Saturday, July 12, 2014

நாகம் -சஜிதரன்


அன்புள்ள ஜெயமோகன்
   வணக்கம். தங்களிடமிருந்து பாலாறுபோல் வெண்முரசு பெருகி வந்தவண்ணம் உள்ளது. நானோ ஒரு சிறு பூனக்குட்டியைபோல் தீரா பசியுடன் பருகி வருகிறேன். ஒவ்வொரு நாள் பகுதியையும் மூன்று முறைக்கு மேல் படித்து வருகிறேன். எத்தனை முறை படித்தாலும் புதிய திறப்புகளை தருகிறது.
இந்த வரி என்னை மிகவும் நெகிழ வைத்தது. " ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்."
அந்த புன்னகை காந்தியுடையது அல்லவா. காந்தியை போன்று எவர் நடித்தாலும் அந்த புன்னகையை கொணர முடியுமா? ஒரு புன்னகையின் மூலம் பீஷ்மரின் முழு ஆளுமையை வரைந்திருக்கிறீர்கள். அடுத்து அவரின் தனிமையைபற்றிய வரி "மலையுச்சியின் ஒற்றைமரத்தில் கூடும் தனிமை அவரிடம் எப்போதுமிருந்தது." எல்லோரும் பார்க்கமுடியும் ஆனாலும் எவரும் அருகில் வருவதில்லை. மற்ற மரங்களின் மகரந்தங்கள் எதுவும் அடையமுடியாத உயரம் தரும் தனிமை. அவர் நேர்ந்துகொண்ட பிரம்ச்சரிய விரதத்தை கோடிட்டு காட்டுகிறது.
போகிற போக்கில் அர்த்தம் பொதிந்த வரிகள் கதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன.
"அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது. "
இதைப்போன்ற சற்றே கண்ணை மூடி சிந்திக்க  வைக்கும் வரிகள்.
"அன்னையே, ஷத்ரியதர்மம் என்னவென்று நானறிவேன். ஆனால் மானுடதர்மத்தை அது மீறலாமா என்று எனக்குப் புரியவில்லை."
முழு மகாபாரதத்தின் ஒற்றை வரிச்சுருக்கம் அல்லவா இந்த வரி. மகாபாரதத்தில் ஏற்படும் உண்மையான பிரச்சினகள் நன்றுக்கும் தீதுக்குமான போட்டிகள் அல்ல. அறங்களுக்கு இடையேயான முரன்பாடுகள்தான் தான்.

இவ்வாறு வரிக்கு வரி கருத்துகளும் அர்த்தங்களும் படிமங்களும் பொதிந்து கிடக்கின்றன. அதை அகழ்ந்தெடுத்து ஆய்ந்து துய்க்கும் அறிவை எனக்கு ஆண்டவன் அருள்வானாக.

அன்புடன்
த.துரைவேல்அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வாசகனாக இது எனது முதல் கடிதம் – ‘வெண்முரசு’ வாசிப்பனுபவம் தொடர்பாக எழுதத் தோன்றியது. நான் வாசித்துள்ள உங்களது ஏனைய நாவல்களின் நடையில் இருக்கும் கவித்துவமும் மொழிச்சுழிப்பும், ‘வெண்முரசி’ல் சற்றே தளர்த்தப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், பின்னையதுதான் என்னை உங்களுக்குக் கடிதம் எழுதத் தூண்டியிருக்கிறது என்பது என்மட்டில் சுவாரசியமானது.
உண்மையைச் சொல்லப்போனால் உங்கள் எழுத்துடனான எனது உறவை ஒருவித ‘love-hate’ வகைமைக்குள்ளேயே வைக்க வேண்டும். பதின்ம வயதுகளைக் கடந்து ஓர் இதழியலாளனாகப் பணிபுரிய ஆரம்பித்த காலங்களில் மார்க்சியம் பற்றித் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அதே சமகாலத்தில், ‘கன்யாகுமரி’ தந்த அகக்கிளர்ச்சியோடு ‘பின் தொடரும் நிழலின் குர’லை வாசிக்க ஆரம்பித்தபோது அது ஒருவித கசப்பனுபவமாக இருந்ததாகவே நினைவு. இந்த ஏழெட்டு ஆண்டுகளில் அந்த நினைவுகள் மங்கலான சுவரோவியங்கள் போலத் தெரிகின்றன.  பிரமிப்பு, உவகை, மறுப்பு என்பதாக உங்கள் எழுத்து குறித்த மனவுணர்வுகள் அவ்வப்போது மாறி மாறி வந்திருக்கின்றன.
இந்த இடத்தில் என்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்: இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1983ம் ஆண்டு பிறந்தேன். 1991 இல் யுத்தம் காரணமாக மலையகத்துக்கு இடப்பெயர்வு. அதன்பின் வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாம் மாத்தளையில். பள்ளிக் காலம் தொட்டு கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி வருகிறேன். அக்காலம் தொடக்கம் ஆதர்சம், அகத்தூண்டல் எல்லாம் பாரதியார்தான். 2004ம் ஆண்டு இதழியல் கல்லூரியில் பயின்றேன். 2005 கொழும்பு சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் பணி. பின்னர் வெவ்வேறு இடங்களில். தற்போது இங்கிலாந்தின் வோரிக் பல்கலைக் கழகத்தில் மேலைத் தத்துவம் பயின்று வருகிறேன் - 8 ஆண்டு கால  ஊடகத் துறை ஊழியத்துக்குப் பிறகு முழுநேரக் கற்கைக்குத் திரும்பியிருக்கிறேன். பணியில் எதிர்கொண்ட பிரச்சனைகளே நாட்டை விட்டு நீங்கவும் காரணமாயின. இலக்கியம், தத்துவம், மொழிபெயர்ப்பு என்பவை நான் ஆர்வம் கொண்டுள்ள துறைகள்.
எழுத்தில் வடிக்க இயல்வதை விட வாழ்க்கை எத்தனை தூரம் சிக்குகள் நிறைந்தது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
என்னைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டாண்டுகளை வாழ்க்கை அகமுகமாகத் திரும்பிய காலமாகச் சொல்லலாம். கடவுள் என்ற கற்பனைக்குள் (எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது) எப்போதும் மனதைச் செலுத்த இயல்வதில்லை என்றாலும், ‘ஒருபோதும் அறியமுடியாத காலநாடகம்’ பற்றியதும் அதில் சிறுதுளியாக உள்ள இருப்புப் பற்றியதுமான சிந்தனை நெஞ்சை ஆக்கிரமித்திருக்கிறது இந்த நாட்களில். புத்த போதம், அவர் வழங்கிய தியான முறை அணுக்கமாக உள்ளது.
இந்த 2014ம் ஆண்டு பிறந்த வேளை, முன்னைய ஆண்டுகளைப் போலல்லாது பல விடயங்களை இயன்றவரை ஆழ்ந்து கற்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டேன். அந்த வகையில் முதலாவதாகப் பழந்தமிழ் இலக்கியங்களை ஒவ்வொன்றாகக் கிரமமாக அன்றாடம் படித்து வருவது என்று தீர்மானித்தேன். கூடவே ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுதி வரும் மகாபாரதத் தொடரை வாசிக்க வேண்டும் என்பது எனது உறுதிமொழிகளில் ஒன்றானது. அதன்படி ஒவ்வொரு நாளும் படித்து வருகிறேன்.
வெண்முரசின் அத்தியாயங்களை வாசிக்குந் தோறும் எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கும் விடயம், எனது எத்தனையோ எண்ணங்கள், செயற்பாடுகள், எனது உற்றவர், நண்பர்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் எவ்வளவு தூரம் இந்த இதிகாசங்களால் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தான். இதற்குக் காரணம் இந்தக் கதைகளை உதிரியாக சிறு வயதில் வாசித்ததன் தாக்கமா (அப்படி இருப்பது கடினம் – ஏனென்றால் தொடர்புறுத்திப் பார்க்கக் கூடிய சில கதைகள் படித்திராதவை), அல்லது இது மரபின் வழி இழை இழையாக எனக்குள்/எங்களுக்குள் இறங்கிப் படிந்த விடயமா என்பதைக் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதையிலும் வாழ்வின் ஏதோவொரு சரடு வந்து போவது போலத் தோன்றுகிறது - கதையின் நியாயத்தை ஒட்டியும் வெட்டியும்.
‘’ மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று’’ என்ற வரியைப் படித்ததும் துணுக்குற்றுப் போனேன். நாட்டையும் வீட்டையும் நீங்கி வந்திருக்கும் எனக்கு எனது அம்மாவின் தோற்றம் சலனமாக மனதுக்குள் அசையத் தொடங்கியது.
தாட்சாயணியை ஏற்றுக் கொள்ள முடியாத தக்கனின் உள்மனம் தானே இன்னமும் எங்கள் தந்தையரில் பலரை ஆண்டு கொண்டிருக்கிறது?
பீஷ்மருக்கு வியாசர் சொல்லும் மதியுரை, எப்போதும் தன்னுணர்வு கொண்ட மனம் ஏற்க மாட்டாத ஒன்றாகத் தோன்றுகிறது. மனிதர்களாகிய எங்களைப் பிரம்மாண்ட இருப்புகளாகக் கற்பிதம் செய்து கொள்ளும்போது எறும்பு சிற்றுயிராகிறது. ஆனால் பேரண்டத்தை அடக்கிய முழுமைக்கு பூமி உள்ளடங்கலான கோடான கோடிக் கோள்கள் அனைத்தும் சிற்றணுக்கள்தாம் என்பதை எண்ணும்போது ‘நான்’ என்ற தன்னிலைக்கென்று ஏது சாரம்? அது துலக்கமாகும் வேளை கிழச்சிம்மத்தின் தர்மத்தை ஒப்ப இயலுமோ என்னவோ..
இவை ஒரு புறமிருக்க, இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான பிரதானமான காரணம், எனது இன்றைய அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டேயாகும். இதனை எழுதுவதற்கு முன்னதாக வெண்முரசின் பதினோராவது அத்தியாயத்தை வாசித்து விட்டு மறுபடியும் முதலாவது அத்தியாயத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன்.  பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய வெவ்வேறு கதைகளைப் படித்திருக்கிறேன். மானசாதேவி சொன்ன கதை பரவசம் தரும் ஒன்றாய் இருந்தது. வாசித்துக் கொண்டிருந்தபோதே இந்தப் பேரியக்கத்தின் பிரம்மாண்டம் குறித்த பிரமிப்பு சந்தங்களாக நெஞ்சில் நுரைக்கத் தொடங்கியது. சொற்கள் அனிச்சையாகச் சுழலத் தொடங்கியது போன்ற உணர்வு. அவற்றை ஒரே வேகத்தில் விருத்தப்பாக்களாக எழுதிப் பார்த்தேன். ஐந்து பாடல்கள் தொடர்ச்சியாக எழுத முடிந்தது. அதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை. நான் யாப்புக் கவிதைகள் எழுதி நெடுங்காலமாகிறது… இன்று எழுதியவற்றை எனது புதிய வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்:

 http://www.anichcha.com/2014/01/blog-post_10.html

அவற்றில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை - தேவைப்பட்டதாகத் தோன்றவுமில்லை. அந்தக் கணத்தின் தடமாக அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த முழுமையின்மையிலும் ஒரு சிறு நிறைவு. படித்துப் பார்ப்பீர்களேயானால் மகிழ்வேன்.
இறுதியாக, ‘’விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது’’ என்று மானசாதேவி ஆஸ்திகனுக்குச் சொல்லும் வார்த்தைகள் உங்களைக் குறித்தவை என்றும் கூடத் தோன்றுகிறது. எண்ணியபடி, இந்தத் தொடரை முழுமை செய்யும் பெருநிகழ்வு நிகழ்ந்தேற வேண்டும் என்பது எனது அவா.

மிக்க அன்புடன்
தவ சஜிதரன்

அன்புள்ள சஜிதரன்

கவிதைகளைப்பார்த்தேன்.

யாது கொல்லோ நிறைத்ததெனில்
இருளே அன்றி வேறில்லை
பூதம் ஒத்துப் பேரிருளும்
புரண்ட தொற்றை நாகமென!!

அழகான வரி. நன்றி

மகாபாரதம் கதையாக அல்லாவிட்டாலும் சொற்களாகவே நம் வாழ்க்கையுடன் பிணைந்திருக்கிறது. ‘அர்ஜுனன் போல’ பீமன் போல’ என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்

மகாபாரதம் உருவாக்கிய கதைமாந்தர்கள் ஒருவகை ஆர்க்கிட்டைப்புகள். நம்முள் இருப்பார்கள்

ஜெ