அன்புள்ள ஜெமோ,
நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார்.
அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் முக்கியமானவை. அவற்றில் உள்ள நுட்பங்களை எல்லாம் கண்டுபிடிப்பார். குறிப்பாக sexual aberrations ல் உள்ள நுட்பங்களை அவர் சரியாக சொல்லிவிடுவார். இப்படி சில விசயங்களை பூடகமாகச் சொல்லி ஊகிக்கவைப்பதுதான் நல்ல எழுத்து என்று நினைக்கிறார். ஒரு நல்ல கதையில்கூட அவர் வர்ணனைகளை தவிர்த்துவிடுவார். கதைக்கு அவரே ஒரு version எடுத்துக்கொண்டு அதுவே சரி என்று சொல்லுவார்.
ஆனால் தான் மிகச்சிறந்த வாசகன் என்று நினைக்கிறார்.எல்லா எழுத்துக்களைப்பற்றியும் தடாலடியாகக் கருத்துச் சொல்கிறார். அவருடன் விவாதிப்பதே குழப்பமாக இருக்கிறது. அவருக்கு ஒரு எழுத்து matter of fact ஆக இருக்கவேண்டும். மொழி flat ஆக இருக்கவேண்டும் எனக்கு அப்படி இல்லை. நான் இலக்கியத்தை ஓரு அழகுணர்ச்சியுடன் பார்க்கிறேன். எனக்கு ஒளிந்திருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதிலே ஆர்வம் இல்லை. கற்பனையில் திளைப்பது பிடித்திருக்கிறது. உண்மையில் வாழ்க்கையிலுள்ள அனைத்து சந்தோஷங்களும் துக்கங்களும் இலக்கியத்திலும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வாசிப்பு ஆரம்பநிலை என்றும் நான் இன்னும் முதிரவேண்டும் என்றும் அந்நண்பர் சொல்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகர்
அன்புள்ள பிரபாகர்,
முதலில் சில அடிப்படைகளை விளக்கிவிடுகிறேன். இலக்கிய வாசகர்கள் பெரும்பாலானவர்களிடம் இந்தத் தெளிவுகள் இருப்பதில்லை. ஆகவே சொற்களை மொத்தையாகப் போட்டு குழப்புவார்கள்.
புனைவுகளில் கையாளப்படும் உணர்வுநிலைகளை உணர்ச்சிகள் [emotions] சிற்றுணர்ச்சிகள் [sentiments] என பிரித்துப்ப்பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கக் கற்றுக்கொள்வதற்குத்தான் இலக்கிய ரசனை என்று பெயர்.
சிற்றுணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்த, அன்றாடவாழ்க்கையில் சந்திக்கக்கூடிய, சம்பிரதாயமான உணர்ச்சி நிலைகளைத்தான் சிற்றுணர்ச்சிகள் என்று சொல்கிறோம். தமிழ்சினிமாக்களில் வரும் தாய்ப்பாசம், தங்கச்சிப்பாசம், தியாகம் போன்றவை சிற்றுணர்ச்சிகள்.
இலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் இதே தளத்தைச் சார்ந்தவை என்பதுதான் உங்கள் நண்பரைப்போன்ற எளிய வாசகர்களுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது. இலக்கியமும் தாய்மை, சகோதரத்துவம், தியாகம் போன்றவற்றைப்பற்றித்தான் பேசும். ஆனால் பேசும் முறையில் முன்பிலாத தன்மை ஒன்றைக் கொண்டிருக்கும். அவற்றினூடாக அது உணர்த்தும் தரிசனம் முற்றிலும் புதியதாக இருக்கும்.
சிற்றுணர்ச்சிகள் எப்போதும் அப்பட்டமானவையாக, நேரடியானவையாக இருக்கும். ஏனென்றால் அவை நாமறிந்த அனுபவத்தளம் சார்ந்தவை. ஆனால் இலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் சிக்கலானவையாக, உள்மடிப்புகள் விரிந்துகொண்டே செல்பவையாக இருக்கும். அவை சொல்வனவற்றை விட அதிகமாக குறிப்புணர்த்தப்படும்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிற்றுணர்ச்சிகளில் நாம் நமது வழக்கமான உணர்ச்சிகளைக் கண்டுகொள்கிறோம். இலக்கியம் காட்டும் உணர்ச்சிகளில் நம்மை நாமே புதியதாக அடையாளம் காண்கிறோம். நம் உணர்வுநிலைகள் முற்றிலும் புதிதாக வெளிப்படுகின்றன.
இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் இலக்கியம் காட்டும் உணர்ச்சிகள் உண்மையானவை. நாம் உண்மைகளை காண்பதன் விளைவாக உருவாகக்கூடியவை. சிற்றுணர்ச்சிகள் மிகையானவை. ஆகவே பொய்யானவை.
உதாரணமாக ஒரு மரணத்தை மிகையாகச் சித்தரித்து வெறும் துயரை உருவாக்குவது சிற்றுணர்ச்சி. மரணத்தை அறியும் அனுபவத்தை நம்மில் நிகழ்த்திக்காட்டுவது இலக்கியம். முதல் உணர்ச்சி தற்காலிகமான மனஎழுச்சி. இரண்டாவது ஒரு ஆழ்ந்த மனநகர்வு. இரண்டுமே ‘கண்ணீர் சிந்தல்’ என்னும் விளைவை உருவாக்கலாம். இரண்டும் வெவ்வேறு கண்ணீர்.
ஒரு படைப்பை வாசித்து கண்ணீர் சிந்துவதென்பது ஓர் உயர்ந்த மனநிலையே. நாமறிந்த மகத்தான இலக்கியவாசகர்கள், மேதைகள் அனைவருமே அப்படிச் செய்வதுண்டு என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். அது அன்றாட வாழ்க்கையை விட்டு, அறிவின் முரட்டு இறுக்கத்தை விட்டு, அகங்காரத்தை விட்டு மனம் மேலெழுவதன் அடையாளம்.
ஒரு எளிய துயரைக் கண்டு மனம் கலங்குவதற்கும் மானுட மேன்மையை, வரலாற்றின் பெருக்கை, வாழ்க்கையின் பொருளின்மையை அறிந்து கண்ணீர் மல்குவதற்கும் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டை அறியாத ஒருவர் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.
இதிலிருந்தே அடுத்த வரையறைக்குச் செல்லமுடியும். புனைவுகள் இருவகை உணர்ச்சிகரக் கட்டங்களை கையாள்கின்றன. நாடகீயத்தருணம் [Dramatic Situations] மிகைநாடகத் தருணம் [Melodramatic situations]. நாடகீயத்தருணம் இல்லாத பெரும்படைப்புகள் உலகில் இல்லை. இலக்கியம் இலக்காக்கும் மதிப்பீடுகளின் உச்சகட்ட மோதல், உணர்ச்சிகளின் சந்திப்புப்புள்ளி நாடகீயமானதாகவே இருக்கமுடியும். நாடகாந்தம் கவித்துவம் என்கிறது இந்திய மரபு. நாடகீயமே புனைவின் உச்சம் என்கிறார் அரிஸ்டாடில்.
உண்மையான உணர்ச்சிகளால் ஆனது நாடகீயத் தருணம். பொய்யான சிற்றுணர்ச்சிகளால் ஆனது மிகைநாடகத்தருணம். அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்த எளிய உணர்ச்சிகளின் தருணத்தை செயற்கையாக உச்சகட்டம் நோக்கிக் கொண்டுசென்று மிகைநாடகத்தருணங்கள் உருவாக்கப்படுகின்றன.
பெரும்படைப்புகளின் நாடகத்தருணங்கள் உன்னதமாக்கலை [sublimation] நிகழ்த்துகின்றன. வாசிப்பு நம் அகத்தை கொந்தளிக்கவும் அலைக்கழியவும் வைத்து முழுமைநோக்கை, விழுமியங்களை, தரிசனங்களை நோக்கிச் செலுத்துகிறது. ஆனால் மிகைநாடகத் தருணங்கள் ஒருவகை உணர்ச்சிவெளிப்பாடுகளாக மட்டுமே முடிந்து ஏமாற்றத்தை எஞ்சவிடுகின்றன.
ஓர் இலக்கியவாசகன் இந்தவேறுபாட்டை எந்த புற உதவியும் இல்லாமல் தன் வாசக அனுபவத்தைக்கொண்டே உணரமுடியும். நம் வாழ்க்கையால் நாம் உண்மையானது என அறிந்த ஓர் உணர்வெழுச்சியை நாம் இலக்கியத்தில் கண்டால், அதன் விளைவான நாடகீயத்தைச் சென்றடைந்தால் அது நம்மை நெகிழவும் கொதிக்கவும் வைத்தால் அதுவே இலக்கியத்தின் இயல்பான உச்சகணம் என்று உணரலாம்.
இந்தக்குழப்பமெல்லாமே பேரிலக்கியங்களை வாசிக்காதவர்களுக்குரியது. வாசித்தவர்களுக்கு சிக்கலே இருப்பதில்லை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்நிகாஃப் சோனியாவின் முன் மண்டியிடும் காட்சி நூறாண்டுகளாக இலக்கியவாசகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அது ஒரு மானுட உச்சம் என்பதனால். அவ்வுச்சம் நாடகீயமாக வெளிப்படுகிறது என்பதனால்.
போரும் அமைதியும் நாவலில் பிரின்ஸ் ஆண்ட்ரூ களத்தில் காயம்பட்டுக்கிடக்கும்போது அங்கு நெப்போலியன் வரும் காட்சி இன்னொரு உதாரணம். அப்போது நெப்போலியனை அமைதியான வானத்தின் பின்னணியில் ஆண்ட்ரூ பார்க்கிறான். அந்தக்காட்சி உணர்ச்சிகரமான மொழியில், நேரடியான உத்வேகத்துடன் எழுதப்பட்டுள்ளது. அந்த உச்சம்தான் இலக்கியத்தின் இலக்கு.
ஒரு வாசகன் வர்ணனைகளை விட்டுவிடுவானென்றால் அவன் இலக்கியமே வாசிக்கவில்லை, வேறெதையோ வாசிக்கிறான் என்றே பொருள். பேரிலக்கியங்களனைத்துமே வர்ணனைகளால் ஆனவை. மொழியால் காலத்தை, நிலத்தை, மனிதர்களை காட்சிப்படுத்தி அழியாமல் நிலைநிறுத்துபவை. கண்ணகி கணவனுடன் மதுரை நுழையும் காட்சியானாலும் சரி , போரும் அமைதியும் நாவலின் மாபெரும் போர்க்களச் சித்தரிப்பானாலும் சரி.
*
இருவகை வாசகர்கள் இலக்கியத்தில் உணர்ச்சிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருக்கிறார்கள். முதல்வகையினர் அறுபது எழுபதுகளில் உருவான நவீனத்துவ [modernism] இலக்கிய அலையால் அகம் வடிவமைக்கப்பட்டவர்கள். இலக்கியத்தில் ஒரு ஐம்பதாண்டுகாலம் நீடித்த நவீனத்துவ அலை உணர்ச்சிகள் இல்லாமல் எழுதுவது, குறைந்த சொற்களில் கூறுவது ஆகியவற்றை இலக்கியத்தின் அழகியலாக முன்னிறுத்தியது.
நவீனத்துவர்கள் வாழ்க்கையின் உச்சகணங்களைச் சொல்லமுயல்வதில்லை. எதையும் உன்னதமாக்கவும் முயல்வதில்லை. அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் வைத்தே சொல்லமுயல்கிறார்கள். உலகியல்தளத்தை மட்டுமே உண்மையானது என நினைக்கிறார்கள். ஆகவே தர்க்கபூர்வமான, அறிவார்ந்த, சமநிலையான விஷயங்களை மட்டுமே சொல்லமுயல்கிறார்கள். அதற்காகவே அவர்கள் புறவயமான, தகவல்சார்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட, உணர்ச்சியற்ற மொழியை பயின்று உருவாக்கிக் கொண்டார்கள்.
அவ்வகை எழுத்தின் வெற்றிகள் அடையப்பட்டதுமே பலவீனங்கள் சுட்டப்பட்டன. அவை ஒருபோதும் மானுட உச்சநிலைகளைச் சொல்லமுடியாது என்று இலக்கியவாதிகள் உணர்ந்தனர். நாம் சாதாரணநிலையில் யார் என்பது இலக்கியம் கையாளவேண்டிய வினாவே அல்ல. மிக அசாதாரணமான நிலையில் நாம் யார் என்பதே இலக்கியத்தின் வினா. அதைக்கையாள நவீனத்துவ எழுத்துமுறை உதவாது என உணர்ந்ததன் விளைவே இன்றைய இலக்கிய எழுத்துமுறைகள்.
இன்றைய இலக்கிய எழுத்துமுறை உணர்ச்சிகளை, நாடகத்தருணங்களை அதிகமாகக் கையாள்கிறது. மொழியை கட்டற்றதாக பறக்கவிடுகிறது. பித்துநிலையும் உணர்வெழுச்சிநிலையும் மொழியில் கூடுவதை நம்புகிறது. மொழியில் திட்டமிட்டு அடையப்படுவதல்ல, தற்செயல்களே முக்கியமென எண்ணுகிறது. உன்னதமாக்கலை இலக்காக்குகிறது. உச்சகணங்களை நோக்கி புனைவைக் கொண்டுசெல்லமுயல்கிறது. இதை முந்தைய அழகியலைப் பழகியவர்கள் ஏற்க சிரமப்படுவார்கள்
ஆனால் உங்கள் நண்பர் அத்தகையவரல்ல. அவரது பிரச்சினை அவருக்குக் கற்பனை இல்லை என்பதே. அதை அவரது கருத்துக்களே காட்டுகின்றன. இத்தகையோர் இலக்கியத்தில் என்றும் உள்ளனர். இவர்களின் சிக்கல், இவர்களால் மொழி வழியாகக் கற்பனைசெய்ய முடியாதென்பதே. சொற்களில் இருந்து ஒரு நிலத்தை, ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளமுடியாது. மொழி வழியாக ‘வாழ’ முடியாது. சொற்கள் வழியாக ‘தெரிந்து’ கொள்ளமட்டுமே முடியும்.
ஆகவே அவர் இலக்கியப்படைப்புகளை வாசிக்கையில் ஒரு நிகர் வாழ்க்கையை அடைவதில்லை. கிசுகிசுக்களை, சினிமாச்செய்திகளை, அரசியல் நிகழ்வுகளை வாசிப்பதுபோல வாசிக்கிறார். இடைவெளிகளை ஊகித்துக்கொள்கிறார். சரளமாக வாசிக்கக்கூடிய மொழி கொண்ட, உலகியல் நுட்பங்களை ஊகிக்கவைக்கக்கூடிய ஒன்றை நல்ல இலக்கியமென நினைக்கிறார்.
அப்படிப்பட்ட பல வாசகர்களை நான் காண்பதுண்டு. அவர்கள் உண்மையில் இலக்கியம் வாசிக்கவே கூடாதென்பதே என் எண்ணம். அந்த உழைப்பே வீண். வாசிப்பில் அவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. வெறுமே பிழையான அபிப்பிராயங்களை மட்டும் உருவாக்கிச் சுமந்தலைவார்கள். ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் தங்களுக்குரிய அறிவுத்துறைகள் எதிலேனும் அவ்வுழைப்பைச் செலவிடலாம்.
இலக்கியம் ஒருவகை வாழ்க்கை. சொற்கள் உருவாக்கும் வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலும் உணர்வுகள் உண்டு. அவை வாழ்க்கையைவிடச் செறிவானவையாகவே இருக்கமுடியும். இலக்கியம் வழியாக வாழ்பவனே இலக்கியவாசகன்.
ஜெ