Sunday, August 11, 2019

மகாபாரதமும் வெண்முரசும்




திரு ஜெயமோகன்,

தங்கள் வெண்முரசு தொடர்ந்து படித்து வருகிறேன். முழுமையான படைப்பு

அ இது வியாச பாரதம் தாண்டி பல கதைகள் கொண்டுள்ளது. இந்தக் கதைகளின் மூலம் என்ன?

. குந்தியின் ராஜ்ய ஆசை பற்றி எங்கேனும் குறிப்புகள் உண்டா


. பாண்டவர்களின் யுதிஷ்டிரன் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்


 திருதராஷ்டிரன் , துரியோதனன் பொறாமை கொண்டவர்களாக பாரதம் சொல்கிறது. தங்களின் பார்வையில் அவர்கள் மேலோங்குகிறார்கள். அது ஏன்?


பதில்களுக்கு காத்திருக்கிறேன்
 நன்றி

இப்படிக்கு,

தேவநாதன்

அன்புள்ள தேவநாதன்

இது புராண மறுஆக்கம் அல்ல. நாவல். நாவல் என்பது நவீன கலை. இன்றைய வாழ்க்கையில் மகாபாரதம் கூறும் மதிப்பீடுகளின் இடமென்ன என்பதை ஆராய்வது இதன் நோக்கம். இன்றைய வாழ்க்கையைச் சொல்ல மகாபாரதக் குறியீடுகளைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு நோக்கம்

மகாபாரதக் கதைகள் பலவேறுபாடுகளுடன் பிறகு வந்த புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.தேவிபாகவதம் வரை வேறுபட்ட வடிவங்கள் உள்ளன. வியாசபாரதமும், பிற புராணங்களும் இதன் மூலநூல்கள். ஆனால் அக்கதைகளை திரும்பிச் சொல்வது அல்ல இதன் வழி. அவற்றை மீண்டும் விரிவாக்கி இன்றைய வாழ்க்கையை நோக்கி வருவதுதான். ஆகவே மூலம் என்பது உறுதியாக எதுவும் இல்லை

மற்றபடி உங்கள் கேள்விகளுக்கான விடைகளை வெண்முரசிலும் மகாபாரதத்திலும்தான் தேடவேண்டும். அவ்வாறு தேடவைப்பது இந்நாவலின் பணி.

நீங்கள் எண்ணுவதுபோல குந்தியோ அல்லது கௌரவர்களோ ஒற்றைப்படையான வடிவில் மூலக்கதையிலேயே இல்லை. மகாபாரதக்கதைகள் மக்கள் விரும்பும் அரங்ககலைகளுக்காகவும் குழந்தைகதைகளுக்காகவும் எளிமையாக்கப்படும்போதே அப்படிப்பட்ட ஒற்றைவடிவம் உருவாகிறது

ஜெ