Wednesday, July 9, 2014

சில ஐயங்கள்

மதிப்பிற்குறிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய வெண்முரசை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குள் ஒரு சில சந்தேகங்கள்.

1. சகுனி, பரிசுப்பொருள் கொண்டு வரும் பொழுது முதலில் 10 யானைகள், 1000 ஒட்டகம், 1000 குதிரை வண்டிகள், பின்னர் 1000 மாட்டுவண்டிகளிலும் கொண்டுவந்தான் என்று எழுதியிருக்கின்றீர்ள். காந்தாரம் என்பது பாலைவனம் தான்டி இருக்க கூடிய நிலம். அங்கிருந்து எப்படி 10 யானைகளையும் 1000 மாட்டுவண்டிகளையும் பாலைவனம் தாண்டி கொண்டுவந்தார்கள். இன்னொன்று அந்த காலங்களில் அங்கு யானை கிடையாதுதானே!

2. நிரைய பெயர்களை அறிமுகப்படுத்துகிறார். வாசிப்பில் எனக்குள் அது ஒரு சிக்கலை ஏற்படுத்துவது போன்று தோன்றியது. ஒரு கேரக்டர் பத்து அத்தியாங்களில் வருகின்றது என்றால் அதற்கு ஒரு பெயரை சூட்டி அழைப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு வரியில் வருகின்ற யானை குதிரைகளுக்கெல்லாம் பெயர்வைக்கும் பொழுது வாசிக்க சிறிது அயற்சியாக இருக்கின்றது. இதே சிக்கல் விஷ்ணுபுரம் படிக்கும் பொழுதும் எனக்கு இருப்பதாக தோன்றியது. 

3. கதையில் வருகின்றவர்களில் முக்கால்வாசி பேர் விதுரனை சூதரே என்று அழைக்கிறார்கள். இது ஆசிரியரே வலிந்து தினிப்பது போன்றிருக்கின்றது. பழைய மகாபாரதக்கதைகளில் துரியோதனன் மற்றும் சகுனி இருவர் மட்டுமே அவரை நீ தாதிக்கு பிறந்தவன் என்று கூறுவதாக இருக்கும். வெண்முரசில் வருகின்ற கதாபாத்திரங்களில் நிறைய பேர் அவரை சூதரே என்று அழைக்கிறார்கள்.

நீங்கள் ஏன் அவரை நொடிக்கு நொடி சூதரே என்பதை சுட்டிக்காட்டுகிறீர்கள். அவர் பிறப்பால் சூதர் என்றால் எந்த முறைப்படி அவர் சூதர். அன்னை சூதர் என்றால், சத்தியவதியூம் ஒரு மீனவபெண்தானே, அதுவும் அக்காலத்தில் சூதர்குலம் தானே? இல்லை தந்தை வழி சூதர் என்றால், திருதிராஸ்டிரரும், பாண்டுவும் கூட சூதர்கள் தானே. மூவருக்கும் தந்தை ஒருவரே அல்லவா? இல்லை ஆசிரியரின் கூற்றுப்படியே எடுத்தாலும் மூவருமே விசித்திரவீரியனின் அறப்புதல்வர்கள் தானே. நீங்கள் எதற்காக கதை மாந்தர்களை வைத்து வித்ரன் சூதர் என்பதை நொடிக்கொருமுறை சுட்டிகாட்டுகின்றீர்கள்.


அன்புடன்,
சு.பொன்முகுந்தன்.

அன்புள்ள பொன் முகுந்தன்
1. ஒரு புனைவில் இதெல்லாம் சிறிய வினாக்கள். சகுனி பொருட்களை வண்டிகளில் கொண்டுவந்திருக்கலாம். சிந்துவைத் தாண்டியபின் யானைகளை அமர்த்தியிருக்கலாம். யானை பீடு என்பதன் அடையாளம். அணிவகுப்புக்குரியது. காந்தாரத்தில் யானைகள் மிகக்குறைவு என முன்னரே சொல்லப்பட்டுவிட்டது
2 ஒரு செவ்வியல்தன்மை உள்ள ஆக்கம் ஒருவாசகனின் புரிதலுக்காக தன்னை குறைத்து எழுதப்படுவது அல்ல. அதில் உங்களுக்கு எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவுதான் உங்களுக்கு. மதுரை கோயில் சிற்பங்களில் எவ்வளவு சிற்பங்களை நீங்கள் பார்த்திருக்கமுடியும்? கோபுரச்சிற்பங்களில் எத்தனை சதவீதம் தெளிவாகக் கண்ணில்படும்? அது கிளாசிசத்தின் இயல்பு. அது முழுமை செறிவு ஆகியவற்றை கொண்டிருக்கும். காடுபோல. காட்டில் 10 சத செடிகளைக்கூட நாம் அறிந்திருக்கமாட்டோம்
3 சூதரே என எவர் விதுரரை அழைக்கிறார்கள், எங்கே என்பதைக் கவனித்தால் புரியும்

ஜெ