அன்புள்ள தி்ரு.ஜெவணக்கம்.
கர்ணனின் இன்றைய பகுதியை வாசித்து முடிக்கையில் இதயத்தின் சுவர்களை
கண்ணுக்குத்தெரியாத கைகளின் மலர்இதழ் தடவுவதை அறிகின்றேன், அதேவேளை அந்த இதழின் முனையில்
கதரின் சூடு இருந்து சுடுவதுபோல் உள்ளது.
சூரியன் வானில் இருக்கிறது அதன் கதிர்பூமியில் பரவிகிடக்கிறது
அதன்மீதுதான் நடக்கின்றோம், இந்த அந்தியாயம் படித்தப்பின்பு சூரியன்மீதுதான் நடக்கின்றோமோ
என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. கர்ணணின் உள்ளத்தையும் அவன் வாழ்க்கையும் பார்க்கும்போது.
கர்ணனை நினைக்கும்போதெல்லாம் ராதையின் மனநிலையில்தான் இருக்கின்றேனோ
என்று மனம் உவகையும் கண்ணீரும் கலந்து பிசைகின்றது.
அறத்தேவன் அவன் பின்னால் நிற்கின்றான் என்ற அருவ உண்மையும்,
அவன் தானமிடும் விழிகளே அறமாகி அவன் பின் வந்துகொண்டு இருக்கின்றன என்ற உருவ உண்மையும்
தரிசிக்கக்கிடக்கின்றது.
“தான் காலெடுத்து வைக்கும் பாதையாக விரிந்தது அவள் விழிகளே என உணர்ந்தான்“ ஒருபொழும் வடிவழியாக வரியிது.
பிரியமிகுந்த அன்னையின் விழியை அறியும் அந்த மகன் வரம்பெற்றவனா? அல்லது சாபம் பெற்றவனா? எல்லா வரங்களும்
சாபங்களாகவும் எல்லா சாபங்களும் வரங்களாகவும் ஆகும் வாழ்க்கையைத்தான் மனிதனுக்கு தெய்வங்கள்
அருளி இருக்கின்றன. அதன் வழியாகத்தான் மனிதன் தனது உயர்வையும் தாழ்வையும் கண்டடைய முடியும்.
இனி ஒரு நாளும் அவனுக்கு பெண்ணின் விழிகள் அன்னையின் விழிகளாக அல்லாமல் வேறாக இருக்கமுடியுமா?
கர்ணனுக்காக பூரிக்கும் மனம்
இந்த நேரத்தில் அந்த அன்னையின் அகம்படும் வலியை உணராமல் இருக்கமுடியவில்லை அந்த வரிகள்
கர்ணனுக்கு வெயியிலும், ராதைக்கு அகத்திலும் அல்லவா செல்கின்றது. கர்ணனுக்காக அல்ல
ராதைக்காக எனக்கு அழத்தோன்றுகின்றது.
“கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்குக் காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்லி ஒரு துளி எடுத்து சென்னியில் விட்டுக்கொண்டு திரும்பினான்”
இந்த சொல்லும்
காட்சியும், கர்ணன் என்பவன் யார் என்றும் அவன் அகம் இந்த மண்ணில் உள்ள மனிதர்களின்
வயிற்றில் எரியும் தீயை கண்டுகொண்டே இருக்கின்றது அதை வளர்க்கவும் அவிக்கவும் ஒரு வேள்வி
செய்யவே நினைக்கிறான் என்பதைக்காட்டுகின்றது. மனித குலத்தின் மூலநெருப்புடன் உறவாட
நினைக்கின்றான்.
ஆனால், இன்னார்
கையில் அது கிடைக்கவேண்டும் என்று அவன் ஒரு வரையரை செய்வதால் அவன் கொடையில் ஒருமச்சம்
முழுநிலாவில் கறுப்புபோல் பளிச்சென்று தெரிகின்றது. அதுகூட அழகுதான் ஆனால்
அப்படி அவன் சொல்லாமல் உன்னை நம்பிதொழும் ஒருவன் கைப்படுவாய் என்று சொல்லி இருக்கலாம்
என்று நினைக்கிறேன்.
அப்படி இருக்கலாம்,
இப்படி இருக்கலாம் என்று கட்டினவீட்டிற்று நொட்டணம்சொல்லும் கூட்டத்தில் சேரவிரும்பவில்லை,
எது கதையோ, எது கதை மாந்தரின் குரலோ அது அந்த நேரத்தில் வெளிப்படுத்தும்
உண்மை என்ன என்பதைதான் நினைக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் கர்ணன் ஏன்
ஒரு வரையரை வைத்தான் என்ற கேள்வி எழாமல் மனதில் இல்லை அதைத்தான் இங்கு பதிவு செய்கின்றேன்.
மொத்தமாக
இன்றைய
பதிவு வேறு ஒரு தளத்தில் இதயத்தை வைத்து பரவசப்படுத்தியது. வள்ளல் கர்ணன்
என்பதை சொல்லால் அல்ல சொல்லின் பொருள்செய்யும் ஒளியால் கவி வண்ணம்
செய்கின்றீர்கள்.
நன்றி
வாழ்க வளமுடன். ராமராஜன் மாணிக்கவேல்
அன்புள்ள ராமராஜன்
நீங்கள் சொல்வதற்கும் கர்ணன் சொல்வதற்கும் ஒரே வேறுபாடுதான். நீங்கள் ‘கொண்டுபோய் ஆற்றில் கொட்டுவதை’ பற்றிச் சொல்கிறீர்கள். )))) கர்ணன் கொடை அளிக்கிறான்
கொடை என்பது எப்போதும் மூன்று பண்புகள் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே நெறி. 1 பாத்திரம் அறிந்து , நோக்கம் தெளிந்து கொடுத்தல் 2. கொடுத்தலுக்கு பதிலாக எதையும் எதிர்பாராமலிருத்தல் 3. கொடுக்கும் இடத்தில் பணிவுகொள்ளுதல்
இம்மூன்று பண்புகளும் அந்த ஒருசெயலில் விளங்குவதைக் காணலாம். கொடுக்கையில் இந்த குலம், இந்த இன, இன்ன தொழில் உள்ளவனுக்குச் சென்று சேரட்டும் என்று நிபந்தனை இட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி. அது குறையுடையது. கர்ணன் சொல்வது பசிப்பிணி போக்கும் சான்றோன் [அது யாராக இருந்தாலும்] ஒருவரிடம் சென்று சேர்க என்று. அதைச் சொல்லாமல் அவன் கங்கையில் விட்டிருந்தால் அது கொடை அல்ல. கையளித்தல் அல்லது துறத்தல் மட்டுமே
ஜெ,