Sunday, July 27, 2014

கர்ணனின் கவசம்

ஜெ

கர்ணன் கவசகுண்டலங்களுடன் பிறந்தான் என்ற வியாசகற்பனையை நீங்கள் மாற்றியிருப்பதை வாசித்தேன். உங்கள் சித்தரிப்பு மிக அழகாக இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படி மாற்றலாமா என்ற எண்ணம் வந்தது. தீர்க்கசியாமரும் திருதராஷ்டிரரும் அதைக் காணும் விதத்தை வாசித்தபின்னர்தான் அது உங்களால் ஒரு poetic devise ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்தது. அதாவது சந்திரமதியின் தாலி மாதிரி

நன்றி

ராஜாராம்


அன்புள்ள ராஜாராம்

வியாசனும் அதை கவித்துவ உருவகமாகவே பயன்படுத்தியிருக்கிறான். அதை நேரடியாகப் பொருள் கொண்டால் கர்ணன் அரசனாகவும் மாவீரனாகவும் பிறந்தவன் என்றுதான் பொருள். கவசமும் குண்டலமும் ஷத்ரியரின் அணிகலன்கள். ஆயுதக்கலை முடித்தபின்னர்தான் குண்டலம் அணியும் சடங்கு நிகழும். அது உப்நயனம்போல. அதன்பின்னர்தான் ஷத்ரியன் பிறக்கிறான். கர்ணனுக்கு அதை ஷத்ரிய முறைப்படி எவரும் நிகழ்த்தாவிட்டாலும் அவன் ஷத்ரியன் என்பதே வியாசனின் கூற்று

ஆகவேதான் அதற்கு நேர்ப்பொருள் வியாசமகாபாரதத்தில் கொள்ளப்படவில்லை. பிறவியிலேயே கவசகுண்டலங்கள் கொண்டவனை எவருமே புரிந்துகொள்ளவில்லை, துரோணர் கூட அவமதித்தார் என்பது அந்தக் கோணத்தில் விளங்கிக்கொள்ளவேண்டியது.

நான் அதை பருப்பொருளாக அல்லாமல் நுண்பொருளாக , கனவுச்சாயல்கொண்டதாக , ஆக்கியபோதே கவிதை வாசிக்கும் பழக்கம் கொண்ட ஏறத்தாழ அத்தனை நுண் வாச்கர்களும் என்ன செய்யவிருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டுவிட்டார்கள். அது எந்தத் தருணத்தில் எவர் கண்ணுக்கு எப்படியெப்படித் தெரிகிறது என்பதுதான் நாவல் முழுக்க வந்து அது பெரிய கவியுருவகம் [மெட்டஃபர் ] ஆக விரியப்போகிறது என எழுதிவிட்டார்க்ள்

ஜெ