Wednesday, July 9, 2014

வெண்முரசு- அ.ராமசாமி

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:  ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.

ஊரின் மேற்கோரத்தில் அவர் வீடு இருந்தது. அதனால் மேற்கு வலசல் ராமையா என்று அவரை அழைப்பார்கள். கையெழுத்துப் போடத் தெரிந்த அவர் ஒருமுறை ராமசாமி என்று எழுதினார். அப்போது தான் எனக்கு அவரது பெயரும் எனது பட்டாப் பெயரும் ஒன்று என்று தெரிந்து கொண்டேன். அவர் கதை சொல்லும் விதத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பத்து நிமிடத்தில் சொல்லி முடிக்கக் கூடிய கதையைப் பத்து மணி நேரம் சுவையாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் கதை சொல்லும் முறையில் இன்று சொல்லும் நாடக உத்திகள் இருந்தன. கதை கேக்கும் நபர்களைப் பங்கேற்க வைப்பது; கேட்பவர்களின் மனதைக் கதாபாத்திரங்களின் மனதோடு இணைத்துச் சொல்லுவது; இடையில் விலகிச் சென்று ஊரில் நடக்கும் ரகசியமான செயல்களை அதில் புகுத்தி விடுவது என்றெல்லாம் விரிக்கக் கூடியவர்.


இன்னொரு பக்கம் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருப்பான். நான் படித்த புத்தகங்களில் மிகப் பெரியதும் இன்றும் நினைவில் இருப்பது மகாபாரதத்து விராட பர்வம் . விராட பர்வத்தையும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகனையும் தான். அதை எழுதியதால் தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்று அழைக்கப்பட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. என்னுடைய சின்ன தாத்தா- அம்மாவின் சித்தப்பா படுத்த படுக்கையாக இருந்தார். பேச்செல்லாம் இல்லை. காது கேக்குமா என்பது சந்தேகம் தான். என்றாலும் விராடபர்வத்தைக் கேட்டால் சாவு நல்ல சாவாக அமையும் என்றும், சொர்க்கம் போகும் வாய்ப்புக் கூடுதலாகும் என்றும் நம்பியதால் ஒவ்வொரு நாளும் யாராவது அவர் அருகில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்.


ஒரு காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது நான் விராட பர்வம் முழுவதையும் வாசித்தேன். கேட்டு விட்டு தனது ஆயுளை நீட்டித்துக் கொண்ட தாத்தா அரையாண்டுத் தேர்வில் சக்கரவர்த்தித் திருமகன் படிக்கச் சொன்னார். முழுப் பரீட்சை விடுமுறையில் பாரதக் கதையின் ஆதிபர்வத்தைத் தொடங்கினேன். அதை முடிக்கும் முன்பே அவரது கதை முடிந்து விட்டது. ஒருவேளை ஒன்றிரண்டு வருடம் அவர் படுத்த படுக்கையாக இருந்திருந்தால் இந்தியாவின் கதைக் களஞ்சியமான மகாபாரதக் கதை முழுவதையும் அப்போதே வாசித்து முடித்திருப்பேன். இவற்றையெல்லாம் வாசித்த போது ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம்.


அப்புறம் அம்மாவின் சின்னம்மாக்கள் ரெண்டு பேர் நீண்ட காலம் விதவைகளாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் எங்கள் உறவினரில் யாரும் வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு விதவைக் கோலத்தில் வாழ்ந்ததில்லை. விதவை வாழ்க்கையின் கடைசி அடையாளங்கள் அவர்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவர்களது விதவை வாழ்க்கையின் பதிலீடாகவே அவர்களுக்குக் கதை கேட்டல் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.. அவர்கள் அம்மாவின் சின்னம்மாக்கள் என்ற உறவுக்கும் மேலாக அப்பாவுக்கும் சித்தப்பா வழி அக்காமார்களும் கூட. இருவருமே ஒரே புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரே நாளில் விதவைகளானவர்கள். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு வாசிக்கத் தெரியும். அவரது தந்தைக்கு இரண்டு பேர் மட்டும் தான் பிள்ளைகள். ஆண் வாரிசு எதுவும் இல்லை என்பதால் அவரது நிலபுலன்களுக்கும் அவர் சேர்த்து வைத்திருந்த புராண, இதிகாசப் புத்தகங்களுக்கும் அவர்கள் தான் வாரிசுகள். அவர்களுக்கம் நான் பல நாட்கள் கர்ணன் சண்டை, அசுவமேத யாகம், கிருஷ்ணன் தூது, அல்லியரசாணி மாலை ,சுமந்திரன் களவு மாலை போன்ற பெரிய எழுத்துக் கதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். எங்கள் வீடுகளில் இருந்த புத்தகங்களில் ஒன்று கூட சிவனை மையப் படுத்திய புத்தகங்கள் இருந்ததில்லை. வைணவக் குடும்பங்கள் என்பதற்கான அடையாளங்களாக இவை பெரிய டிரங்க் பெட்டிகளில் அடுக்கப் பட்டிருந்தன.


மிகச் சின்ன கிராமம் என்றாலும் பாரதக்கதையின் தொகுப்புக்கள் எங்களூர்ச் சாவடியில் ஒன்றும் சில வீடுகளிலும் இருந்தன என்பது முக்கியம்.எனது தாய்மாமாவுக்கு முக்கியமான வேலையே பாரதம் படிப்பதுதான். நல்ல குரல்வளத்தோடு ஜனமே ஜய மகராசனே எனத் தொடங்கி அவர் பாரதம் படிப்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

இப்படியெல்லாம் பாரதக் கதைகளைக் கேட்டும் வாசித்தும் வளர்ந்தவன் தான் என்றாலும் என் காலத்து மனிதன் ஜெயமோகன் -தன்னை நவீன வியாசனாக மாற்றிக் கொண்டு எழுதிப் போகும் வெண்முரசின் முதல் ஐந்து கூறுகளையும் இன்று ஒருசேர வாசித்துப் பார்த்தேன். என்னால் இப்படித்தான் வாசிக்க முடியும். எனது 35 வருட வாசிப்பு வாழ்க்கையில் ஒரு கதையைக் கூட தொடராக நினைத்து விட்டுவிட்டுப் படித்ததில்லை. மொத்தமாகப் படிப்பதுதான் எனது வழக்கம். அதில் ஒரு சிறுமாற்றமாக ஒவ்வொரு வாரமும் மொத்தமாக ஆக்கிக் கொண்டு ஜெயமோகனின் வெண்முரசை வாசிக்கப் போகிறேன். நண்பர்களே நீங்கள் உங்கள் விருப்பம்போல வாசிக்கலாம்.


===========================================

நன்றி அ.ரா

ஆனால் சட்டென்று ஒரு வருத்தம். எல்லாமே கடந்தகாலமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எதுவுமே இல்லையா? எவருமே வாசிப்பதில்லையா?

ஐந்நூறு வருடம் முன்பு  அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் ஆரம்பித்த பேரியக்கம் மகாபாரத பிரவசனம். கிராமம் தோறும் பாரதமண்டபம் கட்டுவித்து கதைசொல்லிகளுக்கு கோயில் உரிமையும் அளித்து தொடங்கப்பட்டது. தென்னகத்தில் அது ஒரு பெரிய சலனம்

உங்கள் வரிகளைப்பார்த்தால் அதற்கு திரைவிழுந்துவிட்டது என்றல்லவா தோன்றுகிறது

ஜெ


=================================================

அன்புடன் ஜெயமோகனுக்கு

ஆமாம்.. எல்லாம் கடந்த காலமாகி விட்டது தான். எட்டாம் வகுப்புக்குப் பிறகு நான் விடுதியில் தங்கிப் படிக்கத் திண்டுக்கல் போய்விட்டேன். எங்கள் ஊரில் இருந்த பாரதக் கதைகளின் இடத்தை எம்ஜிஆரின் கதைகள் பிடித்துக் கொண்டன. ஊர் முழுக்க எம்ஜிஆர் தான் நிறைந்திருந்தார். எம்ஜிஆர் சினிமா, எம்ஜிஆர் அரசியல்,எம்ஜிஆர் பாட்டு, எம்ஜிஆர் காதல், எம்ஜிஆர் சட்டை, எம்ஜிஆர் காதலித்த பெண்களின் பாவாடை, தாவணி, சடை என எல்லாம் எம்ஜிஆர் மயம்.. 

நான் பள்ளிப்படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரிக்குப் போன போது நவீனத்துவ மனிதனின் நெடி எனக்குள் நுழைந்தது. பழைய கதைகளுக்குப் பதில் புதுக்கதைகள், யதார்த்தக் கதைகள், புரட்சிக் கதைகள். சோதனைக்  கதைகள், பரிசோதனைக் கதைகள் , வாசிப்பே காரியார்த்தமாக ஆகிப் போன பிறகு திரும்பவும் என்னை பாரதக் கதைகளுக்குள் இழுத்துப் போகிறீர்கள். 

திரும்பவும் நன்றி


அ.ரா.