Monday, July 7, 2014

பெண்ணியமும் முதற்கனலும்- ஜெயசாந்தி

ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்து

மகாபாரதம் இந்தியாவின் பழமையை, பெருமையைப் பறைசாற்றும் இதிகாசங்களில் ஒன்று. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் நிலா முற்றத்து நார்க் கட்டிலில் அமர்ந்தபடி ஒவ்வொரு நாளும் அப்பா அந்த கதைகளைச் சொல்லும்போது சந்தோஷமாகவும் வியப்பாகவும், அதே நேரத்தில் வாழ்க்கையின் பல்வேறு நெறிகளைப் புகட்டுவதாகவும் உணர்ந்திருக்கிறோம். கதையின் ஊடாக பாத்திரங்களின் பண்புகள், உறவின் விழுமியங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என சுவாரஸ்யமாகவும், அனைத்து மெய்ப்பாடுகளையும் எங்களுக்குள் எழுப்புவதாகவும் அந்த அற்புதமான அனுபவம் அமைந்திருந்தது.

மின்னூடகங்களின் வருகைக்கும் பெரும் தாக்கத்திற்கும் முந்தைய காலகட்டத்தில் தாத்தா பாட்டி உறவுகளைப் பழைய பொருட்களைப் பரணில் வீசி எறிவது போல் நம்மிலிருந்து வெட்டிவிடாத அந்தக் காலங்களில் வளர்ந்த குழந்தைகள் பலருக்கும் இந்த நேர்த்தியான அனுபவமும், அதிலிருந்து கைவரப்பெற்ற பாடங்களும் வாய்க்கப்பெற்றிருக்கும்.

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடரைப் பாராட்டியிருக்கும்பேரா.முனைவர்.அ.ராமசாமி அவர்களும் தம் பாலிய பருவத்தில் மகாபாரதத்தோடு தனக்கு ஏற்பட்ட தொடர்பை, உள்ளார்ந்த நெருக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு பலரது இளமைக் கால வாழ்வின் நினைவூட்டல்களாகவே அவரவர் உள்ளத்தில் புதிய உணர்வை ஏற்படுத்துகின்றது.

நேரடியாகச் சொல்வதென்றால், ஜெயமோகன் அவர்களின் பிற படைப்புகள் வாசகர்களை வசீகரித்திருப்பதைக் காட்டிலும், அதிகமான வாசிப்பு இன்பத்தைத் தருவதாக ‘வெண்முரசு’ வாசிப்பவர்களோடு சேர்ந்து நடைபோடுகிறது. பல்வேறு புராணங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் கதைகள் நேர்த்தியாகப் பின்னப்பட்டு கதையோட்டத்தில் செறிவான நடையில் நம்மை மீள முடியாத அமிழ்த சாகரத்திற்குள் இழுத்துச் செல்கிறது.

மகாபாரதக் கதை மீண்டும், மீண்டும் ஆயிரக்கணக்கான வருடங்கள் சொல்லப்பட்டு, புதிய புதிய விஷயங்கள் அதிலிருந்து உணரப்பட்டு வந்தாலும், வெண்முரசு தரும் முற்றிலும் புதிய அனுபவம் வாசகனை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்கிறது. இதைப் பற்றி எழுதுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருப்பினும், சமீபத்திய சர்ச்சையையொட்டி எழுந்த சிக்கலின் பின்னணியில் சில கருத்துக்களைப் பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பாரதக் கதையில் முக்கியமான பெண் பாத்திரமாக அடையாளம் காணப்படும் திரௌபதி மகாகவி பாரதியாராலும் கூட பாரத சக்தியின் குறியீடாக, படிமமாக பாஞ்சாலி சபதத்தில் படைக்கப்பட்டிருக்கிறாள். தன்னை அடிமையாக்கிய பிறகு என்னிடத்தில் யதிஷ்ட்ரனுக்கு (தர்மன்) எந்த உரிமையும் இல்லை என்ற அவளது ஆவேசப் பெண்ணியக் குரல் ஆணாதிக்க சிந்தனையில் ஆணி அடிக்கிறது.

அம்பை என்ற பாத்திரம் காலம் காலமாக பல்வேறு புனைவுகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டிருந்தாலும், வெண்முரசில், கதை சொல்லும் போக்கில் அவளுக்கும் பீஷ்மருக்குமான உரையாடல் மற்றும் வாழ்வைத் தேடி அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படும் அப்பெண்ணின் ஆற்றாமையும் சினமுமாக ஜெயமோகனின் எழுத்துக்களில் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தில் பெண்ணின் உள்ளத்திலிருந்து அவள் விழிகளின் வழியாகவே வாழ்வையும் உலகத்தையும் பார்த்து அவர் பதிவு செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்ணின் பிரச்சினைகளைப் பெண் மட்டுமே எழுத முடியும் என்ற குரலும் வாதமும் இங்கு அடிபட்டுப் போகிறது.

பீஷ்மருடன் விவாதிக்கையில் தன் விருப்பப்படித்தான் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்று அவள் உறுதியாகச் சொல்வதும், அப்படிப் பேசுகின்ற ஒரு பெண்ணை தான் அதுவரை பார்த்ததில்லை என்று பீஷ்மர் எண்ணுவதும், சால்வன், பிறகு தன் தாய்நாடு என்று அலைக்கழிக்கப்பட்டு பெற்ற அன்னையின் மடியில் கண்ணீர் சிந்தக்கூட உரிமையற்றவள் என்ற கழிவிரக்கத்துடன் அலைபாயும் அம்பை பீஷ்மரிடம் காதலையும் தனக்கான வாழ்வையும் கேட்பதையும், மறுக்கப்பட்டதும் படிப்படியாக மூண்ட சினத்தில் முற்றிலும் உருமாறிப் போவதுமாக... கூர்மையான எழுத்துக்களை பெண்ணின் உணர்வுகளிலே தோய்த்து வடிவமைத்திருக்கிறார் ஜெயமோகன். 

காதலும் கூட அரசியல் சார்ந்தது என்ற வெளிப்பாடு சால்வனின் வார்த்தைகளில் தெறிக்கிறது. அதே நேரத்தில் ஒரு ஆணும் பெண்மையை யோசிக்க முடியும் என்பதை “பெண்களின் மனதைத் திறக்காமல் அவர்கள் வயிற்றைத் திறக்க முடியாது” என்ற பிரம்மச்சரிய பீஷ்மரின் சொற்களில் கொண்டுவரும் லாவகம் ஜெயமோகன் பெண்மையையும், பெண்ணியத்தையும் ஆழமாக உணர்ந்திருப்பவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் அறிக்கை பெரும் சர்ச்சையையும், அவரை நோக்கிய கண்டனக் கணைகளையும் கிளப்பிவிட்டிருக்கிறது. தன்னுடைய எழுத்துக்களை முழுமையாகப் படிக்காதவர்களின் சில்லரை உலகத்தில் தான் இல்லை என்று அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அவர். ஆழமாக யோசித்துப் பார்த்தால் இன்று பிரபலமாக ஊடகங்களில் பேசப்படும் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் பெண்ணியம் குறித்த பதிவுகள் உண்மையில் பெரும் அயர்ச்சியையே தருகின்றன. இலக்கியம் படித்தவள், அதை மாணவர்களுக்குச் சொல்லித் தருகின்றவள் என்ற முறையில்ராஜம் கிருஷ்ணன்அம்பை போன்றவர்களின் படைப்புக்களை வாசித்துப் பெற்ற அனுபவங்கள், புரிதல்கள் - இவற்றைத் தாண்டி இன்றைய பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நம் சமூகத்திற்கு ஒவ்வாததாக அல்லது அந்நியப்பட்டு நிற்பதாகவே என்னால் எண்ண முடிகிறது.

ஹெப்சிபா ஜேசுதாசன், பாமா, சிவகாமி (சிலரது பெயர் விடுபட்டுப் போயிருக்கலாம்) - இவர்களின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும் சமூகம் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வெளிப்பாடுகள் நம் மக்களை, அவர்களின் வாழ்வை கண் முன் கொண்டு வந்து கேள்விகளை முன் வைக்கிறது. சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள் பல்வேறு சமூகக் காரணிகளால் அடிமைபடுத்தப்பட்டு குடும்பங்களிலும் சமூக வெளியிலும் ஒடுக்கப்படும் பெண்களின் உலகை எதார்த்தத்தோடு பதிவு செய்கிறது. இன்றும் நம் சமூகத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்வின் இருத்தலுக்கான போராட்டத்திலும் தன் மீது ஏவப்படும் பொருளாதார மற்றும் பாலியல் சுரண்டல்களிலிருந்து விடுபடுவதற்காக ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் இன்றைய பல பெண் எழுத்தாளர்களின் கவனத்திற்குள் இல்லை என்பதுதான் உண்மை.

சில பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து பெண்களின் உடல்கள், உடல் மொழி, பாலியல் உறவில் தங்கள் சுயம் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் உறவில் பெண்களுக்கு இன்பம் கிடைப்பதில்லை அதைவிட சுய இன்பத்தில் அதிகம் சுகம் காண்கிறார்கள் என்பதுபோன்ற எழுத்துக்கள் எந்த அளவிற்கு இப்போதைய உடனடித் தேவை, அதனால் யார் பயன்பெறப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேற்கத்திய நாடுகளிலிருந்து இரவல் பெற்ற கோட்பாடுகளை பெண்ணிய சிந்தனை என்ற பெயரில் எழுதுவது முற்றிலும் வேறுபட்ட நம் சமூகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்பது புரியவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களிலும் கூட பெண்கள் தங்கள் உடல் அழகைத் தாங்களே வியந்துகொள்ளக் கூடாது, காமத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற தொல்காப்பிய இலக்கணத்தை மீறி பாடல்கள் பாடிய பெண்பாற் புலவர்கள் பலர் உண்டு. அவர்கள் எந்த மேற்கத்தியக் கோட்பாடுகளையும் கடன் பெற்று இலக்கியம் எழுதவில்லை. பெண்ணின் வாழ்வோடு, உணர்வுகளோடு இயைந்த எதார்த்தத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றி வர்க்கப் போராட்டத்தில் சுழன்று கணவனாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகின்ற உழைக்கும் பெண்கள் தங்கள் வேதனையோடு குழந்தைகளையும் விடாமல் சுமந்துகொண்டு இருத்தலுக்கான பெரும் போராட்டத்தில் இருக்கும்போது பாலியல் உறவு இன்பம் பற்றி எங்கிருந்து சிந்திக்கத் தோன்றும்? 

சித்தாள் முதல் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்கள் வரை சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிவரும் இந்நாளில் தங்கள் உடலை கீழானதாக்கிக் கொள்ளாமல் வன்கொடுமைக்கு எதிராக அன்றாடம் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பெண்கள், அதிலிருந்து விடுதலை பெற இதுபோன்ற எழுத்துக்கள் எந்த வகையில் உதவ முடியும்? 

பெண்கள் சுமாகவும், கௌரவமாகவும், முழுமையான உரிமைகளுடனும் வாழ்வதற்கு வழியில்லாத ஒரு சமூகத்தில் பாலியல் உறவும் இன்பமும் பற்றிய சிந்தனையில் எத்தனைப் பெண்கள் அதுதான் தங்கள் முக்கியமான உரிமை என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்?

அஸ்திவாரமே அமைக்கப்படாதக் கட்டிடத்தில் மேல் தளத்தை எழுப்புவது போன்ற முயற்சிதான் இதுபோன்ற எழுத்துக்கள். 

வெகுஜன ஊடகங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் stereotype பெண்களை சித்தரித்து, அவர்கள் விளம்பரங்களில் பெண்களைச் சந்தைப்படுத்துகின்ற வேலையை வெகு சாதாரணமாகச் செய்து வருகின்றன. அதே ஊடகங்கள் முரண்பாடாக தாங்கள் பெண்ணியத்தின் பெரும் ஆதரவாளர்கள் என்ற போலியான சித்தரிப்புக்காக இப்படி எழுதும் சில பெண் எழுத்தாளர்களைத் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர். குடும்பம், அதன் உறவுகள் - இவற்றில் இருக்கும் போலித்தனங்களைக் கேள்விக் கேட்டுக்கொண்டே, அதே நேரத்தில் தங்கள் சுயத்தை இழந்துவிடாமல் வாழந்துவருகின்ற பெண்கள் அணியும் ஆடைகள், அவர்களின் வாழ்க்கை முறை எனப் பல விஷயங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டே கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. 

உதாரணத்திற்கு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பெண்கள் ஏன் பட்டுப்புடவையும் தலையில் பூவுமாக வரவேண்டுமென்று ஒரு பெண்ணிய எழுத்தாளர் ஒரு முறை கேள்வி எழுப்பினார். விரும்பிய உடை அணிவதற்கும், விருப்பப்படி தன்னை அலங்கரித்துக்கொள்வதற்கும் அவரவர்க்கு உரிமை உள்ளது. புடவை, சுடிதார், ஜீன்ஸ் - எதுவாக இருப்பினும், அதை அணிகின்ற பெண்ணின் விருப்பத்தையும் தேவையையும் பொருத்தது. வெளி அடையாளங்களில் பெண்ணியம் நிர்ணயிக்கப்படுகிறது என்று மற்றவர்களை கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தான் செய்வது சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்ற ஆதிக்க மனோபாவத்தையல்லவா அது காட்டுகிறது? ஒருபுறம் பெண்களை எதார்த்தத்திலிருந்து முரண்பட்டு செயற்கையாக மெகா-மகா சீரியல்களில் சித்தரித்தபடி விளம்பரங்களில் சந்தைப் பொருளாக்கிவிட்டு மறுபுறம் தாங்கள் பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்ற பாவனையை ஏற்படுத்தும் வெகுஜன ஊடகங்களின் போக்கிற்கு இதுபோன்ற பெண் எழுத்தாளர்கள் பலியாகிறார்கள் என்பதே உண்மை.

மகாபாரதக் கதைகள் உண்மையா இல்லையா என்ற சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், அவை உறவுகளை, உணர்வுகளை, பல விழுமியங்களை நம்மில் புதுப்பிப்பவை. அதன் தொன்மங்களும் படிமங்களும் பல்வேறு சிந்தனைகளை இன்றைய சமூகத் தளத்திலும் எழுப்புபவை என்பதை மறுப்பதற்கில்லை.

அம்பை, சத்தியவதி பாத்திரப்படைப்புகளில் நுன்மையான பெண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும் வீச்சை எழுப்பியிருக்கின்றன. சில்லரை உலகத்தில் தான் இல்லை என்ற அவரது அறிக்கையை அவை மெய்ப்பிக்கின்றன.