ஓம் ஸ்ரீமுருகன் துணை
அன்புள்ள திரு.ஜெ..வணக்கம்.
அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின்வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான்.
இந்தில் வரும் “உறுமும்” என்ற சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது அந்த முரசின் மொத்த உணர்ச்சியும். அது முரசின் உணர்ச்சி மட்டும் அல்ல அத்தினபுரியின் அக உணர்ச்சியும்கூட. ஒலி..ஒலி..ஒலித்துவிடு என்னும் மக்களின் உள்ளுர்ச்சியும்கூட. எப்போது கோல்விழும் என்று கேட்பவனிடம் தெரியாது என்று கச்சன் சொல்வதும். அதற்கு துருமன் “அதைவிட அந்த முரசிடமேகேட்கலாம்” என்று அங்கதம் காட்டுவது அந்த உறுமலின் வெளிப்பாடுதான்.
உறுமும் என்ற சொல் பயன்படுத்தியப்பின்பு யானையின் வயிற்றை தொடுவதைக்காட்டுவது சரியா? இந்த இடத்தில் புலி என்று வந்தால்தானே சரியாக இருக்கும். உறுமும் என்ற சொல்லுக்காக சொல்லவில்லை. அந்த முரசும் புலிப்போலத்தானே. தொடமுடியாதது. தொடவேண்டியும் உள்ளது. கச்சன் அதன் உறுமலைக்கேட்டுக்கொண்டு அருகிலேயே நிற்கிறான்.
இது உங்களுக்கு அறிவுருத்தவதற்காக எழுதப்பட்டது அல்ல. இது எந்தவிதத்திலும் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடாது. வெண்முரசு என்னும் மாபெரும் தமிழாரம் செய்யும் நுண்மதியாளரை என்மதி அளவுக்கு வைத்து இதைக் கேட்கவில்லை. இது ஒரு குழந்தையின் மனநிலையில் எழுதப்பட்டது என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ளவேண்டும்.
நன்றி
வாழ்க வளமுடன்.
ராமராஜன் மாணிக்கவேல்