அன்புள்ள ஜெமோ,
வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா? இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது?
நரசிம்மன்
அன்புள்ள நரசிம்மன்,
நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் கணிசமான சொற்கள் நான் உருவாக்கியவை. அவ்வாறு உருவாக்க தமிழின் பொருள்முறையும் சொல்லிணைவுமுறையும் சொற்களஞ்சியமும் இடமளிக்கின்றன. கம்பன் அவ்வாறு பல சொற்களை உருவாக்கிக் கையாண்டுதான் ராமாயணத்தை எழுத முடிந்தது.
கொற்றவை சிலப்பதிகாரத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்கள்கூட இல்லாதபடி தூயதமிழில் எழுதப்பட்டது. நான் என் கட்டுரைகளிலும் கூடுமானவரை தமிழ்ச்சொற்களையே கையாள்கிறேன். முதல்வாசிப்பில் அவை அயலாகத் தெரியலாம். அனால் அவை மிக எளிதில் பழகிவிடும். ஒலியழகில்லாத சொற்களை நான் கையாள்வதில்லை. நான் உருவாக்கிய சொற்களைக் கையாளாமல் இன்று எவருமே தமிழில் ஒரு நல்ல கட்டுரையை எழுதிவிடமுடியாது.
மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்தத்தைச் சொல்லும் பெருநூல். அதை நான் ‘தமிழில்’ எழுத விரும்புகிறேன். ஆகவே கூடுமானவரை தமிழ்ச்சொற்களை கையாள்கிறேன். தமிழ்ச்சொற்கள் இருந்தால் தேடிக்கண்டுகொள்கிறேன். இல்லையேல் நானே உருவாக்குகிறேன்.
இழப்பீடு என்றால் தெரியும். பிழையீடு என்றால் அவ்வகையிலேயே பொருள்கொள்ளலாமே. பிராயச்சித்தம் என ஏன் சொல்லவேண்டும்? எரிகுளம் என்றால் அக்னிகுண்டம். எரி குளம் என இரு சொற்களையும் தனியாகப்பார்த்தால் பொருள் கிடைக்கும்.
சிலசொற்கள் அரிய கலைச்சொற்களாக இருக்கும். நிலைத்திகிரிக்களம் என்பது ராசி சக்கரத்தின் தமிழ்ப்பெயர். ராசி சக்கரம் என பலமுறை பயன்படுத்தியபின் அதே இடத்தில் இச்சொல்லை பயன்படுத்துகிறேன். கூர்ந்தவாசகனுக்கு பிடிகிடைக்கும். அல்லாதவர்கள் மேலே வாசித்துச்சென்றாலும் பெரிய இழப்பில்லை. இவ்வாறுதானே நாம் நம் சொற்களை மீட்டு எடுக்கமுடியும்?
ஒருவர் அரசகுலத்தார் செம்மொழி பேசுவதைப்பற்றி கேட்டிருந்தார். செம்மொழி என்பது சம்ஸ்கிருதம் என்னும் சொல்லின் நேர்த்தமிழாக்கம். [இன்றுள்ள செவ்வியல்மொழி என்ற பொருளில் அல்ல. செம்மைசெய்யப்பட்ட என்ற பொருளில் கையாளப்படுகிறது அச்சொல்] அன்றைய மொழியில் அது செயற்கையாக அறிவியக்கத்தின்பொருட்டு உருவாக்கப்பட்ட மொழி. கல்வியற்றவர் அறியாமல் பேசப்பட்டது. பிராகிருதம் மற்றும் அபப்பிரம்ஸம் போன்ற வடிவங்கள் பிறரால் பேசப்பட்டவை. அவ்வாறு மக்கள் பேசிய மொழிகள் இன்றைய மக்கள்மொழிகளாக உருவாகிவந்தன. சம்ஸ்கிருதம் அல்லது செம்மொழி அப்படியே கல்விக்கான தனிமொழியாக நீடிக்கிறது.
மகாபாரதம் சொற்கடல். வெண்முரசும் அப்படித்தான் இருக்கமுடியும். இதுவரையிலேயே கூட மருத்துவம், போர்க்கலை பற்றிய நூற்றுக்கணக்கான கலைச்சொற்கள் அதில் வந்துள்ளன. அவற்றை குறிப்பாகத் தெரிந்துகொள்ள தனியாக அதற்காக முயலலாம். அச்சொற்களை புரிந்துகொள்ள அவை பயின்றுவரும் தருணத்தை கவனித்தாலே போதும்.
ஜெ