Monday, July 7, 2014

வண்ணக்கடல் நீர்வழிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் முதுகு வலி சரியாகி தாங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்
... பிரயாணங்களை தவிர்கின்றேன் என்று நீங்கள் உங்கள் பதிவில்
எழுதியிருந்தாலும் பிரயனங்களை தொடர்ந்தபடி தான் இருகின்றீர்கள் என்று
நினைக்றேன் !!

வேலை பளு எவ்வளவு இருந்தாலும் வண்ணக்கடல் அத்யாயங்களை படிப்பது அன்றாட
வேலைகளின் பொருளின்மை இல் இருந்து சிறிது விலகி இருக்க போகும் நேரமாக
ஆகிவிட்டது... ஒரு கடலுக்குள் பல கடல்கள் இருபது போல விரிந்து செல்கிறது
... பாண்டவர்கள் ஆளுமை, கவுரவர்களின் ஆளுமை, துரோணர் ஆளுமை என ஒருபுறம்
கதை மாந்தர்களின் ஆளுமைகள் விரியும் அதே நேரத்தில் இளநாகன், சூதர்கள்
பயணங்கள் வழியாக பாரத நில பரப்பின் விவரணைகளும், மக்கள் வாழ்நிலையும்,
உணவு , கட்டிட , வணிக முறைகள், மத, கடவுள் தொடர்பான வழக்கங்கள் என்று
அன்றைய இந்தியாவினை எங்கள் கண்முன் கொண்டு வருகிறீர்கள் ... மறுவாசிப்பு
செய்யும் தோறும் புதிய புதிய புரிதல்களும், விவரங்களும் வந்து சேர்ந்த
படியே உள்ளன ..

வண்ணக்கடல் படிக்கும் போது , இரு கேள்விகள் எழுந்தன.. 1 - அந்த காலத்தில்
நில வழி போக்குவரத்தை விட , நீர் வழி போக்குவரத்து தான் பிரதானமாக
இருந்ததா? குறிப்பாக வணிக போக்குவரத்து .. அதிகமான துறைமுகங்கள் மிக
முக்யமான மக்கள் மையங்களாக இருந்ததாக விரிகிறது ...

2. நெற்குவை நகர் (வண்ணக்கடல் 24) பதிவில் "சொல்ப்பணம் , பொருள்பணம் "
என்று விளக்கியிருந்தீர்கள் .. இதை பற்றி மேலும் விவரிக்க முடியுமா?
இன்றைய பங்குசந்தை உலகில் "derivatives" என பகுக்கப்படும் options,
futures எனும் கருத்துக்கு ஒத்ததாக உள்ளது .. இவை இந்திய நிலபரப்பின்
பழக்கங்களா இல்லை வெளியில் இருந்து வந்ததா?.. நேரம் கிட்டினால்
விளக்கினால் மகிழ்வேன் ..

நன்றி
வெண்ணி



அன்புள்ள வெண்ணி


பழங்காலத்தில் மட்டுமல்ல நூறுவருடங்களுக்கு முன்னர் கூட நீர்வழிகளே முக்கியமானவை. சரக்குப்போக்குவரத்துக்கு அவை மிக எளியவை, செலவு குறைவானவை. நூறுவருடம் முன்புகூட திருவனந்தபுரத்துக்கு படகில்தான் நெல்லும் பிற பொருட்களும் சென்றன. அதற்ககாவே பெரும் பொருட்செலவில் ஏ.வி எம் கால்வாய் அரசரால் வெட்டப்பட்டது. பக்கிங்ஹாம் கால்வாய் அதர்காகவே சென்னை முதல் விசாகப்பட்டினம்  வரை வெட்டப்பட்டது. இப்போதும் நீர்வழிகளை பயன்படுத்தினால் எரிபொருட் செலவை குறைக்கமுடியும்

அன்றைய வணிகத்தில் சொல்வணிகம் இருந்தது என சில பழைய நூல் குறிப்புகள் உள்ளன. அதை நான் கவித்துவமாக விரிவாக்கிக் கொண்டேன்

ஜெ