Friday, July 25, 2014

தரவுகள் ஏன்?

ஜெ,
நான் ஒரு புது வாசகன். நான் வாசிக்கக்கூடிய உங்களுடைய முதல் எழுத்தே வெண்முரசு தான். வெண்முரசில் வந்துகொண்டிருக்கும் தகவல்வெள்ளம் மூச்சுத்திணறச்செய்கிறது. அஸ்தினபுரியில் உள்ள ஆயுதங்களின் வர்ணனையும் சரி, அங்குள்ள சமையலறை வர்ணனைகளும் சரி, அங்கே யானைகளும் குதிரைகளும் வளர்க்கப்படுவதும் சரிஒரு இலக்கியப்படைப்புக்கு இத்தனை தகவல்கள் எதற்கு என்று தோன்றுகிறது. இவை எல்லாம் நினைவில் நிற்குமா என்றும் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்தத் தகவல்கள் எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்லப்படுகின்றன?

அருண்

அன்புள்ள அருண்,
முதல் பதில் தகவல்கள் தேவை இல்லை என்றால் வியாசர் எதற்கு அவற்றை அளித்திருக்கிறார் என்பதுதான்.

உங்கள் புரிதலுக்காக விளக்குகிறேன். இலக்கியப்படைப்பு என்பது ஒரு நிகர் வாழ்க்கையை உருவாக்கிக் காட்டுகிறது. அதாவது நாம் வாழ்வதற்குச் சமானமான ஒரு வாழ்க்கையை நாம் கற்பனையில் வாழச்செய்கிறது.

இதை மூன்று வகையில் ஒரு படைப்பு செய்கிறது ஒன்று நாம் வாழ்வதற்கு நிகரான ஒரு புறவாழ்க்கையை அது நுட்பமாகச் சித்தரிக்கிறது. கதை நடக்கும் இடத்தை நாம் துல்லியமாகப் பார்க்கச்செய்கிறது. அங்கு நிகழும் நிகழ்ச்சிகளை தர்க்கபூர்வமாக விவரிக்கிறது.

நம் மனக்கண்ணில் பார்க்காத ஒரு இடத்தில் வாழும் அனுபவம் நமக்குக் கிடைப்பதில்லை. அதை வெறும் செய்தியாக  ‘தெரிந்துகொள்கிறோம் அவ்வளவுதான். சாதாரணமான படைப்புகளின் முக்கியமான குறைபாடு அவை மனக்கண்ணால் காணும் அனுபவத்தை அளிப்பதில்லை என்பதுதான்

எளிமையான படைப்புகள் பலசமயம் உண்மையான இடங்களைச் சுட்டிக்காட்டில் நம்மை அச்சூழலை மனக்கண்ணில் பார்க்கச்செய்கின்றன. பல நவீன இலக்கிய ஆக்கங்களின் இயல்பு அது. தி.நகர் என்று சொன்னால் நாம் சரவணா ஸ்டோர் முன்னாலுள்ள நெரிசலை கண்டுவிடுவோம். வணிக ரீதியான படைப்புகளுக்கு அவ்வளவு போதும். ஆனால் இலக்கியப்படைப்புகளுக்கு அது போதாது. அது காட்ட விரும்புவதுஉண்மையானதி.நகரை அல்ல. அந்த இலக்கிய ஆசிரியனின் கற்பனையில் உதித்த தி.நகரை. அவனுடைய உணர்ச்சிகளும் பார்வையும் ஏற்றப்பட்ட தி.நகரை.

அவ்வாறு ஒரு புறவயமான உலகத்தை வாசகனின் கண்முன்னால் காட்டவேண்டும் என்றால் நுட்பமான தகவல்கள் மூலம்தான் முடியும். ஆகவேதான் உலகின் மகத்தான படைப்புகள் எல்லாமே விரிவான தகவல்களை அளித்து புறவயமான உலகை உருவாக்கிக் காட்டுகின்றன. நீங்கள் தல்ஸ்தோயின் ஏதேனும் ஒரு படைப்பை வாசித்தால் இதைப் புரிந்துகொள்வீர்கள்.

புனைவின் இரண்டாவது இயல்பு அது உண்மையில் நாம் மனிதர்களை கண்டு பழகுவதற்கு நிகராக கதாபாத்திரங்களை நமக்கு காட்டுவது. சொல்லப்போனால் நாம் எந்த உண்மையான மனிதர்களை விடவும் இத்தகைய கதாபாத்திரங்களையே நுட்பமாக அறிந்திருப்போம்

மூன்றாவது இயல்பு கதாபாத்திரங்களின் அக உலகை, ஆழ்மனதை நமக்குக் காட்டுவது. அதன் வழியாக நாம் அந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுடனும் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். அந்தரங்கமாகப் புரிந்துகொள்கிறோம்

இவ்விரண்டும் நிகழவேண்டுமென்றால் அந்தக் கதாபாத்திரங்கள் நாம் மனக்கண்முன் காணும் அந்த உலகில் வாழவேண்டும்.

கதாபாத்திரங்கள் சமகால உலகில் வாழும்போது குறைந்த விவரணை போதும். ஏனென்றால் ஆசிரியர் சொல்வதை வாசகர்களும் கண்டிருப்பார்கள். ஆனால் முழுக்கமுழுக்க புனைவான ஓர் உலகத்தை உண்மையான உலகம்போல வாசகன் கண்முன் காட்ட நுட்பமான விரிவான தகவல்கள்தேவை

கர்ணனையோ பீமனையோ உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக உணரவேண்டும் என்றால் அவர்கள் வாழும் உலகை நீங்கள் நுட்பமாகக் கண்டாகவேண்டும். கர்ணன் கொண்டுசெல்லும் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக நீங்கள் கண்முன் கண்டால் கர்ணனை காண்பீர்கள்

தகவல்களை நீங்கள் நினைவில் நிறுத்தாமல் போனால்கூட அவற்றின் வழியாகவே நீங்கள் புனைவு உருவாக்கும் உலகத்தில் வாழ்கிறீர்கள்.
இதற்கும் மேல் இரண்டு விஷயங்கள் உண்டு. மகாபாரதம் நம் பண்பாட்டின் பெருந்தொகை. அது பாரதத்தின் நிலம், வாழக்கை, பண்பாடு அனைத்தையும் சித்தரிப்பது. ஆகவே அவையனைத்தும் தகவல்களாக அதில் வந்தாகவேண்டும்

அத்துடன் வெண்முரசில் வரும் கணிசமான தகவல்கள் குறியீடுகளும் கூட. ஒருபக்கம் அவை தகவல்கள். இன்னொரு பக்கம் அவை சொல்லப்படாத பலவற்றை உணர்த்துகின்றன

ஜெ