Friday, July 25, 2014

இடைச்செருகல்கள்

 அன்புள்ள ஜெ,
முன்பு ஒரு கடிதத்தில் மகாபாரத இடைச்செருகல்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். மகாபாரதத்தின் இடைச்செருகல்களைப் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்துள்ளனவா?
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி
மகாபாரத இடைச்செருகல்களைப்பற்றி வெவ்வேறு அறிஞர்கள் விரிவாகவே பேசியிருக்கிறார்கள். பி.ஆர். அம்பேத்கர், டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்று- பண்பாட்டு ஆய்வாளர்கள். ஐராவதி கார்வே போன்ற மகாபாரத ஆய்வாளர்கள்.

பொதுவாக இன்றுள்ள மகாபாரதமே ஒரு கூட்டுப்படைப்பு. அதிலுள்ள ஜய என்ற நூல் வியாசனால் ஆக்கப்பட்டது. அதன் மொழியமைப்பும் கவியழகும் அதைக் காட்டுகிறது. வியாசரின் மாணவர்கள் எழுதிச்சேர்த்ததையும் சேர்த்துக்கொண்டு மகாபாரதம் என்ற நூலை உருவகிக்கலாம். பிறரால் எழுதப்பட்டவை தெளிவாக தெரியுமளவுக்கு ஒரு படி கீழானவையாகவே உள்ளன.

அதன் பின்னர் வெவ்வேறு காலங்களில் இடைச்செருகல்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன. ஐராவதி கார்வே பிருகு மரபு பிராமணர்களின் இடைச்செருகல்களைப்பற்றி விரிவாகவே பேசுகிறார். பெரும்பாலான முற்பிறவிக் கதைகளும் பிராமணர்களை போற்றும் கதைகளும் கிபி இரண்டாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரை பாரதக்கதையை பரப்பிய பிருகுபிராமணர்களால் சேர்க்கப்பட்டவை. மகாபாரத நிகழ்வுகள் எல்ல்லாமே பிராமணர்களின் சாபத்தால் நிகழ்ந்தவை என அந்தக்கதைகள் சொல்லும். சாதாரணமாக வாசித்தாலே அவை பொருத்தமற்றவை என்று தெரியும்.

உதாரணமாக உத்தங்கரின் கதை. சிறுபிள்ளைத்தனமான கதை. நம்மூர் கோயில் அர்ச்சகர் சொல்லும் தலவரலாற்றின் தரம் கொண்டவை. வியாசனின் கவித்துவமோ தரிசனமோ இல்லாதவை. கம்பராமாயணத்தில் வாலி எழுதிய பகுதிகளைச் சேர்த்தது போல தெரியும். அந்த வேறுபாட்டை உணரமுடியாத பக்தர்களும் பிறரும் அதையும் பாரதமாகவே சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஜெ