Wednesday, July 9, 2014

தியாகத்தின் கதைகள்

அன்புள்ள திரு.ஜெ..வணக்கம்.

அம்பை பித்தியாகி காசிமன்னன் மருதிருமணத்தில் மீண்டும் தன்னைக்கண்டடைகிறாள். அதுவே அவளை காசியில் இருந்து வெளித்தள்ளுகிறது. அன்னை இறந்துவிட்டாள். அவளைப்பொருத்தவரை அன்று காசி மன்னனும் இறந்துவிட்டான்.

அவளுக்கு என்று இருப்பது நிருதன் மட்டும் என்று அவள் அகம் சொல்லும் ஒரு தருணத்தில் தனது பித்து அவளிடமிருந்து வெளியேறுகிறது.

முழு ஆண் சமுகத்தின்மீது எழுந்த மொத்த வெறுப்பின் பித்தில் நிறுதன் என்ற ஒற்றை மூலிகைச்செடி அவள் பித்துக்கு மருந்தாகிவிட்டதை அறிகிறாள். அந்த கணம்,  அவளுக்கு ஒரு அண்ணனும் மகள்  உடம்பில் இருக்கும் ஒரு மகனும் கிடைக்கிறர்ள்.  அவளுக்கு அன்று இந்த மண்ணில் வாழ தோன்றுகின்றது. அவள் வாழும் வாழ்க்கையைத்தான் சிகண்டிக்குக் கொடுக்கிறாள். வாழ்வதின் அர்த்தம் புரிவதால்தான் அவள் நிருதன் பாதம்தொடுகிறாள். அவளக்குள் இருந்து அவளை அலைக்கழித்த ரஜோகுணம் சத்வகுணமாகி விட்டதை உணரும் தருணம் அது. அவள் உணர்ச்சியின் உச்சில் செயல்படமுடியாத பித்தியோ? உணர்ச்சியின் அகலத்தில் அலையடிக்கும் ராஜகுமாரியோ அல்ல? கனிந்த இதயம் கொண்ட வெறும் தாய்மை அவ்வளவுதான். அது ஒன்றுபோதும் வாழ.

வாழ்வின் மீது கொள்ளும் தீராத ஆசைதான் தற்கொலையும். சதியாகும் பெண்கள் அதைதான் நிலை நிறுத்துகிறார்கள். சமுதாயத்திற்கு பயந்தோ, அல்லது நெறியை காட்டி சதியாகும் பெண்களை இங்கு சொல்லவில்லை. தீராக்காதலில் சதியாகும் பெண்கள். சிவனை எந்தவிதத்திலாவது அடைந்தே தீரவேண்டும் என்று நீறாகும் தாட்சாயினிக்கு பொருந்தும். தாட்சாயணிப்போலவே படைக்கப் பட்ட அம்பை அந்த முடிவை எடுப்பது சரிதான். ஆனால்…

அம்பை வாழ்வின் சுவையறியும் ஒரு தருணம் ஒன்று உங்களால் சுட்டப்படும்போது அதையே அவள்ப் பற்றிக்கொண்டு மீண்டும் ஒரு தவம் இயற்றி இருக்கலாமே.

ஆபுத்திரன் போல உங்களால் படைக்கப்பட்ட சிகண்டினி என்னும் வராகிபுத்திரி தவம்கொள்ளும் தருணம் இருக்கும்போது அம்பை ஏன் மீண்டும் ஒரு தவம் செய்து இருக்கக்கூடாது.

சிதை செய்து கொடுக்க ஒரு நிருதன் அமைந்ததுபோல, மாது ஒருபுறம்ஆகி மலரோடு நிற்கவும், ஆண் ஒருபாகமாகி சூலமேந்தி திகழும் ஸதூணகர்ணன் சிலை சிகண்டிக்கு கிடைத்ததுபோல அம்பைக்கு கூடுவிட்டு கூடுபாய கத்துக்கொடுக்கும் ஒரு சடைமுனி அவளுக்கு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கே.  அப்படிச்செய்து இருந்தால்  பித்தியின் பால்க்குடித்த காரணத்தாலேயே விதியின் வலையில் ஒரு பெரும் கண்ணியாகிவிடும் சிகண்டி நிலை நெஞ்சம் பிழிகிறது. சிகண்டினி என்னும் சிகண்டியை தனிக்கண்ணியாகப் பிண்ணி பின் விதியின் வலையில் கோக்க வேண்டிய நிலை வந்திருக்காதே.
”மகனே சிகண்டி” என்ற ஒற்றைச்சொல்லுக்காகவே  சிகண்டினி இத்தனை பெரிய தியாகம் செய்யவேண்டிய நிலையின் கடிணத்தில் எழுந்தது இந்த கடிதம்.

எந்த ஒரு காரணமும் இல்லாமல் தன்வாழ்வை தியாகம் செய்த நிருதனை நினைக்கும்போது சிகண்டி செய்தது சரிதான். தியாகம் செய்ய மலையளவு காரணமா தேவை? ஒரு நொடியின் கனம்கூட போதும்தான்.

நன்றி! மிக மிக நன்றாக உள்ளது. சிகண்டியின் கதை. எங்கே வடக்கு முகத்தில் செய்ததுபோல முகம் அறியா வேடரால் சிகண்டி உண்டாகி விடுவானோ என்ற பதைப்பு இருந்துக்கொண்டே இருந்தது.சிகண்டியின் படைப்பின் மூலன் வெண்முரசின் சிரசில் ஒரு மணிக்கலை பட்டைத்தீட்டி வைத்து உள்ளீர்.

அம்பையின் மேனியில் ஒரு தூசுக்கூட ஒட்டமுடியாத அளவு அனலால் உருவாக்கி அனலிலையே போட்டு விட்டிரே! மாசே இல்லாத அனல்பதுமை அம்பை.

என்னதான் சொல்ல வருகிறாய் என்று கேட்டால்?
எல்லாவற்றையும் சொல்ல முடியுமா என்ன?
சொல்ல முடிந்தது நன்றி மட்டும்தான்.  

நன்றி
வாழ்க வளமுடன்.  

ராமராஜன் மாணிக்கவேல்