Wednesday, July 9, 2014

நடை

அன்பினிய ஜெயமோகன்.

வெண்முரசு மொழிநடை தொடர்பாக வரும் கடிதங்களைக் கவனித்துக் கொண்டு இருக்கிறேன்.

எனக்கென்னவோ இந்த மொழிச்செழுமைதான் படிக்கும் எங்களை சுலபமாக அந்தக் காலகட்டத்திற்கே கொண்டு சேர்க்கிறது என்று படுகிறது. கச்சிதமான சொற்களின் நேர்த்தியான பிரயோகம்.

ஓரிரண்டு சொற்றொடர்களில் சடாரெனக்  காட்சிகள் மனதில் விரிய ஆரம்பித்து விடுகின்றன.
( போதாக்குறைக்கு ஓவியர் ஷண்முகவேல். பின்னிரவில் படித்து விட்டுத் தூங்கினால் திரைப்படம் போல் கனவு வருகிறது :D )

தவிர வழக்கமாய் நாங்கள் அறிந்த பாரதம் போலல்லாமல், இது வேறு வழியில் வேறு கோணத்தில் நகர்வது கூடுதல் குதூகலம்.

"எந்தக்குழந்தையும் பாவையின் அறியாத பகுதியையே திரும்பிப்பார்க்கும்" என்று உங்கள் பெருஞ்சாத்தன் எங்களுக்கும் தான் கூறினார் போல. மகா புருஷர்களின் ஆசாபாசங்கள், சாமான்யர்களின் பெருங்குணங்கள் என்று நாங்கள் அறியாத பகுதிகளை சுலபமாய்த் தொட்டு சுழித்தோடுகிறது உங்கள் எழுத்து. ஆர்வமாய்த் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டுள்ளோம்.

உங்கள் படைப்பூக்கம் அழியாப் பெருநெருப்பாய்ப்  பல்லாண்டு நின்று எரியட்டும். அப்படியே ஆகுக :)
- சந்திரமோகன்

அன்புள்ள சந்திரமோகன்

எந்த ஒரு படைப்புக்கும் அதற்கான மொழிநடை என ஒன்றுண்டு, அதை மாற்றமுடியாது. வெண்முரசின் நடை இது. வேகமாகப்புரட்டிச்செல்லும் வாசிப்புகள் கொண்டவர்கள்தான் அது சிக்கலாக இருக்கிறது என்கிறார்கள். அது செறிவாக உள்ளது. ஆனால் சிடுக்கானதாக இல்லை என நான் அறிவேன்

ஜெ