Saturday, August 17, 2019

நுதல்விழி


அன்புள்ள ஜெ

அஸ்வத்தாமனின் நெற்றிக்கண் ஒரு அற்புதமான படிமம். அவனுடைய மணியைப்பற்றி மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது. ஆனால் அதை பாம்பின் மணிக்கும் சிவனின் நெற்றிக்கண்ணுக்கும் சமானமான ஒன்றாக ஆக்கிக்கொண்டது ஒரு அருமையான கற்பனை.

பாம்பின் விஷம்தான் மூத்து மூத்து ஒளிகொண்டு கடைசியில் மணியாக ஆகிவிடுகிறது. சிவமே யாம் [சிவோஹம்] என்று மந்திரம் சொல்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். அவனுக்கு நெற்றிக்கண் முளைத்துவிடுகிறது. பலமுறை சிவன் வந்து அஸ்வத்தாமனை யோகமுழுமை நோக்கிக்கொண்டுசெல்ல முயல்வதாக வருகிறது. ஜல்பன் அவனை கடைசிக்கணத்தில் கலைத்துவிடுகிறான்.

அஸ்வத்தாமனை ஒரு ருத்ரன் என்று காட்டியதனால்தான் கடைசியில் அந்த ருத்ர தாண்டவம் அவ்வளவு பயங்கரமாக உள்ளது

ஜெயக்குமார்