ஜெ
துரியோதனன் சுனையின் ஆழத்தில் சந்திக்கும் வஜ்ரயோகினி பௌத்த மரபில் வஜ்ரயோகத்தின் வழிகாட்டி. அவளை கொலைவெறிகொண்டவளாகவும் காமவெறி கொண்டவளாகவும் ஆயிரம் கைகள் கொண்டவளாகவும் பௌத்த சிற்பங்கள் காட்டுகின்றன. வஜ்ராயன மார்க்கத்தில் அவள் முக்கியமானவள். புத்தர் அவளை மடியில் புணர்ந்துகொண்டிருப்பார். அவள் ஒருகையில் அமுதும் இன்னொரு கையில் வஜ்ராயுதமும் வைத்திருப்பாள். வஜ்ரம் என்றால் மின்னல். அவளைத்தான் வெண்முரசில் குறிப்பிடுகிறீர்கள்
“ஒவ்வொருவரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் கனவுகளை அவள் ஆள்கிறாள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நூறு நூறாயிரம் வாயில்களைத் திறந்து வழிசுழற்றுகிறாள். விழைவனவற்றை அருகே நிறுத்தி கைநீட்டுகையில் அணுக முடியாது விலக்கி விளையாடுகிறாள். பொருளென்றும் வெறுமை என்றும் மாறிமாறிக் காட்டி உளமயக்குகிறாள். அவளை அணுகுபவர்களில் பல்லாயிரம் கோடியினரில் ஒருவரே அவர்கள் அருளை கொள்கிறார்கள். அவர்களையே ராஜயோகி என்கிறோம்.
வஜ்ரயோகம்தான் பின்னாளில் ராஜயோகம் என்று சொல்லப்பட்டது. அது சாமானியர்களுக்கு உரியது அல்ல. ராஜஸ குணம் நிறைவுபெற்ற அரசர்கள் மற்றும் மாவீரர்களுக்கு உரியது. பத்மசம்பவர் அரசர் ஆனதனால் அந்த வழியை தேர்வுசெய்து வஜ்ரமார்க்கத்தை உருவாக்கினார். துரியோதனன் என்ற அரசனும் அந்த வழியைத்தான் தெர்வுசெய்ய முடியும்.
மூன்று மாயைகளை அவர் வெல்கிறார். இரண்டாகப் பிளந்த இருப்பு இன்மை என்னும் மாயை. மூன்றாகப் பிளந்த காலம் என்னும் மாயை. அறம்பொருளின்பவீடு என்று நான்காகப் பிளந்த உலகியல் என்னும் மாயை. அவர் ஒருமையின் பீடத்தில் அமர்ந்தவர்.”
என்று அந்த யோகத்தின் உச்சநிலையும் சொல்லப்படுகிறது. நாவலில் பின்னர் வஜ்ர யோகினி கொடூரமான பேய் வடிவத்தில் வெளிப்படுகிறாள்
சாரங்கன்
