Thursday, July 24, 2014

மகாபாரதமும் ஒழுக்கமும்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். 
உத்தாலகரின் கதையில் அவரது மனைவியை வேறொருவர் கேட்கும் போது, மகன் ஸ்வேதகேது அதை தடுக்கிறார். சமூகத்தின் அறத்தில் முன்னேற்றம் வருகிறது. அதே சமயம் பல்லாண்டுகள் கழித்து கலியுகம் வரும் சமயம் அறம் குறைகிறது. இரண்டும் நேர் எதிர் திசையில் உள்ளது.

வரலாற்றிலும் சமூகத்தின் அறங்கள் முன்னேறியே வந்துள்ளது [பழங்குடி சமூகம் -> நிலபிரபுத்துவம்...]. அதே சமயம் கள்ளத்தனம், ஏமாற்றுதல் போன்றவை தற்சமயம் அதிகரித்துள்ளன. இரண்டும் நேர் எதிர் திசையில் உள்ளது.

இதை பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல். 

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை


அன்புள்ள ராஜாராம்

இத்தனை நேரடியாகவும் எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளமுடியாது. இருவெவ்வேறு கோணங்கள் எப்போதும் மாறிமாறிச் சொல்லப்படுகின்றன. ஆதிபர்வத்தில் பாண்டுவிடம் குந்தி பேசும் இடத்தில் பழங்காலத்தில் இருந்த ஒழுக்க அறமீறல்கள் உத்தாலகருக்குப்பின் திருத்தப்பட்டதாகச் சொல்கிறாள். ஆனால் இன்னொரு கோணத்தில் அந்தப்பழங்காலம் என்பது கிருதயுகம். அப்போது அனைத்தும் சிறப்பாக இருந்தன. துவாபர யுகத்தில் அறப் பிழைகள் கூடிவந்து கலியுகத்தில் அப்பிழைகள் மலியவேண்டும் இல்லையா?

மகாபாரதத்தின் அறமுரைத்தல் பகுதிகளுக்கும் அதன் பிறபகுதிகளுக்கும்கூட நேர்நிலையான உறவு இல்லை. அறக் கூற்றுகளில் நீதிகள் சொல்லப்படுகின்றன. ஆனால் காமகுரோதமோகங்கள் மனிதனை மீறி கட்டின்றிபெருகிச்செல்லும் ஒரு காவியச்சித்திரத்தையே மகாபாரதம் அளிக்கிறது

ஜெ