Thursday, July 24, 2014

வியாசனும் கர்ணனும்


அன்புள்ள ஜெமோ
வெண்முரசு தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலமுறை எழுதவேணுமென்று நினைப்பேன். ஆனால் எழுதுவது மிகவும் கஷ்டமானது. சோம்பல்தான். ஆங்கிலத்தில் வழக்கமான ஆபீஸ் கடிதங்கள் மட்டும்தான் எழுதுவது. வேறுமாதிரி எழுதுவது என்றால் பயங்கரமான தயக்கம். சரியான வாக்கிய அமைப்பு அமைந்து வருவதில்லை. நிற்க, இப்போது எழுதியதற்குரிய காரணம் கர்ணனைப்பற்றி வாசித்ததுதான். கர்ணன் மகாபாரதத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். என்றாலும் அவனைப்பற்றி அதிகம்பேர் பாராட்டி எழுதியதில்லை. [சிவாஜி நடித்த சினிமா வேறு வகையானது] இப்போது கர்ணனைப்பற்றி வாசிக்கும்போது மிகவும் மனநெகிழ்ச்சி ஏற்படுகிறது. உண்மையில் கர்ணன் மகாபாரதத்தில் எந்த அளவுக்கு பெரிய கதாபாத்திரம் என்று அறிய விரும்புகிறேன். கர்ணனை நீங்கள் காட்டக்கூடிய விதம் அற்புதம். அதிலும் கர்ணன் கவசகுண்டலங்களைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் அழகான சினிமா. அதேசமயம் லாஜிக்கலாகவும் இருந்தது
சுவாமிநாதன்

அன்புள்ள சுவாமிநாதன்,

வியாச மகாபாரதத்தில் கர்ணன் மிக முக்கியமான கதாபாத்திரம். அதைப்பற்றி முக்கியமான பாரத ஆய்வாளர்கள் அனைவருமே எழுதியிருக்கிறார்கள். பாரதபரியடனம் என்னும் மகத்தான ஆய்வுநூலை எழுதிய எம்.குட்டிக்கிருஷ்ண மாரார் மிக விரிவாகப் பேசியிருக்கிறார். கர்ணனை வியாசனின் மானசபுத்திரன் என்கிறார். கர்ணனைப்பற்றி பேசும்போதெல்லாம் அவன் அழகைப்பற்றி வியாசன் சொல்கிறார். கர்ணனே மகாபாரதத்திலேயே உயரமானவன். அந்த உயரம் வியாசனால் குறியீட்டுரீதியாக அளிக்கப்பட்டது என்கிறார் மாரார்.

இந்தியமொழிகளில் நவீன இலக்கியங்களில் அதிகம் எழுதபட்ட மகாபாரதக் கதாபாத்திரம் கர்ணனேஅதற்கான காரணங்கள் பல
1.   கர்ணன் ஒரு துன்பியல் அல்லது அவல- கதாபாத்திரம். டிராஜடி எனப்படும் துன்பியலுக்கான செவ்வியல் இலக்கணம் என்பது அனைத்து நற்குணங்களும் கொண்ட ஒரு பெரும் கதாபாத்திரம் விதியின் விளைவால், அவனுடைய சில எதிர்மறை இயல்புகளின் விளைவாக, இன்றியமையாத வீழ்ச்சியை அடைவதாகும். மகாபாரதத்தில் கர்ணன் அளவுக்கு அதில் பொருந்திவரும் இன்னொரு கதாபாத்திரம் இல்லை

2.   கர்ணன் புறக்கணிக்கப்பட்டவன், அனைத்துத் தகுதிகள் இருந்தும் வெற்றிபெறாது போனவன். இந்த அம்சம் நவீன வாழ்க்கையின் பல தளங்களுடன் பொருந்திச்செல்கிறது.

கர்ணனின் நல்லியல்புகளும் தீயியல்புகளும் வியாசராலேயே சொல்லப்பட்டுவிட்டன. ஆனால் பின்னர் உருவான பாகவத மரபினர் பக்தி நோக்கில் கிருஷ்ணனை பரம்பொருளாகக் காட்டும்பொருட்டு பல இடைச்செருகல் கதைகளை சேர்த்து கர்ணனை கீழிறக்க முயன்றனர். அக்கதைகள் எல்லாமே சம்பந்தமில்லாத முற்பிறவிக்கதைகள் அல்லது முனிவர் சாபக் கதைகள். மகாபாரதத்தின் செவ்வியல் கம்பீரம் சற்றும் இல்லாத சில்லறைக்கதைகள் அவை. அவற்றை விலக்கியே மகாபாரதத்தை வாசிக்கவேண்டும்


ஜெ