Tuesday, July 15, 2014

செவ்வியலும் வெண்முரசும்

அன்புள்ள ஜெமோ

வெண்முரசுவை தவறாமல் வாசித்து வருகிறேன். மிகச்செறிவாக உள்ளது என்று தோன்றுகிறது. தேவைக்குமேல் செறிவாக உள்ளதா என்று தோன்றுவதனால்தான் இதை எழுதுகிறேன்.பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடிகிறது. உடனே உனக்கு இலக்கியம் தெரியாத காரணத்தால்தான் அப்படித் தோன்றுகிறது என்று சொல்லிவிடமாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பதிமூன்று வருடங்களாக நவீன இலக்கியங்களை வாசித்துவருபவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கிறேன். மிகச்சில இலக்கியங்கள் வாசிப்புக்கு அதிகமான தடையை அளிக்கக்கூடியவை. உதாரணமாக ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸை நான் வாசித்து முடிக்க ஆறுமாதம் ஆகியது. கார்லோஸ் புயன்டஸின் நாவல்களும் அப்படிப்பட்ட வாசிப்புச்சிக்கலை அளித்தது.

அவை அளிக்கக்கூடிய சிக்கல் ஒரு வகை. அவையெல்லாம் மொழிவிளையாட்டுக்கள் நிறைந்தவை. அதோடுகூட அவை நமக்குச் சரிவரத் தெரியாத ஐரோப்பிய வாழ்க்கைமுறைகளைப்பற்றிய தகவல்களை உள்ளடக்கிக்கொண்டவை. அந்தத் தகவல்களை பலவகைகளில் அவை விளையாடுகின்றன. நீங்கள் ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டிதான். எனக்கு உம்பர்ட்டோ இக்கோவின் ஃபூகோஸ் பெண்டுலமும் கடினமான நாவலாக இருந்தது. ஆனால் இவையெல்லாமே பின்நவீனத்துவ சிருஷ்டிகள். மொழியை வைத்து விளையாடுவதை அவை ஒரு இயல்பாக வைத்திருக்கின்றன. அவற்றைப்பொறுத்தவரை சொல்லப்படும் விஷயம் என்பது முக்கியமே அல்ல. சொல்வதற்கு இனிமேல் உலகில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவை. மாற்றியும் குழப்பியும் சொல்லி விளையாடுவதற்கு முயலக்கூடியவை.

ஆனால் மகாபாரதம் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டி அல்ல.அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அது கிளாஸிக். கிளாஸிக் குணாதிசயம் என்பது வேறு. அது அடிப்படை unit களில் மிக எளிமையாகவே இருக்கும். மகாபாரதக்கதை தனித்தனியாகச் சொன்னால் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கமுடியும் என்ற அளவிலேயே இருக்கும். அதை கிளாஸிக் ஆக்குவது அதிலுள்ள ஒட்டுமொத்தமான grandure  அதை கதைகளின் texture என்று சொல்லலாம். இதே அம்சத்தை நாம் டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ், புரூஸ்தின் ரிமெம்பரன்ஸ் திங்ஸ் பாஸ்ட் போன்ற சிருஷ்டிகளிலும் காணலாம். அவை அதனால்தான் modern classics என்று சொல்லப்படுகின்றன.

நீங்கள் மகாபாரதத்தை எழுதும்போது உங்கள் அளவுக்கு அதை கொண்டுசெல்கிறீர்கள். அதிலுள்ள குழந்தைகளுக்கு புரியக்கூடிய எளிமையை இல்லாமலாக்கிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதோடு நீங்கள் அளிக்கும் texture அளவுக்குமீறி சிக்கலாகிக்கொண்டே போகிறது. அதோடு நீங்கள் மொழியை கதையாக இல்லாமல் கவிதைக்கு பக்கமாக கொண்டு போகிறீர்கள். வரிக்குவரியாக வாசிக்காதவர்களுக்கு அதில் ஒன்றுமே பிடிகிடைக்காது. உதாரணமாக வண்ணக்கடலில் குதிரைகள் வளர்வதை நீங்கள் அர்ஜுனனின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய இடம். குதிரை நார்ஸிஸ தன்மையை அடைவதை அர்ஜுனனின் மனநிலையுடன் ஒப்பிட்டு எத்தனைபேர் புரிந்துகொண்டிருப்பார்கள். நாலே நாலு வரிதான் வருகிறது. இங்கே இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் மேலேமேலே நீங்கள் அர்ஜுனனைப்பற்றி சொல்லிக்கொண்டே போவதை எத்தனைபேர் உள்வாங்குவார்கள்?

அத்துடன் கவிதைக்கு சமானமாகவே நீங்கள் சிந்தனைகளையும் சொல்கிறீர்கள். மழைப்பாடலிலும் வண்ணக்கடலிலும் இந்திய தத்துவங்களில் உள்ள பல சிந்தனைமுறைகளை ஒட்டுமொத்தமாகச் சுருக்கி கொடுக்கிறீர்கள். மிகவும் செறிவாக கொடுக்கப்படும் இந்தவகையான வரிகளை வாசிக்கமுடியுமா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.நான் இந்தியத் தத்துவமுறையை படித்துவருகிறேன். எனக்கே சிரமமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வாசகர்கள் மிகமேலோட்டமாக வாசிப்பவர்கள் . எந்த சிக்கலும் இல்லாத சிருஷ்டிகளையெ தட்டுத்தடுமாறி வாசிப்பவர்கள். நவீன இலக்கியம் என்ற பேரில் இங்கே எழுதப்படுபவை பெரும்பாலும் contemporary personal accounts மட்டும்தான். அவற்றையே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை எப்படி இப்படிப்பட்ட ஒரு சிருஷ்டியை வாசிக்கமுடியும்? அதுவும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். இன்றைய தலைமுறையுடன் இந்த சிருஷ்டி சம்வாதம்செய்யவேண்டும் என்றால் நீங்கள் இதை இன்னும் கூட எளிமையாகச் சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறேன். தப்பாக நினைக்கவேண்டாம்

ஆர்.சங்கரநாராயணன்


அன்புள்ள சங்கரநாராயணன்,

தப்பாக ஏதும் நீங்கள் சொல்லிவிடவில்லை. ஆனால் என் நிலைபாட்டைச் சொல்லிவிடுகிறேன்

வெண்முரசு ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. அது தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்

எவர் இதன் வாசகர்கள்? அன்றாடவாழ்க்கையின் எளிய சிக்கல்களை, எளிய சித்தரிப்பை வாசிக்க விரும்பும் வாசகர்கள் இதற்குள் வரவேண்டியதில்லை. அவர்களுக்குரிய படைப்புகள் நவீன இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.

மாறாக என்றுமுள்ள வாழ்க்கைச்சாரங்களை, ஒருபோதும் பேசித்தீராத மையங்களை, காலம்தோறும் மறுவிளக்கம் கொள்ளும் அறப்பிரச்சினைகளைப் பற்றி வாசிக்கவிரும்பும் வாசகர்களுக்காக மட்டுமே இது எழுதப்படுகிறது. ஒட்டுமொத்த நோக்கை அறிய விரும்புகிறவர்களே இதன் வாசகர்கள்.அவர்களே பேரிலக்கியங்களின் வாசகர்கள். தல்ஸ்தோயை தஸ்தயேவ்ஸ்கியை புரூஸ்தை வாசிப்பவர்கள்.

அத்தகைய ஒட்டுமொத்த வாழ்க்கை நோக்கு -அதை நான் தரிசனம் என்பேன் - நம்மை இன்றியமையாமல் தத்துவம் நோக்கிக் கொண்டுசெல்கிறது. தத்துவத்தை தொடாமல் பேரிலக்கியம் இல்லை.

அத்தகைய ஒரு பேரிலக்கியம் வாழ்க்கையின் அனைத்துப்பக்கங்களையும் பேசமுயலும். அனைத்துச் சிந்தனைகளையும், அனைத்து உணர்ச்சிகளையும், அனைத்து அறமோதல்களையும், அனைத்து வாழ்க்கமுறைகளையும் சொல்லமுயலும். ஆகவேதான் அவை பெரிதாக அமைகின்றன. அவை பண்பாட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தைச் சொல்லக்கூடியவை அல்ல. மொத்தப்பண்பாட்டையே திருப்பிச் சொல்லக்கூடியவை. மறு ஆக்கம் செய்யக்கூடியவை

மகாபாரதம் அத்தகைய ஆக்கம். அதை மீண்டும் சொல்லும் வெண்முரசும் அத்தகைய ஆக்கமே. அத்தகைய ஒட்டுமொத்தத் தன்மை இருக்கும்போது செறிவு இன்றியமையாதது. செறிவில்லாது சொன்னால் மேலும் மேலும் விரிந்து பரவிச்சென்றுவிடும்.

மகாபார்தம் மூலத்தில் மிகச்செறிவானதும் சிக்கலானதும் ஆகும். அதன் நிகழ்த்துகலைவடிவங்கள்தான் சிக்கல்கலை களைந்து எளிமையாக்கின. எல்லா செவ்வியல் ஆக்கங்களுக்கும் அப்படி ஒரு எளிய குழந்தைக்கதை வடிவங்கள் சாத்தியம்.வெண்முரசிலும் ஒரு குழந்தைக்கதை ஓடிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்


ஒவ்வொரு கதைக்கும் இத்தனை பக்கம் என்று ஒரு கணக்கு உள்ளது. அதுவே கதைக்கு ஓரு கட்டமைப்பை அளிக்கும். உதாரணமாக பரசுராமனின் கதை மூன்று அத்தியாயங்களிலாக முடிகிறது. விரித்து எழுதினால் அதுவே ஒரு பெருங்காவியமாக ஆகும். துரோணரின் கதையையே ஒரு தனி காவியமாக ஆக்கமுடியும். மகாபாரதம் காவியங்களால் ஆன காவியம். ஆகவே சுருக்கம் அடர்த்தி செறிவு ஆகியவற்றை தவிர்க்கமுடியாது

கவித்துவம் என்பது இது உருவாக்கும் உச்சகட்ட நாடகீயத் தருணங்களை சாத்தியப்படுத்தவே. கவித்துவச்செறிவில்லாது அவற்றைச் சொன்னால் அவை ‘தரையில்’ நின்றிருக்கும். நல்லவாசகன் கூடவே வருவான் என நம்பவேண்டியதுதான்

அதேபோன்றே தத்துவங்களும். இதில் இந்து மரபின் ‘அனைத்து’ தத்துவங்களும் வரும். அனைத்தையும் விரித்துரைத்தால் கலைக்களஞ்சியமே உருவாகும். ஒவ்வொன்றுக்கும் செறிவான சுருக்கமான விவரிப்புகளே இதில் இருக்கும். தேவையானவர்கள் வேறுநூல்கள் வழியாக மேலே செல்லலாம் .அவ்வாறு செறிவாக்குவதற்காகவே இதில் தத்துவங்களும் கவிதையின் கருவிகளால் சொல்லப்பட்டுள்ளன.

பலசமயம் மிகவிரிவாக எழுதி அவற்றைச் சுருக்கி செறிவாக்குகிறேன். காரணம் நாவலின் கூறுகள் நடுவே உள்ள ஒத்திசைவு. ஓர் அத்தியாயத்தில் ஒரு சிந்தனை முழுதாகவே வந்துவிடும். அந்த அத்தியாயத்தின் அளவில் மூன்றில் ஒருபங்கே அது இருக்கும். அப்படியென்றால் நாநூறு வரிக்குள்.

செறிவான ஒரு நூல் பலமுறை மீள்வாசிப்புக்குரியது. வெண்முரசும் அப்படியே. ஆகவெதான் இதை நான் ஒரு செவ்வியல் ஆக்கம் என்கிறேன்.செவ்வியலுக்குள் செல்லும் சிந்தனைத் தகுதியும் மொழித்தேர்ச்சியும் சிரத்தையும் உடையவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


ஜெ