Saturday, July 19, 2014

வெண்முரசு படிமங்கள்

அன்புள்ள ஜெமோ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அம்புகளை பறவைகளுடனும் மழைத்தாரைகளுடனும் ஒளிக்கதிர்களுடனும்தான் வியாசர் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த அத்தியாயங்களில் அம்புகளை பறவைகளுடன் ஒப்புமைப்படுத்தி நீங்கள் அதை மிக விரிவான அளவில் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ‘சுகோண சுபக்ஷ சுதேஹ ’ என்று அம்பின் இலக்கணத்தை சொல்லுமிடமே சிறப்பாக உள்ளது. அந்த வரியே உங்களுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு சில குறிப்புகள் மகாபாரதத்தில் இருக்கின்றன. அதிலிருந்து இத்தனை தூரம் கற்பனையால் செல்லமுடிவது பிரமிப்பூட்டுகிறது.

பறவைகள் விண்ணை ஆள்கின்றன. அவை அனைத்தையும் இணைக்கின்றன. நம் கிளாஸிக்குகளில் இதை மீண்டும் மீண்டும் காணலாம். அவை தூதுகளும் தான். அப்படிப்பட்ட பறவைகளை அம்புகளாக ஆக்கும்போது உருவாகும் முரண்பாட்டைத்தான் மீண்டும் மீண்டும் அந்த வரிக்ள் குறிப்பிட்டுச் செல்கின்றன. இன்றைய ஒரு நாவலில் இப்படிப்பட்ட விவரணைகள் எந்த அளவுக்கு இடம்பெறலாம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நவீனநாவல்களில் பழைய கிளாஸிக்குகளை அதிகம் வாசித்திருக்கிறேன். இன்றைய வாசிப்புகளில் மெட்டஃபர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது என்று தெரியவில்லை. குழப்பமாகவே இருக்கிறது. ஆனால் எபிக்கல் என்றாலே மெட்டஃபோரிக்கல் என்றுதான் பொருள் என்பது நான் புரிந்துகொண்டது. குசப்புல் முதல் அம்புகள் வரை எல்லாமே மெட்டஃபர்களாக ஆகிக்கொண்டே செல்லக்கூடிய இந்த கனவுநிலை என்னை மிகவும் ஈர்க்கிறது

உண்மையில் அந்தக்கனவுநிலையில் தன்னிச்சையாக வந்து விழும் வரிகளைத்தான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒருபக்கம் அந்த வரிகளும் மறுபக்கம் உணர்ச்சிகரமான வாழ்க்கைச்சந்தர்ப்பங்களுமாக உள்ளது இந்நாவல். பல கதாபாத்திரங்களை நானே அறிந்திருப்பதுபோல உணர்கின்றேன்

நன்றி

பிரபாகர்அன்புள்ள பிரபாகர்

கவியுருவகம் [மெட்டஃபர்] இன்றைய நாவலின் முக்கியமான அழகியல் கருவி. எல்லா முக்கியமான நவீன நாவல்களும் அவற்றைக்கொண்டே தங்கள் அக உலகை உருவாக்கிக்கொள்கின்றன. நாவல் என்பது கவித்துவத்தை நெருங்கவே எப்போதும் முயலவேண்டுமென்பதும் இன்றுள்ள கொள்கை

மகாபாரத நாவல்கள் இருவகை. ஒன்று மகாபாரதத்தை நடைமுறைத் தளத்துக்குக் கொண்டுவந்து ‘யதார்த்தச் சித்தரிப்பாக’ ஆக்குவது. உதாரணம் பைரப்பாவின்  ‘பர்வம்’ எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமிடம்’ இந்தியநாவல்களில் இவ்வகையே அதிகம்

இன்னொன்று மகாபாரதத்தை ஒரு குறியீட்டுவெளியாகக் கண்டு அதிலிருந்து தொன்மங்களை மட்டுமே எடுத்து மறு ஆக்கம்செய்வது. உதாரணம் பி.கெ.பாலகிருஷ்னனின் இனி நான் உறங்கலாமா? எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி

இரண்டிலும் இருவகை விடுபடல்கள் உள்ளன. முதல்வகையில் மகாபாரதம் அளிக்கும் பிரபஞ்சத்தன்மை கொண்ட குறியீடுகள், அதன்மூலம் உருவாகும் தரிசனங்கள் தவறவிடப்படுகின்றன. மகாபாரதத்தின் நாடகீயத்தன்மை இல்லாமலாகிறது

இரண்டாம் வகையில் மகாபாரதகால அரசியல், பண்பாடு, வாழ்க்கைமுறை சார்ந்த சித்திரம் சாத்தியமில்லாமல் ஆகிறது. உண்மையாக வாழ்ந்துபெறுவது போன்ற நிகரனுபவம் நிகழ்வதில்லை

ஆகவே இந்நாவல்களை ஒருபக்கம் முற்றிலும் யதார்த்தத் தளத்திலும் மறுபக்கம் புராணத்தளத்திலும் ஒரே சமயம் கொண்டுசெல்கிறேன். கதை யதார்த்ததில் தன்னை நிறுவிவிட்டு அங்கிருந்து எழுந்து புராணத்தன்மைக்குச் செல்கிறது. குறியீடுகளையும் உருவகங்களையும் மொழியின் கவித்துவச்சாத்தியங்களையும் கையாள்கிறது.

இதில் எழுதப்பட்ட எல்லா கதாபாத்திரங்களிலும் நானறிந்த எவரோ உள்ளனர்.

ஜெ