Friday, August 16, 2019

வெண் முரசு - கர்ண ரகசியம்



அன்புள்ள ஜெ.

வெண்முரசு  அத்தியாயங்கள் படித்து வருகிறேன்.

கர்ணனின் பிறப்பு பற்றிய ரகசியம் பற்றிய என் சிந்தனை இது.

பொதுவாகப் பிற நூல்களிலும், திரைப்படங்களிலும் கர்ணனின் பிறப்பு பற்றிய ரகசியம் கண்ணன் போன்ற வெகு சிலருக்கு மட்டும் தெரிந்த ஒன்றாகவும், பின் குந்தியின் வரம் வாங்கும் சந்திப்பிற்குப் பின் கர்ணனுக்கும் தெரிவது போலவும் சித்தரிக்கக் கனண்டிருக்கிறேன்.கர்ணனின் மறைவுக்குப் பின் குந்தியே அதைப் பிரகடனப் படுத்துவது போலவும் , பாண்டவர்கள் அப்போது அதை முழுதுணர்ந்து வருந்துவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

வெண் முரசில் நான் கிரகித்தது, கர்ணனின் பிறப்பு ரகசியம் துரியோதனன் உட்பட பலருக்கும் (வெளிப்படையாகச் சொல்லாவிடினும்) தெரிந்த்திருக்கிறது எனும் தோற்றம். குந்தி கர்ணனை சந்தித்து பற்றி கௌரவர்களுக்குக் கிடைக்கும் செய்தியும் அதை ஒட்டிய உரையாடல்களிலும் இது வெளிப்படுகிறது.

பாண்டவர்கள் தரப்பிலோ அர்ஜுனனும், தருமரும் கர்ணனுக்குள் தங்கள் அம்சத்தை உணரும் அக வெளிப்பாடுகள் மட்டுமே நாம் காண்பது.

கர்ணனின் மறைவுக்குப் பின்னும் அவன் பிறப்பு பற்றிய வெளிப்படையான பிரகடனம் நிகழவில்லை.

இதில் ஏதோ ஓர் கண்ணி விடுபட்டது போல் தோன்றுகிறது. இது பற்றி தங்கள் கருத்தை  அறிய விரும்புகிறேன்.

மகாபாரதத்தை உங்கள் மகனின் சிறு வயதில் ஓர் இரவில் கதையாகச் சொல்லியதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். 

மகாபாரதம் நீங்கள் பல நேரம் குறிப்பிட்டது போல காலப்போக்கில் பல வடிவங்கள், மாறுபட்ட கற்பனை, சம்பவங்களுடன் வந்திருக்கலாம். 

ஆனால் மூலக்கூறான விஷயங்கள் மாறாமலிருப்பது அவசியமல்லவா.  வெண்முரசு எழுதும்போது இதற்கான எல்லைக்கோடு என ஏதும் நீங்கள் வகுத்துக்கொண்டீர்களா.

மனதில்  தோன்றியதை அப்படியே எழுதி விட்டேன்.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்