Sunday, August 25, 2019

பிரஜாபதி




துரியோதனன் சிதையில் ஏற்றப்படும்போது வரும் காட்சி. கிருதவர்மன் கால்மடித்து அமர்ந்து கைகளை விரித்துவிண்புகுக தேவா! பெருந்தந்தையர் சென்றமையும் உலகில் வாழ்க! பிரஜாபதிகளுடன் அமர்க!” என்று கூவினான் என்ற வரியை வாசித்தபோது ஓர் உணர்வெழுச்சி ஏற்பட்டது. கிருதவர்மன் துருயோதனனை ஒரு பிரஜாபதியாக காண்கிறான். 

வெண்முரசில் பல பிரஜாபதிகள் வருகிறார்கள். ஆனால் முக்கியமான பிரஜாபதி தீர்க்கதமஸ்தான். அவரை காமம் நிறைந்தவர் என்கிறது வெண்முரசு. பிரஜாபதிகள் உலகைப் படைப்பவர்கள். ஏன் உலகை அவர்கள் படைக்கிறார்கள் என்றால் அந்தளவுக்கு அவர்களிடம் ஆசை இருக்கிறது. அது காமம், அல்லது மண்ணாசை அல்லது குழந்தைகள் மேல் ஆசை. அந்த ஆசைதான் அவ்ர்களிடம் அன்பாகவும் வெளிப்படுகிறது. அவர்களிடமிருந்து அதுதான் முளைத்துப் பெருகி வளர்கிறது.

துரியோதனன் இன்றுவரை மண்ணில் செய்யப்பட்டு வணங்கப்படும் பிரஜாபதியாகவே இருக்கிறான். காரணம் அவனுடைய மண்ணாசைதான் அவனை பிரஜாபதியாக ஆக்குகிறது. அவனைப்போன்ற தந்தையை நாமும் கண்டிருப்போம். என் தாத்தா அப்படித்தான். மண்மீது அவருக்கிருந்த வெறியை கற்பனையே செய்ய முடியாது. மண்ணுக்காகவே வாழ்ந்து செத்தார். அவரை பங்காளி வெட்டிக்கொன்றான். நான் அவரைப் பார்த்த ஞாபகமே மங்கலாகத்தான். அவரைப்போன்ற பிரஜாபதிகள் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஆகவேதான் அவன் சாகும்போது நமக்கு அத்தனை ஒரு வருத்தம் ஏற்படுகிறது.