்சுகளின் கழுத்தெலும்புகள் எதிர்காலத்தில் முறிபடுவதை அகத்தில் கேட்பவனே நம் ஞான மரபினை அறிந்தவனாவான். அதை ‘எடுத்தது பார்த்தனர் இற்றது கேட்டனர்’ என்பான் கம்பன். கொலை எனும் ஷத்திரிய ஞானம், அதன் துடிப்புகள் தன்னை பிடிக்கவரும் கைககளை அறியும் குஞ்சுகளின் கண்ணசைவுகளிலும் கழுத்துத் திருப்பல்களிலும் காணக்கிடைக்கலாம். கோழிக்குஞ்சுகளின் கழுத்துகளைத் திருகும்போது எழும் மழுக் மழுக் ஒலிகளின் பாடபேதங்களில் மனிதக் கழுத்துகளை அறிபவனே தூய ஷத்திரியன். கோழிக்குஞ்சு கழுத்துகளுக்கும் மனிதக்கழுத்துகளுக்கும் வில்லும் நாணும் எப்படி வித்தியாசம் பார்ப்பதில்லையோ அப்படியே விதியும் ஷத்திரிய விரல்களும் வித்தியாசம் அறிவதில்லை. சிவ தனுசின் கருணை கூட முழுக்கோழியும் மனித இரைப்பையினை அடைவதிலேயே பிரகாசம் அடைகிறது. 

கோழிகளைக் கழுத்தைத் திருகிக் கொல்வது சாம்கைடாங் செய்முறையில் எளிய ஆரம்பப்படிநிலையே ஆகும்; ஹருகி முராகமியின் நாவல்களில் வரும் கூலிக்கொலைகாரர்களைப் போல செகாவ்வின் நாடகங்களையும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளையும் படித்திருத்தல் நலம் பயக்கும். கொல்லாமையை விட கொலையே சிறந்த கலை என்ற நிதர்சனம் உறுதி பெறும்; நிதர்சனம் தரிசனமல்ல என்றும் அறிக. 

முழுக்கோழியையும் கழுத்துகளை முறித்து கொன்று மஞ்சளும் உப்பும் தடவி வைத்தபின் கோழி இறகுகளில் கிரீடம் செய்து சூட்டிக்கொள்தல் இறகுகளைப் பறக்க விட்டு வேடிக்கை பார்த்தல் பாரத வர்ஷத்தில் வழக்கத்தில் இல்லை. அப்பாவிகளின் கூறுபோடப்பட்ட ஆத்மாக்களே நாடாளும் ஷத்திரியர்களின் கிரீடங்களாகின்றன என்ற பழங்குடி முது மொழிகளுக்கு ஷத்திரிய ஆன்மிக பின்நவீனத்துவத்தில் இடமில்லை என்பதையும் அறிக. “ வேறு வழியில்லா” வீரபுருஷர்களுக்கு கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று திரும்ப திரும்பச் சொல்லி உருவேற்றிக்கொள்தலும் நலம். 

அரிசியை நாற்பது நிமிடங்கள் தூய நீரில் ஊறவைக்கவேண்டும். அன்னமயகோசத்திற்கு பெயர் கொடுத்த தானியம்.  ஊறிய அரிசியிலிருந்து பத்து நிமிட நேரம் நீரை வடிகட்டி நீக்கவேண்டும். இதற்கிடையில் ஓடும் நீரில் உரித்த கோழியினை உள்ளும் புறமும் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். உப்பும் மஞ்சளும் ஊறியிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். வாலையும் கொழுப்பையும் சுத்தம் செய்யும்போது அபானனே ஸ்வாஹா என்று சுலோகம் சொல்லலாம். எட்டு லவங்கம், எட்டு பூண்டு, இரண்டு பச்சை வெங்காயம் ஆகியவற்றை நறுவிசாக பொடிப்பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கின்செங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அமுக்கிரான் கிழங்கின் வேர்களை தலையை வெட்டி மூன்று வைத்துக்கொள்ளவேண்டும். கின்செங் வேர்களும் கோழியின் கழுத்தும் தலையும் மனித ஆணுறுப்பும் பாம்பின் வடிவங்கள். ஒன்றோடு ஒன்று உறவாடி வீரியம் கொள்ளச் செய்பவை. தலைகளை வெட்டுவதலாலேயே அவை எழுச்சியும் துடிப்பும் அடைகின்றன. இனி ஏழு வகை நீர் நிலைகளிலிருந்து எடுக்கப்பட்ட மூலிகைககளை அவற்றுடன் சேர்ப்பது அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது. நாங்கள் இன்றைய ஷத்திரியர்களாக்கும் என்று சாதிப்பெருமை போஸ்டர் ஒட்டுவதற்காக மகாபாரதத்தினை படிப்பவர்கள் கண்டிப்பாக ஆழ்கடலில் கிடைக்கும் கடல் தாவர மூலிகைககளை தாங்களே தங்கள் கைகளால் எடுத்து வந்து சேர்க்க வேண்டும் இல்லையென்றால்  பலன் ஏதும் இருக்காது. ஆனால் காவி கட்டி முட்புதரில் உட்கார்ந்து பிச்சையெடுக்கும் யோகம் உண்டாகும்.

போர்க்களங்களில் சங்கறுக்கும் சாணைதீட்டப்பட்ட கத்தியின் நுனி சோதித்தபின் உரித்த கோழியின் வெளித்தோல், தொடை, கால் பகுதிகள் ஆகிய இடங்களில் அவற்றை வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டே கீறி ஆழமாக வெட்டவேண்டும்; நினைப்பு ஆழத்தினை அதிகமாக்கும். இவை இந்தியகலாச்சாரத்தினை கொரிய உணவு மூலமாக அறிய விரும்புகிற லட்சிய வாசகர்களின் கழுத்துக்கள் என்று நினைத்துக்கொண்டால் கீறல் எளிதாகும், ஆழம் அதிகமாகும். இப்படிக்கீறி ஆழமாக்கிய சதைப்பற்றினுள் ஊறிய அரிசி, பூண்டு, கின்செங், உலர்ந்த திராட்சை ஆகியவற்றைத் திணித்து பொதியவேண்டும். இப்படி பொதியும்போது “ஊன் உணவினாலானது, உணவு பிராணனால் ஆனது பிராணன் பிரம்மமானது’ என்று சொல்லிக்கொண்டே பொதிந்து கோழிக்கால்களை இடம் மாற்றி இறுக்கி சட்டுவத்துள் வைத்து தண்ணீர் ஊற்றி கடல் மூலிகையினங்கள் சேர்த்து மூடி வைத்து நீரிலும் ஆவியிலும் வேக வைக்கவேண்டும். 

வெந்த முழுக்கோழியினை உப்பு சேர்த்து சூப்போடு திபெத்திய தியானக்கிண்ணங்களில் வைத்து பரிமாறவேண்டும். கொரிய உலோக இணை குச்சிகளால் (chopsticks) முழுக்கோழி கால் மடக்கி உள்கிடக்கும் திபெத்திய தியானக்கிண்ணங்களைத் தட்டினால் ஓங்காரம் எழவேண்டும்; போருக்குத் தயாராக இருக்கும் ஷத்திரிய இரைப்பை  பசி பசியென கூடவே எதிரொலிக்கும்போது சாப்பிட ஆரம்பிக்கலாம். மடங்கிய கோழியின் கால்களை உலோக இணைகுச்சிகள் துண்டிக்க இயலாதபோது உதவிக்காக தோட்டம் திருத்தும் பெரிய கத்திரிக்கோலை சாப்பாடு மேஜையில் உடனடியாக எடுக்க வசதியாக வைத்திருத்தல் நன்று.

தோட்டம் திருத்தும் பெரும் கத்திரிக்கோலால் திபெத்திய தியானக் குடுவைக்குள் கிடக்கும் மடங்கிய கோழியின் கால்களை நேர்த்தியாக வெட்டும்போது ‘சாப்பிடுதல் என்பது ஆயுதமேந்திய போர்’ என்று நீங்கள் புன்னகைத்து சுலோகம் போல முணுமுணுக்கலாம். “ஆமாம் ஆமாம் அவ்வாறே ஆகுக” என எல்லா உலகத்தின் ஆதி செவ்வியல் மொழிகளிலும் குரல்கள் ஆமோதித்து எதிரொலிக்கும். அதுவே பிரம்ம ஞானம்.

http://mdmuthukumaraswamy.blogspot.sg/