Wednesday, July 9, 2014

அறம்

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். என் பெயர் ஸ்ரீநிவாஸ். கடைசி இரண்டு வருடங்களாக உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். சென்ற வருடம் கூட உங்களை திருச்சியில் சந்தித்தேன். அப்போது ‘காடு’ ‘அறம்’ மட்டுமே படித்த ஸ்ரீநிவாஸ் நான். பேசவேண்டும் என நூறு விஷயங்கள் கொண்டு வந்த போதிலும்  என் பழக்கரீதியே வெளிப்பட்டது. வழக்கமான, யாருக்கும் தன்னைக் காட்டிக் கோள்ளாத என் அமைதியான பதற்றம் உங்கள் அருகிலேயே முழுப் பதற்றத்துடன் அமர்ந்திருக்கவைத்தது. இப்பொழுதோ உங்களுடன் பேச ஆயிரம் விஷயம் இருப்பதாகப் படுகிறது, ஆனால் சந்திக்கத்தான் கூடவில்லை. படைப்பு போட்டு புரட்டியெடுக்கும் சில கணங்களில் பேசாமல் கிளம்பி நாகர்கோவிலுக்கு போய்விடுவோமா எனகூடத் தோன்றும். ஆனால், பக்கத்து வீட்டிற்குள் நுழையவே வெட்கப்படும் என் மனம் வெண்முரசுக்கு இடையில் நுழைய ஒப்பவில்லை. உதகை இலக்கிய கூட்டமும் நான் நுழைவதற்குள் கதவடைத்துக்கொண்டது. பெரும் ஏமாற்றம். ஜெயமோகன் மீண்டும் ஒருமுறை திருச்சி வரவேண்டும் அல்லது அவர் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு திருச்சியில் கல்யாணம் நிகழ வேண்டுமென எண்ணிக்கொண்டு பெருநெறியை அண்ணாந்து பார்க்கிறேன்....
என் மனம் லயித்து ஒன்றிப்போன படைப்பெனில் அது கொற்றவைதான். அடுத்து வெண்முரசு. இணையத்தில் நாள் விடாமல் படித்தது போக, இப்போது முதற்கனல் செம்பதிப்பை வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் வாசிப்பில் விடுபட்ட பல விஷயங்கள் இப்போது கைகூடுகிறது. உதாரணத்திற்கு- தட்சனுக்கு பிறக்கும் இபத்துநான்கு பெண் குழந்தைகள். ஸாங்கிய யோகத்தில் உள்ளதும் இருபத்துநான்கு தத்துவங்கள். கடைசியாக மனம் தோன்றுவது போல் தட்சாயணி. முதற்கனலை மெதுவாக ஒரு அவசரமும் இன்றி அசைபோட்டு வந்தபோது சிபியின் கதை பெரும் அதிர்வை உண்டாக்கியது. சிபியிடம் சித்ரகன் சொல்லுமே “இந்த புறா பல புழுக்களை உண்டுள்ளது, அதை நான் உண்பேன், என்னை மண் உன்னும், இப்படி எல்லாம் உருவழிந்து உருகொண்டு நிகழ்வதே பிரபஞ்ச இயக்கமல்லவா?” என்று. (இக்கேள்வியை முதல் வாசிப்பில் எப்படி கவனிக்காமல் கடந்து சென்றேனோ தெரியவில்லை) அதையும் மீறி சிபி “முடியாது, என் ஷத்ரியதர்மம் இதை அனுமதிக்காது” என்கிறான். படித்தவுடன் மனம் ஏதோ பெரிதான விஷயம் ஒன்றை உணர்ந்து கொண்டது என்று மட்டும்தான் பட்டதே ஒழிய, என்னை நானே தொகுத்துக் கொள்ள சிறிது நேரம் ஆனது......  சிறப்புண்மையும் பொதுவுண்மையும் இயைந்து போகிறது. சிறப்புண்மையை தன்னில் கொணட கேள்விக்கு, பொதுவுண்மைகளில் மகத்தான அறம் பதிலாகிறது. அன்று முழுவதும் என்னுடனேயே இருந்தனர் சிபியும் சித்ரகனும். மனம் படிப்பில் லயிக்க வில்லை. அன்று இரவு வீடடைந்தபோது  ‘அறம்’ சிறுகதையை வாசிக்க வேண்டும் என ஏனோ தோன்றியது. கதையை இரண்டாவது முறையாக வாசிக்கிறேன். கண்ணில் நீர் முட்டி நின்றது. அளவைநெறியற்று மனம் மீண்டும் மீண்டும் கதையை உருபோட்டது. செட்டிச்சி அறத்துக்கான ஒரு ஆழ்படிமமாகிப்போனாள். ‘செட்டி குலமறுத்து செம்மண் மேடாக்கி எட்டி எழுகவென்றறம்’ ‘மெட்டி ஒலி சிதற மெய்யெல்லாம் பொன்னாக செட்டி குளவிளக்கு செய்த தவம்’...... அம்மாவிற்கு ஒருமுறை வாசித்துக்காட்டினேன். நிறுத்தி குமுறலை அடக்கித்தான் வாசிக்கவேண்டியதாயிருந்தது. அறத்தை உணரமுடிந்தது. உலகம்யாவையும் கவர்ந்திடப் பொழியும் பெருமழை, திரண்டு ஒற்றை பெரும் நீர்க்கவளமாவதுபோல், அன்று முழுவதும் அடித்த மன அலைகள் அறம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்கிப்போனது. இனி எங்கும் மனம் அறத்தை தேடப்போகிறது. நன்றி. உங்களுட எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்துள்ளேன்.... 
                                          இப்படிக்கு,
சந்திக்கக் காத்திருக்கும் வாசகன்,
                                     ஸ்ரீநிவாஸ்


அன்புள்ள சீனிவாஸ்

சந்திப்போம்
அறம் எழும் கணங்கள் எல்லாமே நம்முள் அவை இருப்பதை நாம் உணரச்செய்கின்றன

ஜெ