அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தற்பொழுது பாம்பே ஹை ஆயில் ஃபீல்டில் கடல் நடுவில் எண்ணைக் கிணறுகளை உருவாக்கும்Off Shore Oil Rig - ல் Marine Radio Officer ஆக பணிபுரிகிறேன்.
உங்களின் கொற்றவை படித்து அதன் கவித்துவமான நடையிலும், சொல்லிய விதத்திலும் இருந்துவிடுபட்டு வெளிவர ரொம்ப நாட்கள் ஆனது..எனவே வெண்முரசை படிக்காமல் ஒத்தி வைத்திருந்தேன்.
வேலை நேரத்தில் Rig System தில் படிக்க முடியாததால் நேற்று, வெண்முரசு நூல் ஒன்று - முதற் கனல் - 25 அத்தியாயங்களை Print எடுத்து , வேலை நேரம் முடிந்ததும் இரவே படிக்க ஆரம்பித்தேன்.. 25அத்தியாயங்களை படித்து முடித்தேன்.. அற்புதம்.. அற்புதம்..
உடனே உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.. ஆனால் மணி இரவு 11:45 ஆகிவிட்டிருந்தது.
இத்தனை மாதங்களாய் படிக்காமல் விட்டது வருத்தமாய் இருந்தது.. இனி தொடர்ந்து படித்து விடுவேன்.
நீங்கள் எங்கிருந்தோ ஒரு பெரு வரம் பெற்றிருக்கிறீர்கள்.. இல்லையெனில் இவை சாத்தியப்பட்டிருக்காது.. எத்தனை பெரிய சாதனை இது!!..
மனதுள் ஒரு பெரும் பிரார்த்தனை உங்களுக்காய் ஓடுகிறது... மனதளவிலோ, உடலலளவிலோஎக்குறையும் வராமல் நீங்கள் இந்த சாதனையை செய்து முடிக்க வேண்டும்.. மொத்தத் தொகுப்பையும்என் பிற்கால சந்ததியினருக்கு நான் சம்பாதித்ததிலேயே , விலைமதிப்பற்ற மிகப்பெரும் சொத்தாகபரிசளித்து செல்லவேண்டும்.
உங்களைப் பற்றி Face Book கிலும், Twetter லும் பலர் தாறுமாறாக எழுதுவதைப் படிக்கையில் அவர்கள்மீது எனக்கு பரிதாபம் தோன்றும்.
தங்களால் இயலாததை, ஜெயமோகன் இலகுவாக செய்து முடித்து, அடுத்ததற்கு நகர்வதனைபொறுக்க முடியாத ஆதங்கத்தின், ஆற்றாமையின், வயிற்றெரிச்சலின் குரல்கள் அவர்களின்உள்ளிருந்து வெளிவருவதனை நல்ல ஒரு வாசகனால் எளிதில்ப் புரிந்துகொள்ள முடியும்.
அவர்கள் தங்கள் பெயரினை வாசகர்கள் மத்தியில் பிரபலப் படுத்த, உங்கள் பெயரினை உபயோகப்படுத்துகிறார்கள்.
ஒரு பதிவை விரட்டிப் படித்துப் போகையில் அப்பதிவில் இடையே 'ஜெயமோகன்' என்ற பெயர்வந்தால்.. அப்பதிவு நிதானமாக அனைவராலும் வாசிக்கப்படும் என்பதனைப் புரிந்து வைத்துஅவர்கள் ஆடும் ஆட்டம் இது. வெற்றுப் பாதங்கள் ஆடும்.. ஆனால் சப்தம் சலங்கைகளுக்கு மட்டும்தானென்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உங்களுடன் பத்மநாபபுரத்தில், புத்தனாற்றின் கரையோரம், வேளிமலை அடிவாரம் பிரேமானந்தனும்,நானும் பேசி நடந்த நாட்கள் நினைவில் பசுமையாக இருப்பினும்... இன்று பிரேமானந்தன் இறந்த தினம்எனும் சோகமும் கவிகிறது.
அஜிதன், சைதன்யா மற்றும் அருண்மொழி மேடம், அனைவரிடமும் என் அன்பை தெரியப் படுத்துங்கள்.
ஊருக்கு வரும்போது வந்து பார்க்கிறேன்.
தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன். நூல் ஒன்று முதற்கனல் முழுவதும் வாசித்தபின்பு எழுதுகிறேன்
நன்றி கலந்த வாழ்த்துக்களுடனும், அன்புடனும்
பத்மநாபபுரம் அரவிந்தன்
அன்புள்ள அரவிந்தன்,
முதற்கனல் வாசிப்பதை அறிந்து மகிழ்ச்சி. அதை எழுதும்போது எனக்கு பௌதிக எல்லைகளுக்கு உட்பட்ட இச்சிறு உலகிலிருந்து வெளியே சென்ற உல்லாசம் இருந்தது. இவ்வுலகமே மிகப்பெரியதாகத் தெரிந்தது. அதுவே எழுதச்செய்யும் ஈர்ப்பாக உள்ளது
நேற்று பவா அழைப்பின் பேரில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். பயணம் நடுவிலும் விடாது எழுதிக்கொண்டிருந்தேன். அந்தக்கனவிலிருந்து இறங்குவது எளிதல்ல
அக்கனவே உங்களுக்கும் நீடிக்கட்டும்
ஜெ